Tuesday, September 4, 2012

போக்குவரத்து நெரிசல்களுக்கு புதுப்புது மேம்பாலங்கள் தீர்வாகுமா?


                                                                                                                      -சாவித்தரிகண்ணன்
சாலைகள் நிறைந்த வாகனங்கள்...
சாரிசாரியான அணிவகுப்புகள்..
எங்கெங்கும் போக்குவரத்து நெரிசல்கள்...
சிக்கித் தவிக்கும் வாகனங்கள் போக்குவரத்துப் பிரச்சனைகளைச் சமாளிக்க புதுப்புது திட்டங்களைத் தீட்டிக்கொண்டே இருக்கிறது அரசாங்கம்...!

இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக முதல்வர் 231கோடி 68லட்சத்தில் சென்னை பெருநகரில் மேம்பாலங்கள், நடைபாலங்கள் கட்டுவதற்கு நிதி அறிவித்துள்ளார்.

கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றால் போக்குவரத்து நெரிசல் சமாளிக்கப்பட்டதாக சொல்லமுடியவில்லை.

நமதுநாட்டில் தங்கள் கார்களை விற்பனை செய்யும் வெளிநாடுகள் மற்றும் உலகவங்கியின் அளப்பரிய கடனுதவிகளால் கட்டப்பட்டுவரும் மேம்பாலங்கள் சில விபத்துகளுக்கும் காரணமாகின்றன.
மேம்பாலம் கட்டப்படும் இடங்கள் சாலை சிறதாகி, நடைபாதைகள் இல்லாமல் போகும் அவலங்கள் அரங்கேறுகின்றன.

இதேபோல் ஆங்காங்கே அறிவிக்கப்படும் ஒரு வழிப் போக்குவரத்து பாதைகளால் செல்லும் இடங்களின் தூரங்கள் அதிகமாவதும், எரிப்பொருள் விரயங்களுமே வாகன ஓட்டிகளின் அனுபவமாயுள்ளது. இதோடு 'ரிங்ரோடு' என்ற சுற்றிச் சுற்றி நீண்டதூரப் பயணங்கள்...!

இவையெல்லாம் தொலைநோக்கோடு நகரவளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படாததால் ஏற்பட்ட விளைவுகள்!
அதுவும் குறிப்பாக விரிவான சாலைகள் எட்டுதிக்குகளிலும் ஏற்படுத்தப்படாமல் ஏனோ, தானோவென்று நகரவிரிவாக்கம் நடைபெற்றுக்கொண்டுள்ளன!
அதுவும் கடந்த 10,12 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வாகன பெருக்கம் நிகழ்ந்துள்ளது.

2000ஆம் ஆண்டு சென்னையில் ஓடிய இரு சக்கர வாகனங்கள் - 8,50,000
தற்போது 2010-ல் சென்னையில் ஓடும் இரு சக்கர வாகனங்கள் - 28,000
அதே போல் 2000ஆம் ஆண்டில் சென்னையில் ஓடிய கார்கள் 2,00,000 தற்போது ஓடிக்கொண்டிருக்கும் கார்கள்- 6,00,000.

சென்ற நிதி ஆண்டில் மட்டும் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட புதியவாகனங்கள் 17லட்சம்! இந்த வகையில் தமிழகத்தில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடியை தாண்டிவிட்டது!
இவற்றில் 99% தனியார் வாகனங்கள் தான்!

சென்னையில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் 38லட்சம் வாகனங்களில் மாநகரப்போக்குவரத்து கழக பேருந்துகளின் எண்ணிக்கை 3421மட்டுமே அதாவது ஒரு சதவிகிதம் கூட இல்லை!
ஆனால் இதில் தான் 50லட்சத்துக்கு 52ஆயிரம் மக்கள் நாளும் பயணிக்கிறார்கள்!

அதாவது சாலைகளின் பயணப்படும் 90%க்கு மேற்பட்ட மக்கள் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக ஓடுகின்ற அரசு பேருந்துகளையே நம்பி உள்ளனர்!

ஆக, அரசு பேருந்துகளின் பற்றக்குறையே தனியார் வாகனபெருக்கத்திற்கு தலையாய காரணமாகியுள்ளது. குறிப்பாக வாகனங்களில் 82 சதவிகிதத்தில் அதிகமானவை இருசக்கரவாகனங்கள் என்பது கவனத்திற்குரியதாகும்!
அதற்கடுத்த நிலையில் கார்கள்!

பிரட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலே கூட அரசுவாகனங்களே அதிக மக்கள் பயணப்படும் வண்ணம் மெட்ரோ, டிராம், பேருந்து, சிறுகப்பல்கள் என வியாபித்துள்ளது.

சிங்கப்பூரிலே கார்களின் பெருக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இவற்றை பாடமாகக் கொண்டு தமிழ்நாட்டில் அரசுபேருந்துகளை அதிகப் படுத்துவதோடு சிறிய பேருந்துகள், வேன்களைக் கூட அதிகப்படுத்த வேண்டும்!
கார்கள் பெருக்கத்தை தடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கலாம்!
இத்துடன் தற்போது கட்டப்பட்டுவரும் மெட்ரோ ரயில் திட்டங்களான 24 கி.மீ வண்ணாரப்பேட்டை தொடங்கி அண்ணாநகர் வழி பரங்கிமலை வரையிலானதுமான இரு திட்டங்கள் மிகவும் வரவேற்கத்தக்கவை!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
JULY

No comments: