Wednesday, September 12, 2012

விலை ஏற்றத்தால் விவசாயிகள் பலனடைகிறார்களா?

-சாவித்திரிகண்ணன்
 
"அரிசி, பருப்பு, கோதுமை காய்கறிகள் விலைகளெல்லாம் மிகவும் அதிகரித்துவிட்டனவே..." என்ற கேள்விக்கு,
 
"நல்லது தானே, இதனால் விவசாயிகள் பலனடைகிறார்களே! அதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்" இப்படி பதிலளித்து, தற்போது பல தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் சந்தித்து வருகிறார் மத்திய அமைச்சர் பெனிபிரசாத்! எதிர்கட்சிகளனைத்தும் எம்பி குதித்து, அவரை தாக்கி தீர்க்கின்றன.
 
"விலைவாசி உயர்வால் சாதாரணமக்கள் விழிபிதுங்கி கொண்டிருக்கையில் அமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல் பேசுகிறார்.." என்பது எதிர்கட்சிகள் எதிர்பபின் சாராம்சம்!
விலைவாசி ஏற்றத்தால் விவசாயிகள் கடுகளவும் பயன்பெறவில்லை என்பதோடு இதில் யாரைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகள் தாம் என்பதை ஆளும்கட்சி அமைச்சர் மட்டுமல்ல, ஆண் கட்சிகளான எதிர்கட்சிகளும் உணரவில்லை என்பதே உண்மை!
 
விவசாய விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயிக்கும் சுதந்திரத்தை இதுவரை சுதந்திரமடைந்த இந்தியா தன் விவசாயிகளுக்கு வழங்கவில்லை! இப்படி இருக்க, ஏறிக்கொண்டிருக்கும் விலை ஏற்றத்தால் ஏற்றம் பெறுவது யார் என்பது சொல்லாமலே விளங்கும்!
 
கடந்த ஒராண்டில் உரவிலை 100சதவிகிதம் உயர்ந்துள்ளது, ஆனால் நெல் கொள்முதலே குவிண்டாலுக்கு அதே 1,100தான்! உரவிலைகள் ஏன் உயர்கின்றன? உரக்கம்பெனிகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி மானியம் வழங்குவதோடு, உரவிலையை அவர்களே நிர்ணயிக்கும் உரிமையையும் அரசு விட்டுக்கொடுத்ததே காரணமாகும்!
 
இந்தியாவில் இப்போது விவசாயிகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளைப்போல் முன்னெப்போதும் அனுபவித்ததில்லை. அதனால் தான் 10 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆளும் தரப்புகளின் ஒவ்வொரு அசைவுமே விவசாய நலன்களுக்கு எதிராகவே உள்ளன என்பது தான் மிகப்பெரும் துரதிஷ்டம்!
 
'காடுவெளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்' என்பது அந்த காலத்து நிலைமைகளைக் கூறும் பட்டுக்கோட்டையின் பாடல்வரிகள தற்போது கடன் தான் மிச்சம்! அந்தக் கடன்தரும் அச்சமே தற்கொலைகள்!
 
இந்த ஆண்டு பருவமழை பொய்த்தால் சோலைவனமான விவசாய பூமியெல்லாம் பாலைவனமாகிக்கொண்டுள்ளன. கடந்த இரண்டாண்டில் தஞ்சை தரணியில் மட்டுமே 40சதவிகிதம் தரிசு நிலங்கள் கூடியுள்ளன. பத்தாண்டுகளில் நிலத்தடி நீர் 50அடிகள் குறைந்து பாதாளத்திற்கு போய்விட்டது...!
பருவமழை பொய்த்தால் தென்னிந்தியா தீய்ந்து போகிறதென்றால்..., வட இந்தியாவில் வறண்ட பூமியில் வாழ்க்கையை தொலைத்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளையெல்லாம் கசாப்பு கடைகளுக்கு அனுப்பி பசிக்கொடுமைக்கு பரிகாரம் தேடுகின்றனர்...!
 
'அதனால் என்ன?' என்ற போக்கில் கழனி நிலங்களெல்லாம் தற்போது கார்பரேட் கம்பெனிகளின் வசமாகிவருகின்றன! இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடந்தையாக செயல்படுகின்றன... என்பது சோகத்திலும் சோகம் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசியவிவசாயிகள் ஆணையம் சமீபத்தில் ஒரு முக்கிய பரிந்துரையை அரசுக்கு வழங்கியுள்ளது. அது,
 
"இந்தியாவில் வேகமாக வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயத்தை மீட்டெடுக்க ஒரே வழி, வெயில், மழை, பணி போன்ற இயற்கை இடர்களை சமாளித்து கடும் உழைப்பை ஈந்து விவசாயிகள் தரும் உற்பத்தி பொருட்களில் மொத்த செலவை கணக்கிட்டு அதற்கு மேல் 50 சதவிகிதம் கூட்டி அவர்களுக்கு வழங்கவேண்டும்" என்று ஆழமாக வலியுறுத்தியுள்ளது.
 
மத்திய அரசு தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரையை முதலில் அமல்படுத்தவேண்டும். அப்போது தான், "விவசாயிகள் பலனடைகிறார்களே" என்ற வார்த்தையை உகுக்கும் அருகதையை அமைச்சரோ, அரசோ பெற முடியும்! விவசாயிகள் பலன்பெறுவதை எதிர்க்க எந்த எதிர்கட்சிக்கு துணிச்சல் வருகிறது என்று அப்போது பார்த்துக் கொள்ளுங்கள்!
 
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
20-8-2012

No comments: