Wednesday, September 12, 2012

விவசாயக்கடன்களும், தற்கொலையாகும் விவசாயிகளும்

-சாவித்திரிகண்ணன்
 
கேட்பதற்கே பிரமிப்பாகத் தான் இருக்கிறது.
 
நமது மத்திய அரசு நடப்பு நிதியாண்டுக்கு ரூபாய் 5லட்சத்து 75ஆயிரம் கோடிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அடேயப்பா... விவசாயிகள் மிது மத்திய அரசுக்குத்தான் என்னே ஒரு கரிசனம்! சும்மா சொல்லக் கூடாது - விவசாயிகளுக்கு அரசு கொடுக்கும் கடன்கள் கொஞ்ச நஞ்சமல்ல!
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004 -ல் விவசாயிகளுக்கு வழங்கியகடன் 1லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய்! இது படிப்படியாக ஆண்டுக்காண்டு அதிகரித்து 2011-12-ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 75 ஆயிரம்கோடியானது. அடுத்த ஆண்டு இதை 6 இலட்சம் கோடிகள் என அதிகரிக்க இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். நல்லது! ஆனால் ஆண்டுக்காண்டு விவசாயிகளுக்கென மத்திய அரசு தந்து கொண்டிருக்கும் கடன் தொகை அதிகரிப்பது போலவே விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரிக்கின்றனவே?
 
1997களில் தொடங்கி 2012 வரைக்குமான விவசாயிகளின் தற்கொலைகள் இரண்டரை லட்சம் என்ற இலக்கை எட்டியுள்ளதே...?
 
மத்திய அரசு விவசாயிகளுக்கு தருவதாக கூறும் கடன்களால் விவசாயிகளில்
 
  • தற்கொலைகள் ஏன் தடுக்கப்படவில்லை?
  •  விவசாய உற்பத்திகள் ஏன் அதிகரிக்கவில்லை?
  •  விவசாயிகளின் பிரச்சினைகள் ஏன் குறையவில்லை?
எனில் கொடுக்கப்படும் கடன்களால் சமூகத்தில் ஏற்பட்ட விளைவுகள் தான் என்ன? இவை எதையும் கவனத்தில் கொள்ளாமல், பரிசீலிக்காமல் ஆண்டுக்காண்டு கடன் அள்ளி கொடுக்கப்படுகிறதே எதனால்?
 
இந்திய விவசாய சந்தையில் சர்வதேச நிதி நிறுவனங்கள் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கும் வீரியவிதைகள், B.Tபருத்தி போன்ற மலட்டு விதைகளை வாங்குவதற்காகவா?
அந்த விதைகளுக்கு உகந்த அதிக நச்சுதன்மை வாய்ந்த ரசாயண உரங்களை நமது நிலங்களில், பயிர்களில் கொட்டுவதற்காகவா?
 
இதற்கடுத்து இத்தகைய பயிர்களை நோக்கி ஈர்க்கப்படும் பூச்சிகளை கொல்ல எனக்கூறி விவசாயிகளிடம் திணிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்குவதற்காகவா?
 
இந்த மண்ணில் தற்கொலைசெய்து சாய்ந்துள்ள விவசாயிகளின் சரித்திரமெல்லாம் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளில்லவா முடிக்கப்பட்டிருக்கிறது?
இவை வாங்கியதால் ஏற்பட்ட கடன்களல்லவா அவன் உயிரை காவுகேட்கிறது? எனில் விவசாயிகளுக்கு தேவை கடனா? கடன்பெற்று, கடன்பெற்று நெஞ்சம் கலங்கி தங்கள் கதைகளையே முடித்துக் கொள்கிறார்களே...! உங்கள் வங்கிகள் தரும் கடன்களுமே கூட விவசாயத்தின் பேரால் தொழில் அதிபர்களுக்கும், பெரியவசதிபடைத்த விவசாயிகளுக்கும் தானே தரப்படுகிறது, எளிய விவசாயிகள் வங்கிகளை நெருங்கக் கூட முடியாமல் கந்துவட்டி கொடுமையில் அல்லவா கலங்கிச் சாகிறார்கள்?
 
விவசாயத்தை வீழ்த்தியது அரசாங்கத்தின் கொள்கைகளே! அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான அணுகுமுறைகளே! விவசாயி வேண்டுவதெல்லாம் கடன்களற்ற விவசாயச் சூழல்களைத்தான்!
 
நாற்பதாண்டுகளுக்கு முன்பு வரை விவசாயச் சூழல்கள் நம்பிக்கைக்குரியதாகத்தான் இருந்தது! அன்று உழைப்பு மட்டுமே விவசாயத்தில் அவனது முதலீடாக இருந்தது! முந்திய அறுவடையில் எஞ்சிய நெல்லும், சுற்றுப்புறத்திலுள்ள இழை, தளைகளும் அவன் வளர்க்கும் ஆடு, மாடுகளின் கழிவுகளும் உரக்களாயிருந்தன! எந்த பூச்சிகளையும் கொல்ல அவன் நினைத்தது கூட இல்லை! வேப்பந்தளைகளையும் இன்னும் விரும்பத் தகுந்த இயற்கை மூலிகைகளையும் கொண்டு பூச்சிகளை விரட்டியடித்தானேயன்றி கொன்றானில்லை!
 
பொருளாதார முதலீடுகள் தேவையில்லாத விவசாயத்தை பெறும் முதலீடுகள் தேவைப்படும் தொழிலாக நிர்பந்தித்ததே நமது அரசாங்கம் தான்! அதனால் அன்று ஒரு ஏக்கர் பயிரிட்டால் நான்கைந்து மாதம் கழித்து அந்த உழைப்பிற்கு கையில் நான்காயிரம் மிஞ்சியது. இன்றோ கடன் மட்டுமே எஞ்சி நிற்கிறது.
 
நாட்டில் எல்லா பொருள்களின் விலையும் ஏறலாம்! ஆனால் அரிசிவிலை ஏறுவதை மட்டும் நம்மால் அனுமதிக்க முடியாது. அரிசி, கோதுமையால் உருவாக்கப்படும் ஹோட்டல் உணவுபண்டங்களின் விலைகள் பற்பலமடங்கு ஏறலாம்! ஆனால் அந்த ஹோட்டல் உணவு பண்டங்களுக்கு மூலாதாரமான அரிசி, கோதுமையின் விலையை நிர்ணயித்துக்கொள்ள முடியாத நிலைமையில் விவசாயிகளை நாம் நிர்பந்தித்துள்ளோம்!
அது போகட்டும்! குறைந்தபட்சம் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனை தருவதற்காக நிலைத்து நீராதாரத்திட்டங்களையாவது நிறைவேற்றலாமே! கடன் தொல்லையற்ற கௌரவமான விவசாயச் சூழல்களை அவனுக்கு மீட்டெடுத்து தருவதொன்றே உண்மையான தீர்வாகும்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

No comments: