Friday, September 14, 2012

உயர் அதிகாரிகள் காப்பாற்றபடுகிறார்களா?

-சாவித்திரிகண்ணன்
 
அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை கண்டுபிடித்து தண்டிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது மத்திய ஊழல் கண்காணிப்பகம். சுதந்திரம் கிடைத்த பிறகு 'நமது அரசாங்கம்' என நம்பி வந்த சாதாரண பிரஜைகள் ஊழல் பெருச்சாளிகள் மிகுந்த அரசு அதிகாரிகள், அலுவலர்களால் அலைகழிக்கப்படுவதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதாமக ஏற்படுத்தப்பட்டதே CVC எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பகம்!
 
சுதந்திரப்போராட்ட வீரரும், காந்தியவாதியும், இதழியல்துறை முன்னோடியுமான திரு. க.சந்தானம் அவர்களால் 1964-ல் தோற்றுவிக்கப்பட்டது.
 
பண்டிதநேருவாலும், லால்பகதூர் சாஸ்த்திரியாலும் பெரிதும் மதிக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் - தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்ட நிறுவனம் இன்று அரசாங்கத்தால் அலட்சியப்படுத்தப்படுகிறதோ? என மக்கள் ஆதங்கப்படும் நிலையில் உள்ளது.
 
ஊழல் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டுமெனில் அத்துறையின் உயர் அதிகாரிகள் அதற்கு அனுமதித்தால் தான் C.V.C விசாரணை நடத்தமுடியும். ஆனால் 18 அரசுத் துறைகள் சம்மந்தப்பட்ட 34 அதிகாரிகள் மீதான விசாரணைக்கு அனுமதிகோரி, அனுமதிக்கப்பட்ட கால அளவையும் கடந்து C.V.C காத்திருக்கிறது என்பது ஒர் அதிர்ச்சி தாரும் தகவலாகவுள்ளது.
 
நிதிஅமைச்சகம் தொடங்கி நிலக்கரி சுரங்கத்துறை மற்றும் பல்வேறு வங்கிகளில் மக்கள் பணத்தை முறைகேடாக கையாண்டு ஆதாயம் தேடிய அதிகாரிகள் ஏன் விசாரணை வளையத்திற்குள் வராமல் காப்பாற்றப் படுகிறார்கள்? என்பது தற்போது மக்கள் மனங்களில் விஸ்வரூபமெடுத்து நிற்கும் கேள்வியாகியுள்ளது.
 
C.V.C விசாரணைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் மூன்று மாதத்திற்குள் அதற்கு அனுமதி தந்தாக வேண்டும் என்று 'லோக்பால் போராட்டத்தின்' விளைவாக பிரதமர் அறிவித்தார். அந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பா?
 
26 வங்கிகளில் மக்களின் 2,650கோடி பெறுமானமுள்ள பணம் வங்கி அதிகாரிகளாலேயே சூறையாடப்பட்டதாக C.V.C அறிக்கை வெளியானதே என்ன நடவடிக்கை? வருமானவரித்துறையில் ஊழல் தொடர்பாக C.V.C வெளியிட்ட அறிக்கை என்னவானது?
 
மத்திய ஊழல் கண்காணிப்பகம் விசாரணை நடத்த சுலபத்தில் அனுமதிகிடைக்காது. அப்படியே கிடைத்து விசாரணை முடிவை வெளியிட்டாலும் அதன் பேரில் நடவடிக்கைகள் குறிப்பிடத் தகுந்த அளவில் இருக்காது என்பது எவ்வளவு அவலம்.
 
இதனால் தான் மத்திய ஊழல் கண்காணிப்பகத்தின் தலைவராக திரு. என்.விட்டல் பதவி வகித்தபோது 'ஊழல் அதிகாரிகள் காப்பாற்றப் படுகிறார்களா?' என வினா எழுப்பி சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களை இணையதளத்தில் வெளியிட்டார்.
 
ஆனால் மத்திய அரசு இதை விரும்பவில்லை. அதனால் அது சி.வி.சி.ஐ மேலும் பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு ஊழலில் சம்மந்தப்படவரான பி.ஜே.தாமசையே C.V.Cயின் தலைவராக்கியது. அதற்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டு, நீதிமன்றமே கண்டித்த பிறகு அவர் பதவி விலகினார். அதன்பிறகு தற்போது தலைவராக உள்ள பிரதீப்குமார் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் நிலக்கரி சுரங்க ஊழலில் சம்மந்தப்பட்டுள்ளார் என ஊடகங்களும், எதிர்கட்சிகளும் கூறிவருகின்றன. இந்த இரண்டு C.V.C தலைவர் நியமனத்திற்கும் ப.சிதம்பரமும், மன்மோகன்சிங்குமே பொறுப்பாகும்!
 
மத்திய அரசும் அரசு சார்ந்த துறைகள் சுமார் 1500! இதன் அலுவலர்கள், அதிகாரிகளோ பற்பல லட்சம்! இவர்கள் மீதான புகார்களை விசாரிக்க, கண்காணிக்க அமைக்கப்பட்ட C.V.Cயின் நிறுவன பலமே 299 பேர்தான்! அதிலும் தற்போது 42 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை C.V.C விஷயத்தில் இது தான் மத்திய அரசின் நிலைபாடு! மாநில அரசுகளோ இதை விடமோசம் என்ற நிலைமைதான்!
சில நேரங்களில் அரசுத்துறைகளில் ஊழலுக்கு எதிராக செயல்பட்ட உத்தம ஊழியர்களும், அதிகாரிகளுமே கூட C.V.Cயால் தண்டிக்கப் பட்ட அவலம் நேர்ந்துள்ளது. தவறான தலைமைகள் தவறான நபர்களை காப்பாற்ற நல்லவர்களை பலிகாடாவாக்கும் அவலங்களுக்கு யார் பொறுப்பு? நேர்மையான தலைமையின் கீழ் கூடுதல் அதிகாரத்துடன் C.V.C செயல்பட அனுமதிப்பதே மக்களின் எதிர்ப்பாகும்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
30-8-2012

No comments: