Friday, September 7, 2012

கபளீகரமாகும் இயற்கை அரண்கள்

-சாவித்திரிகண்ணன்
 
மலைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன...
வரலாற்று சின்னங்கள் சிதைக்கப்பட்டுள்ளன!
கண்மாய்கள் பல காணாமல் போயுள்ளன...
ஏரிகள் ஏப்பம் விடப்பட்டுள்ளன...
நீராதாரங்கள் நீர்மூலமாக்கப்பட்டுள்ளன...
விவசாயம் வீழ்தப்பட்டுள்ளது, அரசு நிலங்களும், சொத்துகளும் அபகரிக்கப் பட்டுள்ளன....
இவையெல்லாம் போரினால் ஏற்பட்ட இழப்புகளல்ல...
அந்நிய நாட்டுப் படைகள் வந்து நம் நாட்டில் அள்ளிச் சென்றவைகளின் பட்டியலுமல்ல!
 
இவை சமூகவிரோத கிரானைட் மஃபியாக்கள் மதுரைக்கருகே நடத்தியுள்ள சாகஸங்கள்.
சுமார் 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இந்த இயற்கை வளங்களின் சூறையாடலை கனிமவளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை... போன்ற அரசுதுறைகள் இது வரை தடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும், மாநில அரசின் தலைமையும் அறியாத வகையில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இயற்கை சுரண்டல்கள் நடத்திரவும் வாய்ப்பில்லை.
 
ஊடகங்கள் இவை குறித்து எச்சரித்துள்ளன. சமூக ஆர்வலர்கள் உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளனர். ஆயினும் சொல்லத் தகுந்த ஒருவர் சொல்லும் போது அதற்க்கோர் முக்கயித்துவம் கிடைத்து விடுகிறது என்பதற்கேற்ப முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. உ.சகாயம் அவர்கள் தமிழக அரசுக்கு எழுதிய கடிதமே அனைவரது கண்களையும் திறக்க வைத்துள்ளது. இந்தக்கடித்தத்தின் விளைவால் - அதுவும் அது தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக பத்திரிகையாளர் அன்பழகனால் பகிரஙகப்படுத்தப்பட்டது.
 
கடந்த ஐந்தாறு மாதங்களாக தலைமைச் செயலகத்தில் கேட்பாரற்று கிடந்த அவரது கடிதம் தற்போது ஊடகங்களின் கேள்விக்கணையாக மாறி, மாநில அரசின் மௌனத்தை கலைத்துவிட்டது.
 
தற்போது மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது! மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சூல் மிஸ்ரா 18 குழுக்களை நியமித்து குவாரிகளில் கள ஆய்வு நடத்தி வருகிறார். இது வரை 9 குவாரிகள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் தயாநிதி அழகிரி மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவாகி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது போலவே இதில் சம்மந்தப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இன்றைய ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் மீதும் பராபட்சமின்றி வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் குற்றம் நிருபிக்கபடும் வகையில் உறுதியாக வழக்குகள் நடத்தப்பட்டு இந்த இயற்கை வள சூறையாடல்கள் செய்த அனைவரையும் கடும் தண்டனைக்கு உட்படுத்தவேண்டும்.
 
இது மதுரையில் மட்டுமே நிகழும் கொள்ளையல்ல, மதுரை கொள்ளையின் குறைந்தபட்ச மதிப்பீடே 16,000கோடி என்றால் தமிழகத்தில் நெல்லை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி... உள்ளிட்ட இடங்களின் மொத்தமுள்ள 500 குவாரிகளிலும் நிகழ்ந்துள்ள அத்துமீறல்களைக் கணக்கிட்டால் கொள்ளை போன இயற்கை செல்வங்களின் மதிப்பு சில லட்சம் கோடிகளாக இருக்க கூடும்!
 
எனவே தமிழக அரசு மதுரையில் உள்ள ஒரு சில குவாரிகள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்வதும் நடவடிக்கை எடுப்பதும் என்றால் அதை கண்துடைப்பாகவே கருதவேண்டியதாகிவிடும்!
 
மலைகள் என்பவை இயற்கை அரண்கள்! இறைவனால் மனிதகுலத்திற்கும், உயிரினங்களுக்கும் வழங்கப்பட்ட நிலையான கொடைகள். பல தலைமுறைகளால் மனிதகுலத்தை பாதுகாத்துவந்த இயற்கை அரண்களான இந்த மலைகளை பேராசை கொண்ட சமூகவிரோத சக்திகளிடமிருந்து நாம் பாதுகாக்க தவறி, அடுத்து வரும் தலைமுறையிறருக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்துவிட்டோம்!
 
பறிபோனவை மலைகள் மட்டுமல்ல, மதுரையின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களான பிராமிகல்வெட்டுகள், புடைப்புசிற்பங்கள், சமணர்படுக்கைகள்.... போன்ற அரிய வரலாற்றுச் செல்வங்களுமாகும்! அந்தப் பகுதியிலுள்ள எளிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் நீர்மூலமாக்கப்பட்டுள்ளது.
 
ஒரு மக்கள் நலன் சார்ந்த அரசாங்கம் மேற்படி கொள்கைகளுக்கு எதிராக பொங்கி எழுந்து, இனி முற்ற முழுதாக இந்த இயற்கை சுரண்டலுக்கு முற்று புள்ளி வைப்பதோடு, இழந்த செல்வங்கள்னைத்தையும் அரசு கஜானாவிற்கு மீட்டெடுக்கும்!
இந்த அரசிடம் மக்களின் எதிர்ப்பார்ப்பு இதுவே!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
07-08-2012

No comments: