Wednesday, September 12, 2012

ஆசிரியர் தகுதிதேர்வு - உணர்த்தும் உண்மைகள்!

-சாவித்திரிகண்ணன்
 
அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. ஆனாலும் இந்த சோதனையிலிருந்து சில படங்களை பெற்று கொள்வது நல்லது.
 
தமிழகத்தில் சுமார் 18,000 ஆசிரியர் பணியிடங்களுக்கும், 5,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்குமாக ஜீலை - 12ந்தேதி நத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வி 6லட்சத்து 76ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் மொத்தம் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை கல்வியாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
 
இப்படி ஒரு தேர்வு தேவையே இல்லை என பலர் வாதிட்டனர். இந்த தேர்வை தடுத்து நிறுத்த பலர் நீதிமன்றம் சென்று தாமதப்படுத்தினார். ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு எதற்குத்தேர்வு? பணிமுப்பின் அடிப்படையிலேயே பணியை உறுதிபடுத்தலாமே என ஆக்ரோஷமாக வாதிட்டனர் பலர். ஆனால் இப்போது தேர்வு நடத்தப்பட்டதால் நமக்கு பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அவை;
 
  • தமிழகத்தில் புற்றீசல்கள் போல் பல்கி பெருகி இருக்கும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் யோக்கியதை இதில் வெளிச்சமாகியுள்ளது. இதன் மூலம் இந்த கல்லூரிகளை கடும் விதிகளுக்குட்படுத்தி ஒழுங்கு படுத்த வேண்டியதன் அவசியத்தை தற்போது தமிழ்நாடு கல்வியல் பல்கலைக்கழகம் உணர்ந்துள்ளது.
  • ஏற்கெனவே பணியில் இருந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் கல்வித்திறன் எவ்வளவு குறைபாடாக இருக்கிறது என்ற கசப்பான உண்மை தற்போதைய தேர்வில் அவர்கள் அடைந்துள்ள மிகப்பெரிய தோல்வியிலேயே விளங்கும். எனவே ஏழாண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து ஆசிரியர்களுமே தங்களை ஆசிரியர் கல்வி தேர்வுக்கு உகந்த வகையில் தகுதிபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் நிருபிக்கப்பட்டுள்ளது.
மாறிக்கொண்டும், வளர்ந்து கொண்டும், புதுப்புது தகவல்களை உள்வாங்கிக் கொண்டுமுள்ள கல்வித்துறையில் எதையும் 'update' செய்து கொள்ளாமல் ஆசிரியர் சமூகம் தேக்கநிலையில் இருந்து கொண்டிருக்கிறது என்பதும், இந்த தேக்கநிலை உடைபடவேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது நிருபணமாகியுள்ளது.
 
தமிழக அரசு ஆண்டுதோறும் சுமார் 35,000லிருந்து 50,000ஆசிரியர்கள் வரை நியமனம் செய்துகொண்டிருப்பதால் இனி இந்த விஷயத்தில் அதிககவனம் தேவைப்படுகிறது.
 
ஒரு சமூகத்தில் ஆசிரியர்கள் தகுதியானவர்களாக அமைந்துவிட்டால் அதன் அடித்தளம் உறுதியாக போடப்பட்டதாக நாம் நிம்மதியடையலாம்! இதன் காரணமாகத்தான் இந்த ஆசிரியர் தகுதி தேர்வில் குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைக்கென 30 மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது துர்அதிர்ஷ்டவசமாக நம் ஆசிரியர்களில் பலருக்கோ, அல்லது ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலோ இவை குறித்த புரிதல்கள் இல்லை. ஆனால் இவை குறித்த புரிதல்கள் இல்லாமலே இந்நாளில் பலர் ஆசிரியர்களாக வந்துள்ளனர் இருந்து கொண்டுள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
எனவே இக்குறைபாடு இனி ஆசிரியர் தகுதிதேர்வினால் அகற்றப்படும் என நாம் நம்புவோம். இத்தேர்வில் தோல்வியுற்ற அனைவருக்கும் மறுதேர்வு எழுத அக்டோபர் 3ந்தேதி வாய்ப்பளிக்கப்படும் என்பதும், தேர்வு நேரத்தை ஒன்றரை மணிநரத்திலிருந்து மூன்று மணிநேரமாக்கியுள்ளதும் வரவேற்கத் தகுந்த முடிவுகளே!
 
அதே சமயம் கேட்கப்படும் 150 கேள்விகளும் சரியானவிடையை கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து 'டிக்' செய்யும் வாய்ப்பாக இருப்பதால் மிகப்பலரும் விடை தெரியாவிட்டாலும் ஏதேனும் ஒன்றை 'டிக்' செய்து அதிர்ஷ்டத்தை நம்புவதாகத் தெரிகிறது. எனவே ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் இருப்பது போல தவறான விடையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு அரைமார்க் குறைக்கப்படும் என்ற நியதியை ஏற்படுத்தலாம். இதனால் உண்மையிலேயே உழைத்து படித்து வருபவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அமையும்!
 
ஆசிரியர் தகுதி தேர்வு இனி ஆண்டுக்கு இரு முறை நடக்க உள்ளது. அனைத்து ஆசிரியர்களும் ஏழாண்டுக்கு ஒரு முறை இதில் எழுதியே ஆகவேண்டும். இதன் மூலம் தமிழக கல்வித்துறையில் தகுதியான ஆசிரியர்கள் தேர்வாகி மகத்தான மாற்றங்கள் ஏற்படட்டும். மாணவசமுதாயம் பலன் பெறட்டும் இதன் மூலம் நாளைய நல்ல சமுதாயம் உருவாகட்டும்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
27-8-2012

No comments: