Friday, September 28, 2012

வன்முறை கலாசாரத்தில் மாணவசமுதாயம்


-சாவித்திரிகண்ணன்

மாணவர் சமூகம் குறித்து சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனைகளையும் தருவதாக உள்ளன.

முன்பெல்லாம் ராகிங் கொடுமைகள் தான் மாணவர்கள் குறித்த அதிகபட்ச அநாகரிகச் செய்தியாயிருந்தது. இப்போதோ கொள்ளை சம்பவங்கள், கொலை நிகழ்வுகள், பயங்கர ஆயுதங்களுடன் ஈடுபடும் வன்முறை சம்பவங்கள், கடத்தல்கள்... என பலவற்றில் மாணவர்களை தொடர்புபடுத்தி வெளிவரும் செய்திகள் வருங்கால சமூகம் குறித்த ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றன.

சமீபத்தில் சென்னை மாநிலக்கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்கள், கத்திகுத்து கைப்பற்றபட்ட ஆயுதங்கள் போன்றவை மாணவர் தலைவர் தேர்தலின் எதிர்வினைகளால் ஏற்பட்டவை! இது போன்ற சம்பவங்கள் மாநிலத்தில் உள்ள மற்ற அரசு கல்லூரிகளிலும், அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் அடிக்கடி நடக்கின்றன.

கல்லூரியில் நடக்கும் மாணவர் தலைவர் தேர்தல்களில் பணபலம், அரசியல்செல்வாக்கு, வன்முறை போன்றவற்றுடன் மதுவிருந்து போன்ற அம்சங்களும் இடம்பெறுகின்றன. இப்படி தலைவராக வரும் மாணவர்களின் நோக்கம் என்ன? அடுத்ததாக அரசியலுக்குள் இறங்கி செயல்படுவதற்கான பயிற்சிகளமாக கல்லூரி தேர்தலை இவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. மாணவர்கள் கூட்டத்தை வளைத்துப்போட அரசியல் பிரமுகர்களும் மாணவர்களுக்கு பணத்தை அள்ளித்தருகின்றனர்.
விளைவு - கல்விக்களத்தை கலவரபூமியாக்கிவிடுகிறது.

கல்வி, ஒழுக்கம், பண்பாடு போன்றவற்றை கற்று நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதொரு குடிமனிதனாக வரவேண்டிய மாணவன் சகலதீயபழக்கங்களையும் கற்று தற்குறியாக கல்லூரியிலிருந்து வெளிவருகின்றான்!

இது போதாதென்று 'பஸ்டே' என்ற அநாகரீக கொண்டாட்டங்கள் வேறு! இதற்கும் ஆங்காங்கேயுள்ள உள்ளூர் அரசியல்வாதிகள் அள்ளித்தரும் பணம் தான் பின்புலமாயிருக்கிறது. பொதுச் சொத்தை சேதப்படுத்தியும், சாலையில் செல்பவர்களை அச்சுறுத்தியும், கூச்சல்,ரகளை, கும்மாளம் என பஸ் கூரை மீதேறியும், சாலைத் தடங்களிலும் மாணவர்கள் 'பஸ்டே'யை கொண்டாடும் போது பொதுமக்கள் செய்வதறியாது விக்கித்துப்போகிறார்கள்!

இவை பண்பாட்டில் அவர்களிடையே நிலவும் பற்றாக்குறையையும்,மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதில் அவர்களுக்குள்ள அறியாமையையும் தான் உணர்த்துகின்றன. இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம் என முத்தரப்புமே பொறுப்பேற்க வேண்டும்.

கல்லூரிதேர்தல்களையும், பஸ்டே கொண்டாட்டங்களையும் முற்றிலுமாக தடை செய்வது தான் இன்றைய அவசர அவசிய தேவையாகும்! ஆனால் இதோடு நமது பொறுப்புகள் முடிவதில்லை!

மாணவர்களிடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் கலாச்சார மாற்றங்களில் நம் கவனம் தேவைப்படுகிறதது. அதீத செல்போன் செலவுகள், பாலியல் பிறழ்கள், மதுபழக்கங்கள், சமூக பொறுப்பற்ற தற்குறித் தன்மைகள் போன்றவை மாணவ சமூகத்தின் இன்றைய அடையாளமாக மாறிவரும் அறிகுறிகள் தென்படுகின்றன. 'கன்ஸ்யூமரிசம்' என்ற நுகர்பொருள் வெறிமிகுந்த ஒரு சமூகச் சூழலில் பக்குவப்படாத மனங்களில் ஏற்படும் பரிதவிப்புகள் சாதாரண மானவையல்ல.இதுவே பல சமூக விரோத செயல்பாடுகளுக்கு வித்திடுகிறது.

மாணவர்களுக்கு 'ரோல்மாடலாக' காண்பிக்க அரசியல் தளத்தில் இன்று ஆட்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமூக தளத்திலோ, கல்விக்கூடத்திலோ, குடும்பங்களிலோ ஒரு சில ரோல்மாடல்களாவது அவர்களுக்கு கிடைக்குமானால் இது போன்ற அசம்பாவிதங்களை அறவே தவிர்க்கலாம்!

இலக்கியத்தேடல்கள், தீவிரவாசிப்புகள், அரசியல் - சமூகம் குறித்த ஆழமான விவாதங்கள், குடும்பத்திற்கும், சமூகத்திற்குமான தன்னுடைய பங்களிப்புகள் தன்னைக் குறித்த சுயமதிப்பீடுகள்... போன்ற அம்சங்களை உள்ளடக்கிய இளம் தலைமுறையை உருவாக்கவேண்டிய பொறுப்பு - உருவாக்கத் தவறிய பொறுப்பு இன்றைய பெரியவர்களுக்குச் சார்ந்ததாகும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
7-9-2012

No comments: