Thursday, September 13, 2012

தீண்டாமை ஒழிப்பு

-சாவித்திரிகண்ணன்
 
தீண்டாமையை முற்றிலும் ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூபாய் 10லட்சம் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 31 கிராமங்கள் கண்டறியப்பட்டு இப்பரிசுத் தொகையை வழங்க இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
சுதந்திரமடைந்து 63 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தீண்டாமை ஒழிப்பிற்கு இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதுவும் தமிழகத்தில் 12 ஆயிரத்து சொச்சம் கிராமங்களில் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் வெறும் 31 கிராமங்களை கண்டறிவதற்கே அரசு அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு ஆராய்ந்து தேட வேண்டிருக்கிறது எனும் போது இன்னும் இந்த மண்ணில் தீண்டாமையின் நச்சு வேர் எவ்வளவு ஆழமாகவும், அகலமாகவும் விரவியுள்ளது என நாம் உணரலாம்.
 
தீண்டாமை ஒழிப்பிற்காக அளப்பரிய களப்பணிகள் ஆற்றினார் அண்ணல் காந்தி. அவரைப் பின்பற்றி அன்றே ஆயிரக்கணக்கான உயர்ஜாதி இளைஞர்களும் யுவதிகளும் தங்கள் பதவி, அந்தஸ்த்து, சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து தீண்டாமை ஒழிப்பிற்காக தங்களைத் தாங்களே அர்பணித்தார்கள் அறிஞர் அம்பேத்கார் பற்பல போராட்டங்கள் நடத்தியும், புரட்சிகரசட்டங்கள் இயற்றியும் தீண்டாமை ஒழிப்பிற்கு பாடுபட்டார்.
 
ஆனபோதிலும் இன்னும் பற்பல வடிவங்களில் தீண்டாமை நமது நாட்டில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இன்றும் தமிழகத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்களில் இரட்டை டம்பளர்முறை வழக்கத்தில் உள்ளது. இன்னும் நகரங்களிலும், கிராமங்களிலும் தலித் மக்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட சேரிப் பகுதிகளில் தான் வசிக்கின்றனர்.
 
பொதுக் கோயிலுக்குள் நுழைந்து வழிபடமுடியாது கிராமங்களும், சிற்றூர்களும் எத்தனையெத்தனையோ உள்ளன....
பொது வீதியில் நடக்கமுடியாமை, நடந்தாலும் செருப்போ, தோளில் துண்டோ அணிந்து கொள்ள முடியாமை, நுழையமுடியாத ஹோட்டல்கள், தாகம் தீர்க்க வழியற்ற பொதுக் கிணறுகள், குளிக்கவோ, கால்நினைக்கவோ வாய்ப்பற்ற பொதுக் குளங்கள், ஏரிகள்! முடிவெட்டிக் கொள்ள இயலாத சலூன்கள், கூடிக் கலக்க முடியாத திருவிழாக்கள், வடம்பிடித்து இழுக்கமுடியாத தேர்கள், சமாண்கள் வாங்க முடியாத கடைகள் ஒருவரை ஒருவர் பார்ப்பதையே தவிர்க்கும் தீண்டாமைக்கென எழுப்பப்ட்ட சுவர்கள்... இப்படி ஏதேனும் சில அம்சங்களாவது ஒவ்வொரு கிராமத்திலும் ஊரிலும் இருக்கின்றன. இதில் தீண்டாமையை கடுமையாக அனுஷ்டிக்கும் கிராமங்களாக சுமார் 2,800 கிராமங்கள் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
 
தமிழக மக்களுக்கென ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துகள் உட்பட சுமார் 60க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இன்னும் தேர்தல்களையே நடத்த முடியவில்லை. தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தலித்லைவர்கள் பணியாற்றவோ, கூட்டங்களுக்கு தலைமை தாங்கவோ, கொடியேற்றவோ முடியாத அவமானங்கள் இவ்வளவு ஏன் நன்றாகப் படித்து முன்னெறி உயர்பதவிகளுக்கு வந்தாலும் அங்கேயும் தீண்டாமையின் சில அம்சங்களையாவது அனுபவித்து கடந்து வரவேண்டிய நிலையிலேயே தலித்துகள் உள்ளனர். இதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதிபதிகள் கூட விதிவிலக்கல்ல... என்பது சிற்சில சமயங்களில் அவர்கள் மனம் வதும்பித் தந்த நேர்காணல்களில் வெளிப்பட்டுள்ளன!
 
எனவே ஏதோ பரிசுத்தொகை, பணம் இவற்றால் தீண்டாமை முற்றாக ஒழிந்துவிடும் என்பது நம்மை நாமே ஏமாற்றும் முயற்சியாகிவிடலாகாது. அதே சமயம் இந்த முயற்சியும் தீண்டாமை ஒழிப்பிற்கான ஓர் ஆயுதம் தான்! ஆனால் இதோடு நிற்காமல் தீண்டாமையை முற்றிலும் ஒழித்த கிராமங்கள், ஊராட்சிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு 'சிறப்புகிரேடு அந்தஸ்த்து' தரப்பட்டு அந்த ஊராட்சி தலைவர்களுக்கு அரசு அலுவலகங்களில், விழாக்களில் முக்கியத்துவம் தரவேண்டும்.
 
தீண்டாமை மனப்போக்கு கொண்டவர்களை தீய சமூகவிரோத சக்திகளாக 'டிரீட்மெண்ட்' செய்யவேண்டும்!
 
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தீண்டாமை மனப்போக்கு கொண்டவர்கள் தங்கள் கட்சியில் உறுப்பினராகத் தொடரமுடியாது என பிரகடனப் படுத்தவேண்டும். இத்துடன் மத்திய அரசும், மாநில அரசும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை முறையாக செலவிடவேணடும் துரதிர்ஷ்டவசமாக இந்நிதியில் 10 சதவிகிதம் கூட அந்த மக்களுக்காக செலவிடப்படுவதில்லை! செலவிடப்பட்ட நிதியிலும் பெரும்பகுதி அவர்களை சென்றடைவதில்லை என்ற நடைமுறைகள் முற்றாக மாறவேண்டும்! இந்த தலைமுறையிலேயே 'தீண்டாமை வீழ்த்தப்பட்டது' என சரித்திரம் படைப்போம்.
 
  NDTV -THE HINDU,
  EDITORIAL VOICE,
  29-8-2012

No comments: