Wednesday, September 12, 2012

இந்திய சுதந்திர தினம் 65 சாதனைகளும், வேதனைகளும்!

-சாவித்திரிகண்ணன்
 
65வது இந்திய சுதந்திரதினம் அரசு விழாவாக மத்திய, மாநில, மாவட்டத் தலைநகரங்களில் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம், அணிவகுப்பு, குதூகல கலைநிகழ்ச்சிகள் அரசு செலவில் அரங்கேறுகின்றன.
 
கல்வி நிறுவனங்கள் பலவும் அரசின் கட்டளைக்கேற்ப சுதந்திரதினத்தை கொண்டாடி மாணவர்களுக்கு மிட்டாய் தருகின்றன.
 
ஆனால் சுதந்திரம் பெற்றபோது ஊர்கள் தோறும், வீதிகள் தோறும் உற்சாக பெருவிழாவாக ஆராதிக்கப்பட்டு ஆனந்த களிப்பில் நாடு திளைத்தது. வீட்டுக்கு வீடு இந்தியக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தனவே அந்த ஆனந்த களிப்புகள் ஏன் ஆண்டுக்காண்டு தொடரவில்லை!
 
மக்களின் உணர்வுபூர்வமான கொண்டாட்டமாக சுதந்திரதினம் ஏன் கோபிக்கவில்லை? என்பது இன்றும் நம்மிடையே எஞ்சியிருக்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் எழுப்பும் கேள்விகளாகும்!
 
இந்தக்கேள்விகள் ஆழ்ந்து சிந்தித்து அலசப்படவேண்டியவைகளே! பொருளாதாரத்தில் இந்தியா இமாலய வளர்ச்சியை கண்டிருக்கிறது. நமது சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் வெறும் இரண்டாயிரத்து சொச்சம் கோடி தான்! ஆனால் தற்போதோ 14,90,925 கோடிகள்!
 
எத்தனையெத்தனை பிரம்மாண்ட தொழிற்சாலைகள் தேவைக்கும் அதிகமான விவசாய உற்பத்தி, வானுயர்ந்த கட்டிடங்கள், பளபளக்கும் சாலைகள், அணிவகுக்கும் வாகனங்கள், அதீத பணப்புழக்கம், அங்காடித் தெருக்களில் அலைமோதும் மக்கள் கூட்ட்ம, தங்க நகைகள் வாங்குவதற்கு முந்தியடித்தும் முனையும் மாதர்கள் கூட்டம், அழகான சீருடைகள் மின்ன பள்ளிவாகனங்களில் பவனிக்கும் குழந்தைகள், எங்கெங்கும் எழும்பிக் கொண்டிருக்கும் வீட்டு மனைகள்... என இந்தியா வளர்ந்து கொண்டிருப்பதை யாரால் மறுக்க முடியும்?
 
ஆனால் இந்த வளர்ச்சி தோற்றம் ஒரு புறமென்றால், மாற்றமில்லாமல் தொடரும் ஏழ்மை, வறுமை மறுபுறம் இருக்கின்றன!
எங்கெங்கும் பொது நலன் புறந்தள்ளப்பட்டு சுய நலன்கள் கோலோச்சுகிறது.
அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கைகோர்த்து ஊழல் சாம்ராஜ்ஜயம் எழுப்பப்பட்டுள்ளது. மக்கள் நல திட்டங்களில் ஊழல் பிரதானமாகிவிட்டது. பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல் பூதாகரமானதால் சில பூட்டப்பட்டுள்ளன. மற்றசில பொலிவிழுந்துள்ளன. இனி பொதுத்துறையில் புதிய நிறுவனங்களென்பது கானல் நீரானது.
 
ரயில்வே துறையில் பிரிட்டிஷார் அமைத்து தந்த கட்டுமானத்தை இந்த 65ஆண்டுகளில் 25 சதவிகிதத்திற்குமேல் அதிகரிக்க இயலவில்லை. பிரிட்டிஷ்காலத்தில் கட்டப்பட்ட அணைகள், சுதந்திரமடைந்து முதல் இருபதாண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட நீராதாரதிட்டங்கள் தவிர்த்து கடந்த 45 ஆண்டுகள் நாடு பெற்ற முன்னெற்றங்கள் ஏதுமில்லை.
 
திட்டமிடப்படாத விவசாய உற்பத்தியால் தேக்கி, பாதுகாக்கமுடியாத உணவுதானியங்கள் அழிகின்றன. மறுபுறம் விவசாய நிலங்கள் ரசாயண உரங்களால் கட்டுதட்டி மலடாகி வருகின்றன.
 
அடிமை இந்தியாவை பாதுகாக்ப்பட்ட இயற்கை அரண்களான மலைகளும், ஆற்றுமணல்களும் சுதந்திர இந்தியாவில் சூறையாடப்படுகின்றன இஸ்லாமிய படையெடுப்பார்களும், பிரிட்டிஷ் அதிகார வர்க்கமும் ஆயிரம் ஆண்டுகளில் அள்ளிச்சென்ற செல்வங்களை விடவும் அதிகமாக சொந்த நாட்டிலேயே சூறையாடி அந்நிய நாட்டு வங்கிகளில் பதுக்குகின்றனர் அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும்!
 
தொலைநோக்கு பார்வை தொலைந்து ஆதாய அரசியல் மேலெழுந்து, இலவசதிட்டங்கள், மதுபெருக்கம், நுகர்வுகலாச்சாரவெறி, உழைப்பில் ஈடுபாடிண்மை, தன்மானச் சிதைவு... போன்றவை வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக உள்ளன.
 
தியாக வேள்வியாலும் திடமான ஆன்மபலத்தாலும் காந்திய தலைமுறையால் கட்டமைக்கப்பட்ட இந்த தேசத்தை இன்றைய இளைய சமுதாயம் தான் தூக்கி நிறுத்தவேண்டும். பொதுநலத்திற்குள் தான் நமது அனைவரின் சுயநலன்களம் பூர்த்தியாகின்றன என்ற புரிதல் பலப்பட்டால் பலவீனங்கள் தொலைந்திடும்! நம்மைப் பீடித்திருக்கும் சுயநலப்பேராசைகளிலிருந்து நாம் விடுபடுவதே உண்மையான சுதந்திரமாகும்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

No comments: