Friday, September 7, 2012

நில அபகரிப்பு கைதுகள் நியாயமானவையா?

-சாவித்திரிகண்ணன்
 
அதிரடி சோதனைகள், கைதுகள், விசாரணைகள், சிறையிலடைப்பு.... என்று கடந்த ஒராண்டாக தமிழக அரசியல்களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாடு நில அபகரிப்புசட்டம் 'என்ற ஒன்றை அ.தி.மு.க அரசு ஜீலை 10-2011ல் கொண்டுவந்தது.
இதைத் தொடர்ந்து இதற்காக காவல்துறையில் சிறப்பு பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டு மக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டன. இது வரை 27,000க்கும் அதிகமானோர் நிலபகரிப்பு தொடர்பான புகார்களை தந்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதாயினர். இதில் பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் தி.மு.க அமைச்சர்களும், நூறுக்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகளும் அடக்கம். தி.மு.கவினரைத் தவிர்த்து ஒரு சில அ.தி.முக, காங்கிரஸ், பாஜ.க, பா.ம.க பிரமுகர்களும் கூட கைதாகியுள்ளனர். ஆனால் தி.மு.கவினரே மிக அதிகம் கைதாகி உள்ளனர்.
 
"இது பழிவாங்கும் செயல், தி.மு.கவை அழிக்கும் முயற்சி, தி.மு.கவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகளை கைது செய்வதன் மூலம் எங்கள் கட்சியை அச்சுறுத்த முடியாது. கட்சிக்காக பாடுபட்ட, சிறைசென்ற, தியாகங்கள் செய்த எவரையும் கட்சித்தலைமை கைவிடாது...." என தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி தற்போது கட்சி செயற்குழு கூட்டத்தில் கர்ஜித்துள்ளார்.
 
இதன்மூலம் மக்களை மிரட்டி நிலங்களை அபகரித்த கட்சி தலைவர்களை, நிர்வாகிகளை கண்டிப்பதற்கு பதில் காப்பாற்றவே முயற்சிக்கிறார் என்பது தெளிவு. இது மிகவும் துரதிர்ஷ்டமானது. இதை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஏனெனில் அ.தி.மு.க அரசின் மீது மக்களுக்கு சில அதிருப்திகள், குறைகள் இருக்கலாம். ஆனால் அது கொண்டுவந்த 'நில அபகரிப்புசட்டம்' மக்களிடம் அபார வரவேற்பை பெற்றுள்ளது என்பதற்கு காவல்துறையில் பதிவாகியுள்ள பல்லாயிரக்கணக்கான புகார்களே சாட்சி!
இது வரை ரூபாய் 700கோடி மதிப்புள்ள 1300ஏக்கர் நிலங்கள் மீட்டெடுக்கப் பட்டுள்ளது. இது தவிர 4,35,000சதுர அடி வீட்டுமனைகள் மீட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதிகாரபலத்தால், அக்கிரம கூட்டத்தால் தங்கள் சொத்து, நிலங்களை பறிகொடுத்து தவித்த மக்கள் தற்போது அவற்றை திரும்ப பெறுவதன் மூலம் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
 
வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.பி.ராஜா, கே.என்.நேரு, பொன்முடி, மு.க. அழகிரியின் ஆட்கள், ப.ரங்கநாதன், கருப்பசாமி பாண்டியன், அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள்... போன்றவர்களின் மீதான புகார்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவைகளல்ல...
இவர்கள் செய்த அத்துமீறல்களை அந்தந்த பகுதிமக்கள் அனுபவபூர்வமாக அறிவார்கள். எனவே தி.மு.க தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். வழக்குகள் பொய் எனில் அதை சட்டபூர்வமாக நிருபிக்கவேண்டும். ஆனால் இதற்காக தெருவில் இறங்கி ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவதால் மக்கள் அனுதாபத்தை பெறமுடியாது.
இவை ஒரு புறமிருக்க,
நில அபகரிப்பு தொடர்பான கைதுகள், விசாரணைகள், நடவடிக்கைகள் போன்றவை குறித்த சில குழப்பங்கள் மக்களிடையே நிலவுகின்றன.
 
கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் போன்றவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலையாகிவிடுகின்றனர். வீரபாண்டி ஆறுமுகம் மூன்றாவது முறை கைதாகி அவர் மீது தற்போது குண்டர்சட்டம் பாய்ந்துள்ளது. இது வரை குண்டர்சட்டத்தில் கைதான தி.மு.கவின் 14பேர் விடுதலையாகியுள்ளனர். இவரும் மூன்றே மாதத்தில் மீண்டும் விடுதலையாகலாம்!
 
குற்றச்சாட்டுகள் பலமானதாயுள்ளன. ஆனால் விடுதலையோ சுலபமாயுள்ளது.
இது காவல்துறையின் கையறுநிலையா? அல்லது எதுவும் பேரங்கள் நடக்கின்றனவா? - சந்தேகங்கள் வலுக்கின்றன!
அநியாயங்களுக்கு மாற்றாக நியாயங்கள் நிலைநாட்டப்படவேண்டுமே யல்லாது மேலும் சில அநியாயங்கள் அரங்கேறிவிடலாகாது!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
02-08-2012

No comments: