Friday, September 7, 2012

போலிச்சான்றிதழ்கள்

-சாவித்திரிகண்ணன்
 
அரசுத்துறைகளில் போலிசான்றிதழ் கொடுத்து 1,832 பேர் பணிகளில் சேர்ந்திருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாக மக்களவையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஆனால் போலிச்சான்றிதழ் மூலம் அரசுப்பணிகளில் எத்தனைபேர் சேர்ந்துள்ளனர் என்ற ஒட்டு மொத்த விபரம் அரசிடம் இல்லை என்பதையும் நாராயணசாமி ஒத்துக்கொண்டுள்ளார்.
உண்மைதான்! எப்படி வானத்து நட்சத்திரங்களை எண்ணிவிடமுடியாதோ அதே போல் போலி சான்றிதழ்கள் மூலம் அரசுப்பணியில் சேர்ந்திருப்பர்களை எண்ணி விடமுடியாது.
இட ஒதுக்கீடு என்ற கொள்கை கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் நடைமுறைக்கு வந்த காலகட்டத்திலிருந்தே போலிச்சான்றிதழ்கள் என்பவை வெகுவாக புழக்கத்தில் வந்துவிட்டன!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதம் மாறிய கிறிஸ்த்துவர்களில் மிகப்பெரும்பாலோர் தங்களை இந்துக்களாகவே சான்றிதழ்களில் குறிப்பிட்டு வருவது வெகுகாலமாகவே நடைமுறையில் உள்ளது.
 
மதம் மாறிய தலித் மக்களுக்கு அனைத்து சலுகைகளும் மறுக்கப்படுவதை இவர்கள் காரணம் காட்டுகின்றனர். கன்னியாகுமரியில் மட்டுமல்ல, பரவலாக தமிழகம்... ஏன் இந்தியா முழுமையுமே இந்நிலை காணப்படுகிறது. இந்த உண்மைகள் அரசுக்குத் தெரியவந்தாலும் அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கமுடியாத அளவிலான எண்ணிக்கையில் இவை நடப்பதாலும், கிட்டத்தட்ட சகஜமான நடைமுறையாக மாறிவிட்டதாலும் தற்போது முன்னைப்போல் யாரும் இதை பெரிதுபடுத்துவதில்லை.
 
அடுத்ததாக தாழ்த்தப்பட்டவர்களாக போலிச்சான்றிதழ் பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கைகளும் கணக்கிலடங்காது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தபட்டவர்கள், உயர்சாதியினர் என எல்லா சாதியினரும் அடங்கியுள்ளனர். தாசில்தார் அலுவலகத்தில் சில ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் கேட்ட ஜாதிக்கான சான்றிதழ் தரப்படுவதே இதற்கு காரணம்! இதனால் உண்மையிலேயே தலித்தாக பிறந்தவர்கள் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு உயர்சாதியாய் இருந்த பிரிவினர் சிலர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தற்போது பிற்படுத்த பிரிவிற்கு வந்துள்ளனர். அதுபோல் பிற்படுத்தப்பட்டவர்களில் சில பிரிவினர் மிகவும் பிற்படுத்தபட்டியலுக்கு வந்துவிட்டனர்.
 
ஓட்டு அரசியல் ஜனநாயகத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தும் அதற்கு நியாயம் அநியாயம் என்ற பாகுபாடே இல்லை. அந்தந்த ஜாதி மக்களின் ஓட்டைப் பெற அவ்வப்போது இந்த மாற்றங்கள் நடந்தவண்ணமே உள்ளன!
 
இது ஒரு புறமிருக்க, பழங்குடியின மக்கள், நரிக்குறவர்கள் போன்றவர்கள் ஆங்காங்கே தங்கள் ஜாதி சான்றிதழ்களை கூட பெற முடியாமல் போராட்டங்கள் நடத்துவதும் நடந்து கொண்டுதான் உள்ளது.
 
சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழுத்தப்பட்ட மக்களை தூக்கி நிறுத்த இட ஒதுக்கீடு என்ற உன்னத குறிக்கோள் கொண்டுவரப்பட்டது. ஆனால் நடைமுறையில் சலுகைகளை அனுபவிக்க, தங்கள் அடையாளத்தையே மாற்றிக் கொள்ளவும், போலிச்சான்றிதழ்கள் மூலம் தங்கள் பிழைப்பிற்கான ஒரு போராட்ட அணுகுமுறையாக பித்தலாட்டத்தை கை கொள்ளவும், மக்களில் பலர் தயங்குவதில்லை.
இதில், 'யாருக்கும் வெட்கமில்லை' என்று கூடச் சொல்லலாம்!
ஓட்டு அரசியலும், ஊழல் நிர்வாகமும், பிழைப்புக்கான பித்தலாட்டங்களும் நடைமுறை இயல்பாய் ஆகிவிட்ட ஒரு சமூகத்தில் கொள்கைகள், சட்டங்கள் போன்றவை காகித அளவில் கம்பீரமாக அச்சேற மட்டும் எந்தத்தடையுமில்லை!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
09-08-2012

No comments: