Tuesday, September 4, 2012

திடீர் தீ விபத்துகள் திட்டமிட்ட சதியா...?



                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
சென்னையில் தற்போது அடிக்கடி தீ விபத்துகள் நடக்கின்றன...!
சென்ற மாதம் ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டனில் தொடர்ந்து மூன்று தீ விபத்துகள் நடந்தன. அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அசோக்நகர் பகுதியிலும் இந்த அவலங்கள் அரங்கேறியுள்ளன!
இதே போன்ற தீடீர் தீ விபத்துகள் 2009 ஜீன், ஜீலை மாதங்களில் சென்னையில் நடந்தது. மர்மமான முறையில் மளமளவென்று குடிசை பகுதிகளில் தீ பரவுவதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களை உள்ளடக்கிய உண்மை அறியும் குழு களத்தில் இறங்கி விசாரணை மேற்கொண்டது. இவை 'திட்டமிடப்பட்ட சதிவேலைகளே' என அக்குழு திட்டவட்டமாகத் தெரியப்படுத்தியது.

சென்னை நகரில் 1970களில் எடுத்த கணக்கின்படி சுமார் 1200 சேரிப்பகுதிகள் உள்ளன. 1967 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிசை மாற்று வாரிய கருத்தாக்கத்தின் அடிப்படையில் இவற்றில் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன! இப்படி எவ்வளவு தான் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகளை கட்டித்தந்தாலும் புதுப்புது குடிசைபகுதிகள் உருவாவதை அரசால் தடுக்க முடியவில்லை. 1985க்குப்பிறகு உருவான எந்தப் புதிய குடிசைகப்பகுதிக்கும் அங்கீகாரம் தருவதில்லை என்பதில் தமிழக அரசு உறுதியான நிலைபாடு எடுத்துவருகிறது.

2007 ஆம் ஆண்டு பத்து வருடத்தை இலக்காக வைத்து 2017ல் சென்னை நகரை, 'சேகரிகளற்ற சென்னை' யாக்கப் போவதாக தி.மு.க அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்தும் சென்னையை சிங்காரச் சென்னையாக்குவது நவீன போக்குவரத்து வசதிகளை செய்வது போன்ற திட்டமிட்டலுக்காக சென்னையில் 16 கால்வாய் பகுதிகளில் குடியிருக்கும் மக்களை அவ்வப்போது தீ விபத்துகளை அரங்கேற்றுவதன் மூலம் அப்புறப்படுத்தினார். இதில் கூவம் கரை பகுதிகளில் மட்டுமே 18,000 குடும்பங்களை அகற்றும் பணி நடந்தது.

இவ்விதம் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் புறநகர் பகுதிகளான ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகிநகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போன்ற இடங்களில் மொத்தமாக குடியேற்றப்பட்டனர். இந்த இடங்களில் முறையான அடிப்படை வசதிகளற்று, மோசமான சுகாதாரச்சூழலில் பெரும் எண்ணிக்கையில் திணிக்கப்பட்ட மக்கள் சந்தித்த துயரங்கள் சொல்லிமாளாது. குழந்தைகளின் கல்வி இடை நின்றது. தங்கள் வேலைவாய்ப்புகளை இழந்தது, ஒரு புறமென்றால் இப்பகுதிகள் சமூகவிரோதிகளின் கோட்டையாகவும் மாறிக்கொண்டிருக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

இவையாவும் அரசாங்கத்தின் ஏழை, எளிய மக்கள் குறித்தான தவறான அணுகுமுறைகள் மற்றும் நகர்புற வடிவமைத்தல் குறித்த தெளிவற்ற சிந்தனைகளுக்கு அத்தாட்சிகளாயின!

ஆக்கரமிப்புகள் அக்ற்றப்பட்டேயாகவேண்டும் - அதில் தவறில்லை. ஆனால் இதில் குடிசைகள், குபேரர்கள் கட்டியகட்டிஙக்ள் என்ற பாகுபாடே கூடாது. அதோடு ஆக்கரமிப்புகளுக்கு துணைபோன அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

சென்னைநகரில் சுமார் 28% மக்கள் குடிசைபகுதிகளில் வாழ்கின்றனர். இந்த மாநகரம் உயிர்ப்போடு இயங்குவதற்கான அடிப்படையான பற்பல பணிகளை இந்த மக்களே நிறைவேற்றுகின்றனர். சென்னையின் ஒவ்வொரு நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் வீட்டிற்கான பணிப்பெண்கள், டிரைவர்கள், பெயிண்டர்கள், மெக்கானிக்குகள், துப்புறவு பணியாளர்கள்... போன்றவர்களை இந்த குடிசை பகுதிகளிலிருந்தே பெறுகிறோம்!

ஒரு துல்லியமான கணக்கெடுப்பில் விரிவாக்கப்பட்ட சென்னையின் இக்குடிசை பகுதிகளின் மொத்த அளவு 4.8 சதுர கீ.மீட்டர் தான்! இவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது இது மிகக்குறைவே!
வளர்ச்சி திட்டங்களுக்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் அதேசமயம் இம்மக்களை தேவையற்றவர்களாக கருதாமல் இவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பகுதிகளிலிருந்து 5 கீ.மீட்டருக்குள் வீடுகள் கட்டித்திரலாம்! தற்போது சென்னை நகரில் பயன்படுத்தாத அரசு கையகப்படுத்தியுள்ள 10.428 கி.மீ பரப்பளவில் வெறும் 2 சதுர கி.மீ பரப்பை இம் மக்களுக்கு ஒதுக்கினாலே போதுமானது!

தீ விப்பதுகள் மூலமாக இம் மக்களை அப்புறப்புடுத்தும் அராஜக அணுகுமுறை தவிர்க்கப்பட்டு, அடிப்படை வீட்டுவசதி கொள்கைகள், மறுவாழ்வு கொள்கை - 2007, தேசீய மீள் குடியமர்வு திட்டம் போன்றவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும்.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
31-7-2012

No comments: