Tuesday, September 4, 2012

ஆண்டுகாண்டு அச்சுறுத்தும் காலரா



                                                                                                                      -சாவித்தரிகண்ணன்
காலரா என்பது உயிர்களை காவு கேட்கும் அபாயகரமான நோயாகும்!
விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத காலகட்டங்களில் இந்நோய்தாக்கி மக்கள் கொத்து கொத்தாக மடிந்தார்கள். 1969ல் இந்நோய் இந்தியாவையே அச்சுறுத்தியது அதன் பின் உலக அளவில் எடுக்கப்பட்ட அசுர முயற்சிகளால் 70களின் மத்தியில் இந்நோய் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் மோசமான சுகாதார சீர்கேடு காரணமாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் மட்டுமே காலரா அவ்வப்போது காலூன்றி காவு கேட்கிறது.

அதுவும் சென்னையில் - குறிப்பாக வடசென்னையில் - ஆண்டுக்காண்டு இந்நோய் கோடைகாலம் முடிந்து மழைகாலம் துவங்கும்போது பரவி பாடாய்படுத்துகிறது. தேனீ உள்ளிட்ட தென்மாவட்டங்களும் பாதிக்கப்படுகிறது வடசென்னை பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கின்ற அவலத்திற்கு ஒரு முடிவே இல்லை. எப்போதோ பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்டு பழுதடைந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களை அப்புறப்புடுத்தி புதியவற்றை பூமிக்கடியில் பதிப்பிப்பதே இதற்கு தீர்வாகும்!

ஆனால் இந்த எளிய தீர்வு ஏனோ எட்டப்படாமல் ஆண்டுக்காண்டு மனித உயிர்கள் பலியாகும் அல்லது பாதிக்கப்படும் அவலம் அரங்கேறிக் கொண்டுள்ளது. ஆட்சிகள் மாறிடினும் இந்த அவலகாட்சிகள் மாறுவதில்லை!

ஏழை எளிய மக்கள் அதிகமாக வாழும் வடசென்னைப்பகுதி புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்ற குரல்கள் தொடர்ந்து ஒலிப்பதற்கு அத்தாட்சியாக காலரா பாதிப்புகளைக் கூறலாம்!
வயிற்றை குமட்டும் நாற்றத்துடன் தரப்படும் குடிநீர்.....

அகற்றப்படாமல் மலைபோல் தேங்கி நிற்கும் குப்பைகள், கழிவுகள்...! பெருகி பரவும் ஈக்கள்.... ஒழுங்கமைக்கப்படாத கழிவுநீர் குழாய்கள்.... மொத்தத்தில் சுகாதாரமற்ற சூழல்கள் வடசென்னையின் பெரும் அச்சுறுத்தலாக தொடர்கிறது. சர்வதேச முக்கியத்துவம் கொண்ட நவீனநகரமாக தென் சென்னை பகுதிகள் மாறிக்கொண்டிருக்க, வடசென்னையோ மாறத்தன்மையுடன் மாசு நிறைந்து காணப்படுகிறது.

வளர்ச்சி என்பது அனைத்து நிலைகளிலும் அரங்கேறவேண்டும்.
பளபளக்கும் சாலைகள், கண்கவர்மேம்பாலங்கள், வழுக்கி ஓடும் வாகனங்கள், பிரம்மாண்ட கட்டிடங்கள், வெளிச்சம் பாய்ச்சும் மின்விளக்குகள்... என வெளித் தோற்றத்தில் தெரிகன்ற சென்னையின் அகத்தோற்றம் மிகவும் பலஹீனப் பட்டே இருக்கிறது என்பதற்கு உலகமெங்கும் ஒழிக்கப்பட்டுவிட்ட காலரா சென்னையில் உலாவருவதே சாட்சியாகும்!

அமைச்சர்களையோ, உயர்அதிகாரிகளையோ, அரசியல்வாதிகளையும் ஒரு போதும் தாக்கவாய்ப்பில்லாத - புறக்கணிக்கப்பட்ட மக்களின் அவலமான சுகாதார சீர்கேடுமிக்க சூழல்களால் மட்டுமே தோற்றுவிக்கப்படும் காலரா - தீர்க்கப்படவே வாய்ப்பில்லையா?

பழுதில்லாத, பலமான குடிநீர் மற்றும் கழிவுநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் பாதுகாப்பான வகையில் அமைக்கப்பட்டுவிட்டால் காலரா என்பது அறவே ஒழிந்துவிடும். இதற்காக எத்தனைகோடிகள் செலவானாலும் செய்தே தீரவேண்டும்! மாறாக பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்களே! பலியாவதும் அவர்களின் உயிரே... என அலட்சியம் காட்டுவது அநீதியிலும் அநீதியாகும்!

அடுத்த ஆண்டு காலரா தமிழகத்தில் அறவே இருக்காது என்று திடமாக முடிவெடுத்து திட்டமிட்டால் நிச்சயம் தடுக்கப்பட்டுவிடும்! இது ஏதோ செயல்படுத்தப்படவே முடியாத மிகக்கடினமான திட்டமல்ல! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!
நம்நாடு வல்லரசாகிறதா? புதிய புதிய விண்களன்களை விண்ணில் ஏவுகிறதா? பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கிறதா? என்பதையெல்லாம் விட மோசமான சுகாதார சீர்கோடுகளுக்கும் அபத்தான நோய்களுக்கும் விடைகொடுத்துவிட்டது என்று பேசப்படும் நாளே நன்நாளாகும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
27-7- 2012

No comments: