Friday, September 28, 2012

பகை உணர்வை தவிர்ப்போம் பண்பாட்டை காப்போம்

-சாவித்திரிகண்ணன்


கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் பண்டை காலம் தொட்டு உன்னத நிலையில் இருப்பவர்கள் தமிழர்கள்! விருந்தோம்பல் என்று வந்துவிட்டால் விரோதியைக் கூட விசனப்படுத்திடாமல் உபசரிக்கவேண்டும் என்பதில் உயர்ந்த நாகரீகத்தை வெளிப்படுத்திய மண் தமிழகம்!

ஆனால் இப்படிப்பட்ட தமிழகத்தில் தற்போது விரும்பத்தகாத சம்பவங்கள் சில அரங்கேறி வருகின்றன. இலங்கையிலிருந்து வரும் மாணவர்கள், சுற்றுலாபயணிகள், கோவிலுக்கு வரும் பக்தர்கள், விளையாட்டுவீரர்கள் போன்றவர்கள் தமிழகத்தில் அவமானத்திற்கு ஆளாவதும், தாக்கப்படுவதும் விரட்டப்படுவதுமான சம்பவங்கள் கவலையளிக்கின்றன. இந்த சம்பவத்ததில் இது வரை வெகுஜன மக்கள் பங்கேற்கவில்லை. தமிழக மக்கள் இதை ஆதரித்ததற்கான ஆதாரமும் இல்லை ஆனால் பொதுமக்கள் பெயரால் சில சிறிய இயக்கங்கள், சிறு குழுக்கள் இதனை அரங்கேற்றுகின்றன. இத்தகைய அநாகரிகச் செயலை அரங்கேற்றுவதற்கான தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?


இலங்கை தமிழர் ஆதரவு சம்மந்தப்பட்ட விவகாரத்தில் கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் தமிழகத் தலைவர்களிடையே நிகழும் போட்டாபோட்டியை இந்த தமிழ் இனவெறி அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டிருப்பதையே நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

இலங்கையின் கொழும்பு மாகாணத்தின் ராயல் கல்லூரி கால்பந்துவிளையாட்டு பள்ளி மாணவர்கள் இங்குள்ள சுங்க இலாகா கால்பந்து விளையாட்டு குழுவுடன் நேரு விளையாட்டரங்கில் விளையாடிய நிகழ்வு தமிழக அரசாலேயே விரோத கண்ணோட்டத்தில் அணுகப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதும், விளையாட்டரங்க அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் மிகவும் துரதிஷ்டமானது. இதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் கிறிஸ்த்துவ தேவைலயத்திற்கு ஆன்மீகப் பயணமாக வந்த சிங்களர்கள் விரட்டப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வகையில் புத்தமத கல்வி நிலையத்திற்கு அடிக்கல் நாட்ட இந்தியாவரும் இலங்கை அதிபர் ராஜபட்சேவை எதிர்த்து போராடுவது விவேகமற்றது.

இலங்கை அதிபர் இந்தியாவிற்குள் வரக்கூடாது என்றால், இலங்கை தமிழர் நலன்சார்ந்து இலங்கை சென்று இந்திய அமைச்சர்களோ, எம்.பி.களோ எப்படி பேச முடியும்? யாரோடு பேசமுடியும்?
உலக அரங்கில் இவை தமிழர்களுக்கு தலைகுனிவையே தரும்.

இந்தியாவின் பகை நாடாக பகிரங்கமாகச் செயல்படும் பாகிஸ்தானின் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடுவதை தடை செய்யக்கூடாது என்பது தான் பெரும்பான்மையான இந்தியர்களின் விருப்பம். விளையாட்டிலோ, சுற்றுலாவிலோ, ஆன்மீகத்திலோ அரசியல் கலக்கக்கூடாது என்பதே ஓர் அறிவார்ந்த சமூகத்தின் நிலைபாடாயிருக்க முடியும்.

இந்தியாவிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இலங்கை சென்று வருகின்றனர். அவர்கள் அங்குள்ள சிங்களர்களால் தாக்கப்பட்டதாக செய்திகள் இல்லை. தமிழகத்திலுள்ள தொழில் முனைவோர் பலர் இலங்கையில் முதலீடு செய்து நாளும் அங்கு சென்று வருகின்றனர். அவர்களின் முதலீட்டிற்கோ, தொழிலுக்கோ எந்த குந்தகமும் ஏற்பட்டதில்லை. அப்படியிருக்க தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தால் அங்கும் அதன் எதிர்வினைகள் ஏற்படுமானால் அந்த கசப்பான அனுபவங்களை சந்திக்கப் போவது இங்குள்ள ஈழ ஆதரவு அமைப்புகளல்ல!

மேலும் இங்கு நடக்கும் இது போன்ற சம்பபவங்கள் அங்கு வாழ்வாதாரத்திற்காக தவித்துக் கொண்டிருக்கும் இந்தியத் தமிழர்களுக்கும், மலையகப் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி எதிர்வினையாகி விடாலாகாது!

இலங்கை அரசாங்கத்தின் ஒரு சில இனவெறிக் கொள்கைகளையும், இனப்பாகுபாட்டு அணுகுமுறைகளையும் நாம் எதிர்ப்பது என்பது வேறு! இங்கு வரும் இலங்கை மக்களை எதிர்ப்பது என்பது வேறு! உண்மையில் சிங்கள ஆளும் தரப்பின் இனப்பாகுப்பாட்டை அமைதியை விரும்பும் பெரும்பாலான சிங்களர்கள் எப்போதுமே ஏற்றதில்லை. இதற்கு ஆதாரமாக சிங்கள ஆளும்தரப்பின் இனப்பாகுப்பாட்டை எதிர்த்து இயங்கி தங்கள் இன்னுயிரையே அர்பணித்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் சமதர்மவாதிகள், கலைஞர்கள் என பெரும் எண்ணிக்கையிலான சிங்களர்களை பட்டியலிடமுடியும்.
இன்றும் அங்குள்ள சிங்களமக்களுக்கும், தமிழர்களுக்கும் இணக்கமான சூழலும், இசைவான நட்புமே தொடர்கிறது. இனவெறி உணர்வை பரப்பும் வன்முறையாளர்கள் தனிமைப்படுத்ததி காந்தி தேசத்து மக்களும், புத்ததேசத்து புதல்வர்களும் கைகோர்க்கவேண்டியது காலத்தின் கட்டாயம்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
4-9-2012

No comments: