Tuesday, September 4, 2012

ரயில்விபத்துகளா? கொலைகளா?


                                                                                                                        -சாவித்தரிகண்ணன்

ஒரே ஒரு ரயில் விபத்து நிகழ்விற்கே நெஞ்சம் அதிர்ந்து அன்று அதற்கு தார்மீக பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். லால்பகதூர் சாஸ்த்திரி.

ஆனால் இன்றோ ரயில் விபத்தென்பது ரயில்வே துறையின் அன்றாட அறிவிப்பு பலகையின் அறிவிக்கப்பட்டிராத நிகழ்ச்சி நிரலாகிவிட்டது.

1990கள் வரை சிற்சில விபத்துகள் மட்டுமே நிகழ்ந்தன. ஆனால் அதற்குப்பிறகோ ஆண்டுக்காண்டு விபத்துகள் அதிகரித்த வண்ணமுள்ளன. இதற்காக வெட்கப்படாத வேதனைப்படாத மரத்துப்போன இதயத்தை கொண்டவர்களாகிவிட்டனர் ரயில்வே துறையினர்!

பெரும்பாலான விபத்துகள் ரயில்வே நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் அலட்சிய போக்கால் தான் நிகழ்கின்றன என்றே பற்பல ஆய்வுகள் கூறுகின்றன.

பழுதுபார்க்கப்படாத இயந்திரக் கோளாறு, பராமரிப்பில்லாத மின் இணைப்புகள், அதிக வேகம், சிக்னல்களை பொருட்படுத்தாது, சிக்னல்களே செயலற்று இருப்பது, ரயில் பாதைகளை அவ்வப்போது பழுதுபார்க்காதது ரயில் ஒட்டுநர்களின் உடல்மற்றும் மனநிலை... போன்ற பற்பல காரணிகள் ரயில்விபத்துகளை அடிக்கடி நிகழ்வாக்குகின்றன!

தற்போது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சந்தித்துள்ள விபத்துக்கு மின்கசிவு காரணமென்றால் அந்த மின்கசிவை கண்டறிந்து பயணிகளை எச்சரிக்க வேண்டிஇய TTR - முன்பு இரண்டு பெட்டிகளுக்கு ஒருவர் என்ற நிலைமாறி தற்போது ஆறுபெட்டிக்கு ஒருவராக ஆனதால் - அந்தப்பெட்டியில் TTR இல்லாமல் போனது ஒர் முக்கிய காரணம்! அபாயசங்கிலி வேலை செய்யாமை வெளியேறும் கதவுகளை திறக்க முடியாமை போன்றவை கூடுதல் உயிரிழப்புகளுக்கு காரணமாகிவிட்டன!

அனில்காக்கோர் தலைமையிலான ரயில்வே துறைக்கான உயர்நிலை பாதுகாப்பு தொடர்பான கமிட்டி ரயில்வே துறையில் நிலவும் பிரம்மாண்டமான ஆள்பற்றாகுறையும், இருக்கின்ற ஆட்களை கையாளும் ஆளுமை பற்றாக்குறையுமே 80 சதவிகித விபத்துகளுக்கு காரணம் என்றது. ரயில்வே ஒட்டுநர்களில் நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் மட்டுமே சுமார் 16,000 பேர் பற்றாக்குறை. இரயில்வே பாதுகாப்பு படை என்ற ஒன்று முன்பு துரிதமாக செயல்பட்ட காலம் கனவாய் பழங்கதையாகிவிட்டது. தற்போது அங்கும் செயல்பட ஆட்களில்லை. இந்தவகையில் ரயில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு மட்டுமே 59,350 இடங்கள் நிரப்படாமல் உள்ளதையும் அக்கமிட்டி சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வளவு ஏன்? ரயில்வே கிராசிங்கில் 'கேட்'களை பராமரிக்கும் சாதாரண கடைநிலை பணியாளர் பற்றாக்குறையே 18,000மாக உள்ளது. இதன் காரணமாக ரயில்வே கிராசிங்கில் ஆட்டோ, வேன், பள்ளிவாகனங்கள், பேருந்துகள்... என ரயிலில் அடிபட்டு கொத்துகொத்தாக மனித உயிர்கள் பலியாகின்றன. கடந்த ஆறுமாதத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரயில்வே தண்டாளத்தை கடக்க முயன்றவகையில் 175பேர் பலியாகியுள்ளனர்...!

முன்பெல்லாம் ஒவ்வொரு ரயிலும் 12மணிமுதல் 20மணிநேர பயணத்திற்குப் பின் முழுமையின பராமரிப்பு சேவைக்கு உட்படுத்தப்படும். ஆனால் இன்றோ 4,500கீ.மீட்டர் வரை - அதாவது நான்கைந்து நாட்கள் வரை பராமரிப்பின்றி ஒடவைக்கிறார்கள். காரணம் இயந்திரப் பிரிவில் ஆட்கள் பற்றாக்குறை!

1990களுக்குப் பிறகு ரயில்வே துறையில் சிக்கன நடவடிக்கை காரணமாக சுமார் ஆறுலட்சம் பணியிடங்கள் அகற்றப்பட்டன. ஆனால் அதற்கேற்ப ரயில்வே துறை நவீனமயமாக்கப்படவில்லை. அதோடு தற்போது நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களிலேயே கூட நிரப்பப்படாத பணியாளர் பற்றாக்குறை ஒரு லட்சத்து அறுபதாயிரம் என்றால் இதைவிட பெரிய அநீதி வேறென்ன இருக்கமுடியும்?

'குறைந்த நபர்களைகொண்டு அதிக வேலைகளை சாத்தியப்படுத்துதல்' என்ற தாரக மந்திரத்தால் ரயில்வே நிர்வாகமே தாறுமாறாக தடுமாறி கொண்டிருக்கிறது. பணியாளர்கள் பற்றாக்குறை தொடங்கி அனைத்து பற்றாக்குறைகளையும் நிவர்திக்க ரயில்வேதுறையில் 5,60,000கோ முதலீடு செய்யவேண்டும் என்பதே உயர்நிலைபாதுகாப்பு கமிட்டி அரசுக்கு தந்த பரிந்துரையாகும்!
ஆனால் ஆண்டுக்கு 20,000கோடி என்பதே ரயில்வேதுறைக்கு அரசு தந்து வரும் நிதி இலக்கு! ஆகவே விபத்தென்பதும் அன்றாட வழக்கு என்பதாகிவிட்டது! எனவே நடப்பவைகளை விபத்தென்பதா? கொலை என்பதா ?
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
30-7-2012

No comments: