Friday, September 7, 2012

மருத்துவர்கள் போராட்டம் நியாயமா?

-சாவித்திரிகண்ணன்
 
இந்தியா முழுவதும் ஆங்காங்கே தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பல தனியார் மருத்துவமனைகள் இயங்கவில்லை. டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை தரவில்லை.
 
நமது மத்திய அரசு, தேசிய சுகாதார மனிதவள ஆணைய மசோதா ஒன்றை 2011 டிசம்பரில் கொண்டுவந்தது, "அந்த மசோதாவை ஏற்க மாட்டோம்" என்று டாக்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
"ஏன் ஏற்க மாட்டார்களாம்?"
"எங்களை யாரும் கண்காணிக்க கூடாது, விசாரிக்ககூடாது, மருத்துவ நெறிமுறைகளை பின்பற்று என்று உபதேசிக்க கூடாது..." இதுவே டாக்டர்களின் குரல்!
அப்படியென்ன மத்திய அரசு டாக்டர்களை பாதிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
 
மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள தேசிய சுகாதார மனிதவள ஆணைய மசோதா என்பது அதிரடியாய் கொண்டுவரப்பட்டதல்ல. பல ஆண்டுகளாக பல்வேறு தளங்களில் எழுந்த புகார்கள், பிரச்சினைகள் அடிப்படையில் ஆராய்ந்து கொண்டு வரப்பட்டுள்ள தீர்வே இச்சட்டம். இது குறித்து யஷ்பால்கமிட்டியும் விரிவாக பரிந்துரைத்துள்ளது. இச்சட்டத்தை சமூக ஆர்வலர்கள், மனிதநேயமுள்ள மருத்துவர்கள் உளமாற வரவேற்கிறார்கள்.
 
இச்சட்டமானது அடிப்படை வசதிகள் இல்லாது தகுதியான உதவியாளர்கள் இல்லாது 'கிளினிக்' என்ற பெயரிலே 'கல்லா' கட்டும் மருத்துவர்களுக்கு கடிவாளம் போடுகிறது. அத்துடன் மருத்துவர்கள் தாங்கள் பெறும் சிகிச்சை கட்டணத்திற்கு ரசீது தர வேண்டும் தங்கள் உண்மையான வருமானத்தை தெரிவித்து வருமானவரி செலுத்தவேண்டும் என்கிறது அரசு - இதில் என்ன தவறு இருக்கிறது. இந்த நாட்டில் பத்து ரூபாய் பல்பொடி வாங்கினாலே விற்பனை வரியை ஒவ்வொரு குடிமகனும் அரசுக்கு செலுத்தியதாக வேண்டும் எனும் போது லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் மருத்துவர்கள் மட்டும் வருமானத்தை காட்டமாட்டார்களாம்! அவர்கள் சேவை செய்வதால் அதையெல்லாம் கேட்டு மருத்துவத்தை வியாபாரமாக பார்க்க கூடாதாம்!
 
மருத்துவம் வியாபாரமாக மாறி வெகுநாட்களாகிறது என்பதே மக்கள் அனுபவம்! "அந்த வியாபாரத்தை உண்மையாக, வெளிப்படையாகச் செய்யுங்கள்" - என்கிறது மத்திய அரசின் சட்டம்! டாக்டர்களுக்கு தகுதி தேர்வு நடத்த கூடாதாம்! டாக்டர்கள் தங்கள் தொழிலை, மருத்துவமனையை உரிய முறையில் பதிவு செய்யச் சொல்வது தவறாம்!
மருத்துவம் என்பது நாளும் வளர்ந்து தன்னை புதுபிக்கும் விஞ்ஞானம்! எனவே அதற்கேற்ப மருத்துவர்கள் தங்களை தகுதிபடுத்திக் கொள்ள மாட்டோம். எங்களுக்கு பரிட்சையா? என்றால் எப்படி? அது மட்டுமின்றி எங்கள் மீதான புகார்களை விசாரிக்கவே கூடாதென்றால் அது எப்படி நியாயமாகும்?
இந்தியாவில் பதிவுபெற்ற மருத்துவர்கள் ஆறுலட்சத்து 12ஆயிரம்! இவர்களில் 80 சதவிகிதம் பேர் 40 சதவிகித மக்கள் இருக்கும் பெருநகரங்களில் மட்டும் தான் வேலைபார்ப்போம் என்று செயல்படுகிறார்கள். எனவே மத்திய அரசு 3 1/2 வருட மருத்துவ படிப்பை முடித்து கிராமங்களில் பணியாற்ற மருத்துவ பட்டதாரிகளை உருவாக்க முனைகிறது. அதையும் இவர்கள் எதிர்ப்போடு அப்பாவி மாணவர்களையும் தூண்டிவிடுகிறார்கள்.
 
இன்றைய தினம் தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் மனிதநேயத்திற்கு அப்பாற்பட்டு இயங்குவதாகவே மக்கள் உணருகிறார்கள்.
 
அதீதகட்டணங்கள், தேவையற்ற பரிசோதனைகள், தவறான மருத்துவசிகிச்சைகள் மனித உறுப்புகளின் திருட்டு, விற்பனை, மோசடிகள், சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட மருந்து மாத்திரைகளை பரிந்துரைப்பது என ஏகப்பட்ட மனக்குமுறல்கள் மக்களுக்கு உள்ளன!
 
இவையெல்லாவற்றிற்கும் தீர்வு காணும் நல்முயற்சியான பல அம்சங்கள் இந்த சட்டத்தில் தென்படுகின்றன! மனிதநேயமுள்ள அனைவரும் இதை நிச்சயம் வரவேற்பார்கள்!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

No comments: