Sunday, August 5, 2012

அண்ணாஹசாரேவின் அரசியல் பிரவேசம்


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்


"அரசியலில் ஈடுபடப்போகிறோம்" என்ற அண்ணாஹசாரேவின் அறிவிப்பு சிலருக்கு ஆனந்தத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் அவ்வியக்கதிற்குள்ளே ஏற்படுத்தியுள்ளது.
அவரது எதிரிகளை ஏளனம் கொள்ளவைத்துள்ளது.
ஒரு இயக்கம் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு தங்களுக்குள் பரந்துபட்ட விவாதத்தை நடத்தியிருக்கவேண்டும். இயக்கத்தில் உள்ளவர்களின் பலதரப்பட்ட கருத்துகள் பரிசிலிக்கப்பட்டு, ஆழமான புரிதலுக்கு வந்திருக்கவேண்டும். அதுமட்டுமின்றி எந்த மக்களுக்காக அரசியல் இயக்கம் தொடங்குகிறார்களோ அந்த மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன? அவர்கள் நடத்திகொண்டிருக்கும் போராட்டங்கள் என்னென்ன? அவர்களின் துன்பதுயரங்கள் எத்தகையது? எதிர்ப்பார்ப்புகள் என்ன? என்பதுபற்றியெல்லாம். விவாதித்து அதற்கேற்ப கொள்கைகள், இலட்சியங்கள், இலக்குகள் ஏற்படுத்திருக்கவேண்டும்.

தங்களது பலம் என்ன? பலவீனங்கள் என்ன? என்று சுயமதிப்பீடு செய்திருக்கவேண்டும். பலத்தை அதிகரித்துக்கொண்டு, பலவீனங்களை கலைவதற்கான கால அவகாசத்தை நிர்ணயித்திருக்கவேண்டும்.
இவை எதுவுமே நடைபெறவில்லை. தனது உண்ணாவிரதத்தின் மூலமாக எந்த வெற்றியும் ஏற்படவில்லை என்று அவசரப்பட்டு ஆவேசமாக எடுத்த தீர்வாக அரசியல் பிரவேசம் அமைந்துள்ளது. இது வரை அண்ணாஹசாரே ஊழலுக்கு எதிராக நான்கு முறை உண்ணாவிரதப்போராட்டங்களை மேற்கொண்டார். இந்த போராட்டங்களை ஆரம்பத்திலிருந்த எழுச்சியும், மக்கள் திரளும் படிபடியாக குறைய ஆரம்பித்தன. அண்ணா குழுவினரின் ஆவேசமான அறிக்கைகள் காங்கிரஸ் மீதான அவர்களின் தாக்குதல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்தான அவர்களின் விமர்சனங்கள் போன்றவை அனைத்துகட்சிகளிலும் அவர்களுக்கு எதிர்ப்பை சம்பாதித்து கொடுத்தது. அதுவும் குறிப்பாக காங்கிரஸிக்கு எதிரான தீவிர தாக்குதல்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்த அண்ணாஹசாரேவின் ஊழலுக்கு எதிரான அனுதாபிகளை கூட அந்நியப்படுத்தி விட்டது. மக்களும் மெல்ல, மெல்ல பின்வாங்க தொடங்கினர்.

அண்ணாஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு என்ற இலட்சியத்திற்கு இன்றைய பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிரிகள் தாம். ஆனால் அந்த எதிர்களை விடவும் அண்ணாஹசாரே குழுவினரின் எண்ணங்களும், நடவடிக்கைகளுமே அவர்களுக்கு பெரும் எதிரியாகி விட்டிருக்கின்றன. இந்த உண்மையை அவர்கள் உணர்ந்தறியாதவரை அவர்களின் எந்த புதிய முயற்சிகளும், போராட்டங்களும் பலனளிக்காது.


அறப்போராட்டம் என்பதின் முழு அர்த்தத்தையும் உள்வாங்கிக் கொள்ளாமல் உண்ணாவிரதத்தை எதற்கு பயன்படுத்தவேண்டும். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை உணராமல் அண்ணாஹசாரே குழுவினர் இயங்கியதால் வந்த விளைவுகள் இவை. உண்ணாவிதம் என்பது முதலில தன்னைத்தானே தூய்மைப்படுத்தி கொள்வது, ஆன்மபலத்தை அதிகரித்துகொள்வது, தன்னுடைய நோக்கங்களை யாரையும் காயப்படுத்தாமல் அவர்களின் மனதை உலுக்கிச் சிந்திக்கசெய்வது, இதன்மூலம் படிப்படியாக ஒரு மனமாற்றத்தை அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் ஏற்படுத்துவது என்பதேயாகும். எக்காரணம்கொணடும் உண்ணாவிரதபோராட்டம் என்பது எவரையும் நிர்பந்திக்கவோ, அச்சுறுத்தவோ பயன்படலாகாது. இவை தாம் காந்தி கடைப்பிடித்த உண்ணாவிரதப் போராட்டங்களின் அடிநாதமாய் இருந்தது.

ஆனால் அண்ணா குழுவினரோ பொறுமை இழந்துவிட்டனர். தங்களுக்கு திரண்ட பெரும் கூட்டத்தை கண்டு ஆளும் தரப்பு அடிபணியவேண்டும் என்று எதிர்ப்பார்த்தனர். ஒரே மாதத்திலோ, ஒரு வருடத்திற்குள்ளோ ஒரு வலுவான லோக்பால் சட்டம் உருவாகி அது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகிவிடும் என்று நம்பினர்.

உண்மையில் அண்ணா குழுவினர் தந்த அழுத்ததால் தான் மத்திய அரசு ஒரு லோக்பால் சட்டம் இயற்றவேண்டிய நிர்பந்ததிற்கு தள்ளப்பட்டது. ஊழல் புகார்கள் தரப்பட்டால் அது எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் கூட மூன்று மாதத்தில் பிரதமர் அலுவலகம் ஒப்புதல் தருவதென்ற முடிவுக்கு வந்தது. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஓரளவு அச்சங்கள் கூட ஏற்படலாயிற்று. ஆனால் அரசுகொண்டுவந்த லோக்பால் மசோதாவில் சில பலவீனங்கள் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. அதை வலப்படுத்துவதற்கு வருங்காலத்தில் வாய்ப்பு நிச்சயம் அமையும். அது வரை மக்கள் எழுச்சியையும், போராட்டத்தையும் அணையாமல் வளர்த்தெடுக்க வேண்டியது அண்ணா குழுவினரின் பொறுப்பாகும்.

ஆனால் தங்களுக்கு கூடிய கூட்டத்தின் பலமும், தங்களுக்கு இணையதளத்தில் கிடைத்துக்கொண்டிருக்கும் மாபெரும் வரவேற்பும் அண்ணா குழுவினரை நிதானமிழக்க வைக்கவிட்டதுபோலும். ஆளும் தரப்பு தங்களை கண்டு பயப்படவில்லை என்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த அணுகுமுறை தந்த ஏமாற்றம். அவர்களை ஆளுங்கட்சியின் மீதான வெறுப்புக்குத்தள்ளி யது. ஏமாற்றத்திற்கு, விரக்திக்கு வழிவகுத்தது முடிவில் திடிரென்று எழுந்த ஆவேச உணர்வில் அரசியல் இயக்கமாக மாறப்போகிறோம் என அறிவித்துவிட்டனர். இது அரசியல் இயக்கம் குறித்த புரிதல்கள் அண்ணா இயக்கத்தினருக்கு அறவே இல்லை என்பதையே காட்டுகிறது.

ஓர் அரசியல் இயக்கத்திற்கான ஆழமான அடித்தளம், அசாத்தியமான உழைப்பு, அனைத்து தரப்பு மக்களையும் வசீகரிக்கும் பக்குவம், இந்த நாட்டுமக்களின் பிரதானமான பிரச்சனைகள் பற்றிய புரிதல்கள் ..... போன்ற எந்த அம்சங்களும் இல்லாமல் மக்களிடமிருந்தே அரசியல் இயக்கத்திற்கான கொள்கைகளை, இலட்சியங்களை எழுதியனுப்புங்கள் என்று கேட்ககூடிய பலவீனமான தலைவர்களால் எப்படி வெற்றிகரமான அரசியல் கட்சியை கட்டி எழுப்ப முடியும்?.

மகாத்மா காந்தி காங்கிரஸுற்கு தலைமை ஏற்பதற்கு முன்பு தன்னை ஒரு மக்கள் தொண்டனாக பாவித்து, இந்தியாவின் மூளைமுடுக்கெல்லாம் பயணப்பட்டு, பலதரப்பட்ட மக்களை பார்த்து பேசி, அம்மக்களை மிக ஆழமாக புரிந்துகொண்டார். பிரிட்டீஷ் ஆட்சியில் பிரதிநிதித்துவம் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸை அரசியல் அதிகாரத்திலிருந்தே அந்நியப்படுத்தி தீண்டாமை ஒழிப்பு, ஹரிஜனசேவை, கிராமபுறநிர்மாணத்திட்டம், கதர் உற்பத்தி, இந்து முஸ்லீம் ஒற்றுமை... போன்ற பலதரப்பட்ட களப்பணியில் ஈடுபடவைத்தார் காந்தி
இப்படியாக அரம்பத்திலிருந்த காங்கிரஸின் அடையாளத்தையே மாற்றினார். அதே சமயம் எந்த கட்சியில் இருப்பவரும் காங்கிரஸுக்கு வந்து பணியாற்ற தடையில்லை என்ற ஜனநாயகத்தையும் ஏற்படுத்தினார். அதனால் தான் அக்காலக்கட்டத்தில் காங்கிரஸிலிருந்தே இருந்த ஒரு பிரிவினர் சுயராஜ்யா என்ற கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். மேலும் கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், இந்துமத ஆதரவு இயக்கத்தினர், முஸ்லீம்கள் போன்ற பலதரப்பட்ட கருத்து நிலைக்கொண்டவர்களும் காந்தி தலைமையிலான காங்கிரஸில் இருந்தனர்.
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு காங்கிரஸே நேரடி அரசியலில் ஈடுபட அனுமதித்தார் காந்தி.

ஆனால் தற்போது அண்ணா குழுவினர் காங்கிரஸை கடுமையாக எதிர்த்தன் மூலம் காங்கிரஸ் கட்சியிலுள்ள ஊழல் எதிர்ப்பாளர்களை தங்கள் இயக்கத்திற்குள் இணைந்து இயங்க முடியாமல் செய்துவிட்டனர். அனைத்து அரசியல் இயக்கங்களையும், அரசியல்வாதிகளையும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததன் மூலம் அவர்களிடமிருந்தும் அந்நியப்பட்டுவிட்டனர். இந்நிலையில் தங்கள் இயக்கத்தை மிகவும் சுருக்கிக்கொண்டனர்.

இது வரை ஊழல் எதிர்ப்பு என்ற உன்னதநோக்கத்திற்கானவர் என்ற அடையளத்தை மட்டுமே கொண்டிருந்த அண்ணாகுழு, அரசியல் களத்தில் உள்ள மற்ற கட்சிகளை எதிர்கொண்டு சமாளிக்கும் அளவுக்கும், நெலிவு சுளிவுகளோடு இயக்கத்தை வழிநடத்தி செல்லும்அளவுக்கும் தங்களை தகுதிப்படுத்தி கொள்ளவில்லை.

அண்ணா குழுவினர் டெல்லி, மும்பை, சென்னை போன்ற மாநகரங்களின் படித்த மேல்தட்டு மக்களிடம் மட்டுமே ஆதரவு பெற்றுள்ளனர். இது வரை இவ்வியக்கம் பரந்துப்பட்ட இயக்கமாகவோ, பாமரர்கள் பங்கெடுத்த இயக்கமாகவோ வளர்க்கப்படவில்லை. பெருநகரங்களை தவிர்த்து சிறுநகரங்கள் சிற்றூர்கள், கிராமங்கள், என மக்களை சந்தித்ததில்லை.

அதோடு ஊழலுக்கு அப்பால் இந்தியாவை அலைகழிக்கும் ஜாதி, மத துவேஷங்கள், மதுகொடுமைகள், மக்களை கொள்ளையிடும் வர்த்தகபோக்குகள், விவசாயிகளின் பிரச்சனை, சிறுகுறுந்தொழில்கள் நசிவு, வறுமை, வேலையின்மை.... போன்ற மக்களின் அடிப்படை வாழ்வாததிற்கான போராட்டங்களை பற்றி இவர்கள் இது வரை அக்கரைக்காட்டியதில்லை. இவை குறித்து இவர்கள் கொண்டுள்ள கருத்து நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியதில்லை.

காந்திய அரசியல் இயக்கத்திற்கான பண்புகள் சில உள்ளன.
ஃ அது எந்த ஒரு அரசியல் கட்சியையோ, தனிநபர்களையோ எதிரியாக பாவிக்காது. துவேஷமாகவோ வெறுப்பாகவோ பேசாது.

ஃ எல்லா அரசியல் இயக்கங்களுக்குள்ளும், பலதரப்பட்ட தனிநபர்களுக்குள்ளும் தன்செயல்பாடுகளால் தொடர்ந்து நல்அதிர்வுகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்திய வண்ணமிருக்கும். இந்த நோக்கங்களுக்கு மாறானவர்களிடம் கூட ஒரு போதும் துவேஷம் பாராட்டாது. அதோடு பாமரமக்களிடம், ஏழை எளியோரிடம் உறுதியான பிணைப்பை கொண்டிருக்கும்.

ஃ எத்தகைய எதிர்ப்பையும், அவமானத்தையும், துன்பத்தையும் இன்முகத்துடன் ஏற்கும்.
மேற்படி பண்பு நலன்கள் தங்களுக்கோ, தங்கள் இயக்கத்திற்கோ இருக்கிறதா? என்ற சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொண்டு அதற்குபிறகு அரசியலுக்குள் நுழையட்டும் அண்ணாஹசாரே குழுவினர்.


                                                                                                                                                05-08-2010




No comments: