Friday, November 2, 2012

சிறப்பு காவல் இளைஞர் படை

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

தீராத காவலர் பற்றாக்குறை...
அதிகரித்து வரும் குற்றச்செயல்கள்...
நிலமையை சமாளிக்க தமிழக காவல்துறைக்கு உதவியாக 50,000 இளைஞர்கள் கொண்ட துணை காவல்படை ஒன்றை உருவாக்க இருப்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இவர்களுக்கு ரூ 7,500 மதிப்பூதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வேலையின்றி இருக்கும். 18வயது முதல் 30 வயதுவரையிலுமுள்ள இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, போக்குவரத்து நெரிசல்களை ஒழுங்குபடுத்துவது.... உள்ளிட்ட பல பணிகளில் இவர்கள் காவல்துறைக்கு உதவியாக செயல்பட்டு வருவார்கள் என்றும். ஒரு வருடம் நிறைவுறும் போது இவர்களில் தகுதியானவர்களை காவல்துறை முறைப்படி தேர்வு நடத்தி ஈர்த்து கொள்ளும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாகவே காவலர் பற்றாகுறை ஒரு பெரும் குறையாக இருந்து கொண்டிருக்கும் சூழலில் இப்படியொரு அதிரடி அறிவிப்பு வந்துள்ளது. வி.ஐ.பிகளுக்கான பந்தோபஸ்த்து, நீதிமன்றப்பணிகள், அரசியல்கட்சி மற்றும் மக்கள் இயக்கங்களின் கூட்டங்கள், போராட்டங்களுக்கான பாதுகாப்புபணிகள்... என்பதாக பல்வேறு பணிகளில் காவலர்கள் ஈடுபடுத்தப்படும் போது மக்கள் பிரச்சினைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல்துறையில் எண்ணிக்கை பலம் உண்மையில் தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

நல்ல நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் அரசின் நோக்கம் சிதைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் தரப்பிலும், ஏன்... காவல்துறை தரப்பிலுமே கூட வெளிப்படுகிறது.
முறையான பணி நியமனம் பெறாமல் காவல்துறைக்குள் வருபவர்கள் மிகக்குறைந்த சம்பளத்தை காரணம்காட்டி, 'கரப்சனில்' ஆர்வம் காட்டினால் என்ன செய்வது? என்ற பொதுவான கவலையும் உள்ளது.

ஏற்கெனவே 'Friends of Police' என்ற ஒரு முயற்சி நல்ல நோக்கத்தோடு நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதில் சம்மந்தப்பட்டவர்கள் காலப்போக்கில் காவல்துறையுடன் தங்களுக்குள்ள நெருக்கத்தை கொண்டு பற்பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அது தோல்வியில் முடிந்தது.

ஆகவே இந்த துணை காவல்படைக்கான தேர்வு எந்தவித குற்றச்சாட்டுகளும் சுமத்த முடியாத வெளிப்படை தன்மையுடன், மிக நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தலைமையில், வழிகாட்டுதலில் நடக்கவேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் லட்க்கணக்கான இளைஞர்களுக்கு முறைப்படி முன்னுரிமை வழங்கப்படும் வகையிலும், உடல்தகுதி, நடத்தை தகுதி போன்றவை கவனத்தில் கொண்டும் செயல்பட்டால் அரசின் நோக்கம் நிறைவேறும். குற்றச்சாட்டுகளுக்கு இடமிருக்காது அதோடு தற்போது காவலர் பற்றாக்குறைக்கு மற்றொரு முக்கியகாரணமாக கருதப்படுவது ஆர்டர்லி முறையை அடியோரு ஒழித்து சம்மந்தப்பட்ட காவலர்களை மக்கள் பணிநில் ஈடுபடுத்தும் உறுதியான முடிவை நமது முதலமைச்சர் எடுக்கும் பட்சத்தில் அது மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுத்தரும்.

இதே சமயத்தில் அதிக பணியாளர்கள் பற்றாக்குறை நிலவும் சுகாதாரத்துறை, கல்வித்துறை, உள்ளாட்சி துறைகிளின் மீதும் முதல்வரின் கருணைப் பார்வை விழவேண்டும். பணியாளர் பற்றாக்குறை இங்கும் தீர்க்கப்பட்டு மக்கள் நலபணி சிறக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த மாதிரியான மதிப்பூதிய அணுகுமுறைகள் அவசரத் தேவைகளுக்கான தற்காலிக தீர்வுதானேயன்றி நிரந்தரத் தீர்வாகாது என்பதால் முறைப்படியாக நிரந்தரப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
31-10-2012

No comments: