Wednesday, November 7, 2012

குதர்க்க வாதங்கள் மலிவான விளம்பரங்கள்....

                                                                                                                     -சாவித்திரிகண்ணன்





எதற்கெடுத்தாலும் சர்ச்சையை கிளப்புவது...
குற்றம் காண்பது,குதற்க்கமான அர்த்தங்கொள்வது.... என்று அவர்களும் புறப்பட்டுவிட்டால் நாட்டில் கருத்துச் சுதந்திரமும், பேச்சுசுதந்திரமும் ஒடுக்கப்படுவதாகத் தான் அர்த்தமாகும்!

பா.ஜ.க தலைவர் நிதின்கட்கரி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது
"அறிவுத்திறன் என்பது அனைவருக்கும் ஒன்று தான். மனிதன் அதை எவ்வாறு செயல்படுத்துகிறான் என்பதில் தான் வேறுபாடு. சுவாமி விவேகானந்தருக்கும், தாவூத் இப்ராஹிம் முக்கும் ஒரே விதமான அறிவுத்திறன் தான்! விவேகானந்தர் அதை அனுமதி, நல்லிணக்கத்திற்கு பயன்படுத்தினார். தாவூத்தோ பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறார்" என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் அவரது கொடும்பாவியை காங்கிரசார் எரித்துக் கொண்டுள்ளனர். துறவியையும், பயங்கரவாதியையும் ஒப்பிடுவதா? அப்படியானால் கசாப்பையும், கட்கரியையும் ஒப்பிடலாமா? என காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

இப்படி குதர்க்கமாக அர்த்தம் கற்பித்துக் கொணடு விண்சண்டைக்கு இழுக்கும் அபத்தமான நாடகங்கள் எலக்ரானிக் மீடியா வளர்ச்சி தரும் விளம்பரங்களுக்காக அடிக்கடி அரங்கேறி வருகிறது.

"நெருப்பை கொண்டு தீபத்தையும் ஏற்றலாம்
வீட்டையும் எரிக்கலாம்"
என்றொரு வழக்கு மொழி உண்டு.
இதையே கவிஞர் கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில்
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ...?
எனகேள்வி எழுப்பினார்.

நல்ல வேளையாக அன்று தொடங்கி இன்று வரையாருமே கவிஞர் தீபத்தை பழித்து பாட்டெழுதிவிட்டார்... என போர்கொடி தூக்கவில்லை.

நிதின் கட்கரிக்கு தற்போது நிகழ்ந்தது தான் சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிக்கும் இந்து இயக்கங்களாலும், பா.ஜ.கவினராலும் நிகழ்ந்தது.

"நமது நாட்டில் கழிவறைகளைக் காட்டிலும் கோயில்கள் அதிகமாக உள்ளன. கோயில்களை விட கழிப்பறைகள் தான் மக்களுக்கு அதிகம் தேவைப்படுகின்றன" என்ற ஜெய்ராம் ரமேஷின் பேச்சை கோயில்களுக்கு, இந்து மதத்திற்கு எதிராக பேசப்பட்டதாக குதர்க்கம் சொன்னார்கள்.

இந்த விவகாரங்களை விபரமறிந்தவர்கள் பார்வையில் பார்க்கும் போது, நிதின்கட்கரியாகட்டும், அவர் சம்மந்தப்பட்ட கட்சியாகட்டும் சுவாமி விவேகானந்தர் மீது மிகப்பெரிய மரியாதை கொண்டவர்கள் என்பது உலகறிந்த உண்மை அதே போல் ஜெய்ராம் ரமேஷ் நாத்திகவாதியல்ல, கடவுள் துவேஷியல்ல. கழிப்பறையில்லாததால் ஏற்படும் பெரும் சுகாதாரக்கேடுகளை உணர்த்தவே அவர் இவ்வாறு பேசினார் என்பது தெளிவு.

பொறுப்பில்லாத பேச்சுகளை விமர்சனத்திற்கு உட்படுத்தலாம், தவறில்லை.

"அரிசி, பருப்பு, கோதுமை, காய்கறிகள் விலைகளெல்லாம் அதிகரிப்பது மிகவும் நல்லது. இதனால் விவசாயிகள் தானே பலனடைகிறார்கள்..." என்று மத்திய அமைச்சர் பெனிபிரசாத் பேசியதன் மூலம் விவசாயிகள் மற்றும் நாட்டு நடப்புகள் குறித்த அவரது அறியாமை வெளிப்பட்டது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் எம்.எம்.மணி அவர்கள் ஒரு மேடையில் பேசும் போது, தங்களது கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனி இயக்கம் கண்ட R.M.P தலைவர் டி.பி. சந்திரசேகரன் சொல்லப்பட்டதை நியாயப்படுத்தி, "துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்டினோம்" என்றார். அந்த பேச்சு ஏற்படுத்திய சர்ச்சைகளையும், கொந்தளிப்பையுமடுத்து அவர் போலீசாரின் தேடலுக்களாகி தலைமறைவாகும் நிலை ஏற்பட்டது.

அந்த பேச்சின் மூலம், அவர் பாடம் பெற்றிருப்பார் என நாம் நம்பலாம்! பொறுப்பேற்ற பேச்சுகள் அவரவர்களை சரியாக அடையாளம் காட்டுவது போலவே, தப்பர்த்தம் கண்டுபிடிக்கும் குதர்க்கவாதிகளும் மலிவான விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் மரியாதையை இழக்கிறார்கள்.


NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
06-11-2012







No comments: