Friday, November 2, 2012

ஊழல் எதிர்ப்பும், வன்முறையும்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

ஊழலுக்கு எதிரான மக்கள் எழுச்சி வேகம் பெற்று வருகிறது. அந்த எழுச்சியின் வேகம் அரசியல்வாதிகளை ஆத்திரப்படவைத்து நிதான மிழக்க வைக்கிறது என்பதற்கு தற்போது உத்திரபிரேச மாநிலத்தின் பருக்காபாத்தில் நடந்த வன்முறைகளே அத்தாட்சி!


மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் ஊழலை கண்டித்து ஊழலுக்கு எதிரான இயக்கத்தினர். இதற்கு மக்கள் அமோக ஆதரவளித்தற்கு அத்தாட்சி திரண்ட கூட்டம் தான்!

இது மட்டுமின்றி பாரத விவசாய சங்கத்தினர் சுமார் 1400பேர் போராட்டங்களுக்கு பாதுகாப்பளிக்க தன்னார்வ தொண்டர்களாக ஊர்வலத்தில் பங்கேற்றனர். நடக்கும் ஊழல்கள் சாதாரணவிவசாயிகளை கூட எவ்வாறு உத்வேகம் கொள்ள வைத்துள்ளது என்பதை நாம் இதிலிருந்து உணரலாம்!

உத்திரபிரதேச காவல்துறை பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளதிலிருந்தே இது முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்படும் ஜனநாயக ரீதியான போராட்டம் என்பதை உணர்த்துகிறது.

ஜனநாயக நாட்டில் அதிகார பலத்தால் சில அநீதிகள் வலுக்கும் போது அதற்கு எதிரான குமுறல்களை மக்கள் வெளிப்படுத்தும் வடிகால்களே இது போன்ற போரட்டங்கள்! எந்த ஆளும்கட்சியும் இதிலிருநது தப்பியதில்லை. மாபெரும் தலைவர்களான நேரு, பட்டேல் போன்றவர்களுக்கு எதிரான போராட்டங்கள் நடந்த போது கூட ஆவர்கள் தங்கள் தொண்டர்களை கொண்டு போராட்டக்காரர்களை தாக்கியதில்லை! தொண்டர்களே உணர்ச்சிவசப்பட்டாலும் கூட அதை அவர்கள் அனுமதித்ததில்லை!

ஆனால் மத்திய சட்டத்துறை அமைச்சராயிருந்த சல்மான் குர்ஷித் அவர்கள் "தனக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் எப்படி பாதுகாப்பாக திரும்பி போவார்கள் பாரத்துக் கொள்கிறேன். இது வரை பேனாவில் மையை நிரப்பிய நான் ரத்தத்தை நிரப்பவும் தயங்கமாட்டேன்" என ஏற்கெனவே கூறியிருந்தார்.

அவரது இந்த பேச்சு இந்தியா முழுமையிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு இதையடுத்து அமைச்சரவை மாற்றத்தின் போது அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக்கப்பட்டார்!

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சட்ட அமைச்சுருக்கே உறுதிப்பாடு இல்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாகவே அவரது பேச்சு ஊடகத்தால் விமர்சிக்கப்பட்டது. இவ்வித கடும் விமர்சனங்களையடுத்து சல்மான்குர்ஷித் தனக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்தில் வன்முறை இடம்பெற அனுமதிக்க மாட்டார் என்றும் நம்பப்பட்டது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக மக்கள் மீது போலீஸ் பாதுகாப்பையும் மீறி கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது போன்ற சட்டவிரோத அராஜகங்கள் ஊழலுக்கு எதிரான மக்களின் உத்வேகத்தை அதிகப்படுத்தவே உதவும்.

வன்முறையில் ஈடுபட்டவர்களையும், தூண்டிவிட்டவர்களையும் சட்டப்படி நடவடிக்கைகளுக்கு உட்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் மக்களிடமிருந்து ஆக்ரோஷமாக வெளிப்பட்டுவருகிறது.
தவறு சுட்டிக்காட்டப்படும் போது திருத்திக்கொள்ள முன்வருபவர்கள் தப்பிக்க வழியுண்டு. ஆத்திரப்படுபவர்கள் தவறுக்கு மேல் தவறாக செய்துகொண்டே போவார்கள்! இது தான் இப்போது நடந்துள்ளது. இப்படிப்ட்டவர்களை ஆட்சி அதிகாரத்தால் கூட காப்பாற்ற முடியாது. தன்னைத்தானே கட்டுப்படுத்த இயலாதவர்களை மன்னன் கட்டுபடுத்த மறந்தாலும் மக்கள் தீர்ப்பு கட்டுப்படுத்தியே தீரும் என்பது தான் கடந்த கால வரலாறு.


NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
01-11-2012

No comments: