Monday, March 18, 2013

இந்து மலர்ச்சி மாநாடும் - துறவிகளின் கடமைகளும்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

மார்ச் 2,3 தேதிகளில் திருச்சி கொள்ளிடக்கரையில் இந்து மறுமலர்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் 200க்கும் அதிகமான மடாதிபதிகளும் 2000க்கும் மேற்பட்ட இந்து மதத்துறவிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

பல்கலைக்கழகங்கள் இல்லாதிருந்த அந்த காலகட்டங்களில் தமிழகத்தில் சைவ, வைணவ ஆதினமடங்களே அன்று தமிழ் ஆய்வை வளர்த்தன.
திருவாவடுதுரை ஆதினத்தின் உதவியால் தான் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் கரையானுக்கு பலியாகவிருந்த ஒலைச்சுவடிகளையெல்லாம் தேடிக் கண்டடைந்து பதிப்பித்து சங்க இலக்கியங்களை சாகா இலக்கியமாக்கினார்.

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பெரும் காப்பியங்களெல்லாம் தமிழர்களின் மீள்பார்வைக்கு வர உ.வே.சாவும் அவருக்கு உதவிய ஆதினகர்த்தர்களுமே காரணம்!

பக்தியை, வளர்க்கவும், கோவில்களை பராமரிக்கவும், கல்விச்சாலைகளை நடத்தவும், இலக்கியங்களை பாதுகாக்கவும், புலவர்களை போற்றி போஷிக்கவும் ஒரு காலத்தில் சைவ, வைணவ மடாலயங்கள் ஆற்றிய தொண்டு மறக்க கூடியதல்ல.

தற்போது நடக்கவுள்ள இரு நாள் மாநாட்டில் சாதி அடிப்படையில் பிரிந்து கிடக்கும் இந்து சமயத்தை ஒற்றுமைபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

நல்லது, வரவேற்கத்தக்கது.
மற்றொரு நோக்கமாக சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் சலுகைகள், முக்கியத்துவம் இந்துக்களுக்கு வேண்டும் என்பதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை நியாயமானதா? நியாயமற்றதா? என்ற விவாதத்திற்குள் நாம் செல்ல விரும்பவில்லை.

ஆனால் 'அரசியல்' கோரிக்கையை ஆன்மீகவாதிகளும் பேசவேண்டுமா? 'அடுத்து இனி ஒரு பிறவியே வேண்டாம்' - என்று நினைப்பவர்களை கடைத்தேற்ற வேண்டிய கடமை ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமே உள்ளது.

இன்னும் நாம் நம்மையே சுயபரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என இந்துக்கள் முயன்றால் மாற்று மதங்கள் பரவியதால் ஏற்பட்ட நிர்பந்தங்களே பல பிரிவினராய், பல நம்பிக்கைகளை கொண்டவர்களாய் இருந்த மக்களை இந்து மதமென ஒற்றை கொடையின் கீழ் ஒன்று படுத்தியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட தடைகளும் விலகி கோவில் பிரவேசங்கள் நடந்தன.

2000க்கு மேற்பட்ட துறவிகள், ஆன்மீகவாதிகள் கூடும் புனிதமான மாநாடு மக்களுக்கு ஆன்மீகச் சிந்தனை தழைத்தோங்க உதவட்டும்.

ஆதினங்கள் தங்கள் பழைய பாரம்பரியத்தை மீட்டெடுத்து மீண்டும் ஆன்மீகத் தொண்டாற்றட்டும்.

ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக தமிழகத்திலுள்ள சுமார் 40க்கு மேற்பட்ட ஆதினங்களில் பெரும்பாலானவர்கள் கோயில், வழிபாடு என்றிருந்த நிலைமை மாறி கோர்ட், கேஸ் என்று அலைந்த வண்ணம் உள்ளனர்.
'தனக்குற்ற துன்பத்தை பொறுத்தலும், மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாதிருத்தலுமே துறவின் அடையாளம்' என்கிறார் திருவள்ளுவர்.
இப்பண்புகள், குணநலன்கள் ஆன்மீகவாதிகளிடமிருந்து அல்லல்படும் மக்களுக்கு கிடைக்கவேண்டுவதாக!

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
28-2-2013

No comments: