Friday, March 8, 2013

காவல்துறை மக்களுக்கானதாகட்டும்


                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

காவல்துறை என்பது யாருக்காக?
ஆட்சியாளர்களுக்கு அனுகூலமாக இயங்கவா?
பொதுமக்களை பாதுகாக்கவா?
என்ற கேள்விகள் மக்கள் மனங்களில் அடிக்கடி தோன்றி மறைகின்றன.

'பொதுமக்களின் நண்பனாக காவல்துறை விளங்கவேண்டும்' என்று நம் ஆட்சியாளர்கள் பேச்சளவில் சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் ஆட்சியாளர்கள், அதிகாரமையத்தில் இருப்பவர்களின் சேவைக்காகத் தான் காவல்துறை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது என நமது மத்திய உள்துறை அமைச்சகத்தின் BPRD வெளியிட்ட புள்ளிவிபரத்தில் தெரியவருகிறது.

2010ஆம் ஆண்டில் மட்டுமே 50,059 காவல்துறையினர் 16,778 வி ஐ பிக்களின் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு மட்டுமே இவ்வளவு பணியாளர்களும் மக்கள் வரிப்பணமும் செலவாகிக் கொண்டிருக்கிறது.

இவை தவிர, இது போன்ற வி.ஐ.பிக்களின் பொதுகூட்டங்கள், அவர்கள் முக்கிய இடங்களுக்குச் செல்லும் போது வழிநெடுக நிறுத்தப்படும் காவலர்கள்..., என்று கணக்கிட்டால் ஏறத்தாழ காவல்துறையின் பெரும்பகுதி அதிகாரமையத்தில் உள்ளவர்களின் பாதுகாப்பிற்கே பயன்படுகிறது என தெரியவருகின்றன.

சில சமயங்களில் பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்கச் சென்றால் அங்கே அதை பெற்றுக் கொண்டு விசாரித்தறிய யாரும் இருப்பதில்லை.

அப்படியே இருந்தாலும் அப்புகாரின் மீதான நடவடிக்கைகளில் ஈடுபட காவலர்கள் இல்லை.

செல்வாக்கானவர்கள் புகார்கள் தந்தால் கூட சில சமயங்களில் தொடர்ச்சியாக அந்த புகாரில் புலனாய்வுகள் மேற்கொள்ள காவலர்களுக்கு நேரம் அனுமதிப்பதில்லை. இத்தனைக்கும் பணிநேர வரை முறையில்லாமல், விடுமுறையில்லாமல் காவலர்கள் வேலைவாங்கப்படுகிறார்கள் என்பதும் கவனத்திற்குரியது.

இதனால் குடும்பத்திற்கும் - காவலர்களுக்குமுள்ள உறவே விரிசலடைகிறது. அதேபோல் பொதுமக்களுக்கும் - காவல்துறைக்குமான இடைவெளியும் அதிகரித்துவிட்டது.

இந்த கொடுமை போதாது என்று 'ஆர்டர்லி' என்ற உயர்அதிகாரிகளின் வீட்டுவேலைக்கு காவலர்கள் பயன்படுத்தப்பட்டு வருவது பல காலமாகத் தொடர்கிறது.

இதனால் தற்போது தமிழகத்தில் வருடத்திற்கு 20,000திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன.

சென்ற ஆண்டு மட்டும் 1747 கொலைகள் நடந்துள்ளன.

இவை தவிர வழிப்பறி கொள்ளைகள், அடிதடிகள், பாலியல் வன்முறைகள், கோஷ்டிமோதல்... போன்ற சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் நிகழ்கின்றன...
'சட்டம் - ஒழுங்கு என்ன செய்துவிடும்?' என்ற தைரியம் குற்றவாளிக்கு ஏற்பட வாய்ப்பளித்து விடக்கூடாது.

காவல்துறையின் போதாமைகள் கொஞ்சநஞ்சமல்ல. காவல்துறை நவீனப்படுத்தப்பட்டால் மட்டும் போதாது.

காவல்துறை ஆட்சியாளர்களை அதிகம் சார்ந்திராமல் தன்னாட்சி அதிகாரத்துடனும் சுயப்பொறுப்புடனும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கவேண்டும்.

காவல்துறை தொடர்பான ஆட்சியாளர்களின் பார்வை அடியோடு மாறவேண்டும். காவல்துறையினர் கண்ணியமாக நடத்தப்பட்டால் தான், காவல்துறையினர் மக்களை கண்ணியமாக நடத்துவார்கள்! 
பிரிட்டிஷ் ஆட்சியில் 1888ல் உருவாக்கப்பட்ட நிலையிலேயே - ராஜவிசு வாசத்தை பேணும் வகையிலேயே - இன்னும் நம் காவல்துறை வைக்கப்பட்டிருக்கிறது!

சமீபத்தில் ஒரு வழக்கில் சென்னை உயர்நிதமன்றம், 'சென்னை காவல்துறை ஆணையர் ஒன்றும் சென்னைக்கு மன்னரல்ல, மக்கள் பணிசெய்யக்கடமைப்பட்டவர் என்பதை உணரவேண்டும்' எனக்கூறியது.

யாருக்கேனும் அடிமையாக இருக்க நிர்பந்திக்கப்படுவர்கள், காலப்போக்கில் தாங்களும் சிலரை அடிமைப்படுத்திப் பார்க்க ஆசைப்படுவார்கள்.
நமது காவல்துறையின் இன்றைய நிலை இப்படித்தான் இருக்கிறது! அவர்களை ஆட்சியிலிருக்கும் குறிப்பிட்ட சிலரின் விசுவாசத்திலிருந்து மீட்டெடுத்து மக்களின் விசுவாசியாக - ஜனநாயக காவலர்களாக மாற்றவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
08-2-2013

No comments: