Saturday, March 9, 2013

கந்துவட்டித் தற்கொலைகள்


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

சமீபத்தில் தமிழக சட்டசபையில் பேசிய தே.மு.தி.க எம்.எல்.ஏபார்த்தீபன், "கந்துவட்டியை ஒழிக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் கந்துவட்டி ஒழிந்த பாடில்லை.... கந்துவட்டி கொடுமை தாங்காமல் ஏழை எளிய மக்கள் கதறுகிறார்கள்.." என பேசியுள்ளார்.

தொழில் அதிபர் தற்கொலை, விவசாயி தற்கொலை, குடும்பத்தோடு தற்கொலை... என வெளியாகும் செய்தியின் மூலத்தை தேடினால் அது கந்துவட்டியில் சென்று முடிகிறது.

2003-லேயே தமிழக முதல்வர் கந்துவட்டியை ஒழிக்க அவசரசட்டம் ஒன்றை கொண்டுவந்தார். தற்போதைய அரசும் கந்துவட்டி வசூலிப்போர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்படுவர் என அறிவித்தது.

ஆனால் கந்துவட்டி கொடுமைகள் குறைந்தபாடில்லை.
அதிலும் பெரும்பாலும் ஏழை எளியமக்களே இதில் சிக்கி மீளமுடியாமல் தவிக்கின்றனர்.

நமது நாட்டில் விவசாயிகள் பலர் வாங்கிய கடனுக்கு நிலத்தையே பறிகொடுத்துள்ளனர். இது போல் வீட்டை, நகைகளை, சொத்துகளை இழந்தோர் எண்ணிக்கை சொல்லிமாளாது. பல சமயங்களில் இருப்பதையெல்லாம் பறித்துக் கொண்டாலும் கூட கந்துவட்டி கும்பல் திருப்தி அடையாமல் தொடர்ந்து மிரட்டுவதால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கந்துவட்டிகளில் இருந்து பெண்களை விடுவிக்கும் வாய்ப்பாக மகளிர் சுய உதவி குழுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கந்துவட்டி கொடுமைகள் கணிசமாக குறைந்த தென்னவோ உண்மை தான்!
ஆனால் சில மகளிர் குழுக்களே கந்துவட்டி வசூலிப்பவர்களாகவும், கந்துவட்டியில் சிக்கித் தவிப்பவர்களாகவும் செய்திகள் வருகின்றன.

அவசரத்தேவைகளுக்கு மக்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவ முன்வருகிறார்கள் கந்துவட்டிகாரர்கள்! சில சமயங்களில் அவர்களே சிலருக்கு எமனாகிப் போகிறார்கள்!
காய்கறிகடை, பழக்கடை, இளநீர்வியாபாரம், பெட்டிக்கடை, தள்ளுவண்டி, கூலித்தொழில்... போன்ற தரப்பினர் கந்துவட்டியைப்பெற்று கஷ்டப்பட்டு தொழில் செய்கின்றனர். கரணம் தப்பினால் மரணம் என்பது போல இதில் வட்டிகட்டத் தவறும் பட்சத்தில் விரும்பத்தகாத விளைவுகளை அனுபவிக்கின்றார். விபத்து, மருத்துவம், கல்வி, திருமணம், விஷேசம் போன்றவற்றிக்கு கடன்பெற்றவர்கள் ஒழுங்காக திரும்ப செலுத்தாத பட்சத்தில், பெரும் அவமானங்களை சந்திக்கின்றனர்.

வட்டி, வட்டிக்குவட்டி, ஸ்பீடுவட்டி, மீட்டர்வட்டி, ரன்வட்டி, தண்டல்வட்டி, வாரவட்டி, தினவட்டி... என பலதரப்பட்ட வட்டி முறைகள் சந்தையில் நிலவுகின்றன...! இந்த வட்டியை தருபவர்களும், பெறுபவர்களும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பலனடைந்து கொள்ளும் போது பிரச்சினை இல்லை.

ஆனால், பிளாக்மெயில் செய்வதற்கென்றே கடன் கொடுப்பவர்கள் உண்டு.
வட்டியும், அசலும் வந்த பிறகும் தொல்லை கொடுப்பார்கள் சிலர்! இதில் தான் தற்கொலைகள் சம்பவிக்கிறது.

'கந்துவட்டி கடும் குற்றம்' என பார்வையில் படும்வகையில் பல இடங்களிலும் அரசாங்கம் விளம்பரப்படுத்தவேண்டும்.

'உழைப்பில்லாமல் வட்டியில் ஈட்டும் பணம் பாவத்தின் சம்பளம்' என்றே இந்து, இஸ்லாம், கிறிஸ்த்துவம் உள்ளிட்ட மதநூல்கள் கூறுகின்றன!
பிறரின் துயரத்திற்கு, சாவிற்கு குடும்பத்தின் அழிவிற்கே காரணமாகும் கந்துவட்டிகாரர்களை கடும் தண்டனைக்கு உட்படுத்தவேண்டும். 

அதே சமயம் எந்த சட்டத்தாலும், தண்டனைகளாலும் கந்துவட்டியை தடுத்துவிடமுடியாது.
தருபவர்களின் மனசாட்சியும், பெறுவர்களின் விழிப்புணர்வும், விவேகமுமே இதற்கு தீர்வாக முடியும்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
12-2-2013

No comments: