Friday, October 18, 2013

சேவை பெறும் உரிமைசட்ட அமலாக்கம் எப்போது?



                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

தகவல்பெறும் உரிமைசட்டத்தைப் போலவே சேவை பெறும் உரிமைசட்டம் ஒன்றும் நமது மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

டிசம்பர் 2011ல் இது பாராளுமன்றத்தில் அமைச்சர் நாராயணசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிறகு பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பபட்டது.
அதில் நிறைய திருத்தங்கள், மாற்றங்களை நிலை குழு பரிந்துரைத்தது.

இதனை மார்ச் 2013ல் மத்திய அமைச்சரவை பரிசீலித்து ஒப்புதல் தந்தது.

ஆனபோதிலும் இது, இன்னும் அமலாகாமல் தொங்கலில் விடப்பட்டுள்ளது. இது அமலாகும் பட்சத்தில் 11அரசுதுறைகளில் 250சேவைகளை காலதாமதமில்லாமல் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் - அதாவது 15நாட்களிலிருந்து 30நாட்களுக்குள் மக்கள் பெறமுடியும்.

ரேஷன்கார்டு, ஜாதிச்சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட்,ஓய்வூதியம், திரும்பப்பெறும் வருமானவரிபிடித்தம் போன்ற மக்களின் அடிப்படையான, அத்தியாவசியமான தேவைகளை குறிப்பிட்ட குறைந்தபட்ச காலக்கெடுவிற்குள் நிறைவேற்றியே ஆக வேண்டும்.

இந்தச்சட்டம் - சேவை பெறும் உரிமைசட்டம் - அமலாகுமானால் இந்திய குடிமக்களின் கணிசமான பிரச்சினைகள், அரசு அலுவங்களால் ஏற்படும் மன உளைச்சல்கள் முடிவுக்கு வந்துவிடும் என நம்பப்படுகிறது.

அண்ணாஹசாரே, அரவிந்த் கேஜ்வரிவால், லோகீசத்தாகட்சியினர் போன்ற சமூக ஆர்வலர்களாலும், அமைப்புகளாலும் சேவைபெறும் உரிமைசட்டம் வலியுறுத்தப்பட்டதன் விளைவாக இந்தியாவில் 14மாநில அரசுகள் இத்திட்டத்தை அமலாக்க முன்வந்துள்ளன.

இதில் மத்திய பிரதேச பா.ஜ.க அரசு 2010 -லேயே இந்த சட்டத்தை அமலாக்கத் தொடங்கி, அதில் சிறப்பான முக்கியத்துவம் அடைந்தவகையில் 2012ல் ஐ.நா.சபையே பாராட்டி விருது வழங்கியுள்ளது. இதேபோல் கேரளாவும், பீகாரும்2011முதல் நன்றாக அமல்படுத்திவருகின்றன. கர்நாடக அரசு இதில் கணிசமான அளவு முன்னேறி வருகிறது. உத்திரபிரதேசம், டெல்லி, ஹரியானா, ஜம்முகாஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரகாண்ட், கேரளா, ஒரிசா, அஸ்ஸாம் போன்றவை சென்ற ஆண்டில் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. மேற்குவங்கமும், குஜராத்தும் இந்த ஆண்டு முதல் இந்த சேவைபெறும் உரிமைசட்டத்தை அமலாக்க ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளன.

இச்சட்டம் அமலானால் லஞ்சம், ஊழலுக்கு இடமிருக்காது. ஏனெனில் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சேவைதர மறுக்கும் அரசு ஊழியர் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதமாக ரூ250 தன் சம்பளத்திலிருந்து தந்தாகவேண்டும். இந்த அபராதம் ரூ 50,000வரை கூட சம்பந்தப்பட்ட விவகாரத்தை பொறுத்து வேறுபடும்.

எனவே கடமையை கண்ணியமாக செய்தேயாக வேண்டிய கட்டாயம் அரசு ஊழியர்களுக்கு நிர்பந்திக்கப்படுகிறது.

ஒவ்வொரு அரசு துறைகளும் நோட்டீஸ்போர்டில் தங்களின் சேவைவிபரத்தை வெளியிடவேண்டும். ஒவ்வொருதுறையிலும் இதற்கான அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும். அவர் மக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நம்நாட்டில் சில தனியார் பீட்சா விற்கும் நிறுவனங்கள் கூட, 'உங்கள் தொலைபேசி அழைப்பிற்கு இணங்க 30நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்கிறோம். இதில் காலதாமதமானால் காசில்லாமல் இலவசமாகவே நீங்கள் பெறலாம்' என விளம்பரம் செய்யும் போது, மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசுகள் இதைக்காட்டிலும் வேகமாக, விசுவாசமாகவல்லவா செயல்படவேண்டும்.

ரகுராமராஜன் கமிட்டி இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக தமிழகத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
பல துறைகளில் முன்னிலையில் விளங்கும் தமிழகம், மக்களுக்கு சேவையை உறுதிபடுத்துவதிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கவேண்டும் என்ற விருப்பம் தமிழக மக்களுக்கு ஏற்படுவது இயல்புதானே!
அரசு ஊழியர்களிடையே வெளிப்படைத் தன்மை, கடமை உணர்ச்சி, பொறுப்பேற்கும் மனோபாவம் போன்றவற்றை நிர்பந்திக்கும் சேவைபெறும் உரிமைசட்டம் தமிழகத்தில் அமாலகும் நாள் எந்நாளோ?

தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
03.10.2013

No comments: