Tuesday, July 10, 2012

வரவேற்போம் - பொது நுழைவுத்தேர்வை!



-சாவித்திரிகண்ணன் 

 "பொது நுழைவுத்தேர்வுக்குள் அனைத்து ஐ.ஐ.டிக்களும் அடுத்த ஆண்டு வந்துவிடும்" என மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில்சிபில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பகிரங்கமாக எதிர்த்துள்ளதன் மூலம் இரண்டாண்டுகளாக மத்திய அரசுக்கும் சில ஐ.ஐ.டிக்களுக்கும் இடையே நிலவிய பனிப்போர் பரவலான விவாதத்திற்கு வந்துள்ளது.

 "ஐ.ஐ.டி என்பவை தன்னாட்சி அதிகாரம் பெற்றவை. அவற்றின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதால் உயர்கல்வித்துறையின் தரம் சீர்குலையும்". என்பது கான்பூர் மற்றும் குவாஹட்டி ஐ.ஐ.டிக்களின் வாதம்.

ஐ.ஐ.டிக்களுக்காக மத்திய அரசு வரைமுறையற்ற வசதிவாய்ப்புகளை உருவாக்கித்தந்து, ஒவ்வொரு ஐ.ஐ.டிக்கும் பலநூறு அல்லது ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரா நிலங்களை தாரை வார்த்து, பல்லாயிரம் கோடி நிதி தந்து, உயர்கல்வியை ஊக்குவிக்கிறது... என்பது உண்மை தான் என்றாலும், இத்தனை ஆண்டுகளாக மிகச்சிறப்பாகச் செயல்பட்டு உலக அளவில் மதிக்கப்படும் உன்னத உயர்கல்வியை வழங்கிடும் ஐ.ஐ.டி செயல் பாடுகளில் தேவையில்லாமல் மனிதவளத்துறை தலையீடு செய்கிறதோ என்ற எண்ணம் மேலெழுந்தவாரியாக இந்த விவகாரத்தில் எழுவது இயற்கை!

 ஆனால் உண்மை அதுவல்ல. மத்திய அரசு பொதுநுழைவுதேர்வை அதிரடியாக அறிவிக்கவில்லை. கடந்த இரண்டாண்டுகளாக பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை உயர்கல்வியாளர்களிடையே நிகழ்த்தியது. இதற்காக அமைக்கப்பட்ட இராமசாமி கமிட்டி அனைத்து ஐ.ஐ.டி இயக்குநர்களிடம் பேசி விவாதித்து ஒருமித்து எடுக்கப்பட்ட முடிவே இது! சபையில் ஒத்துக்கொண்ட சிலர், தற்போது வெளியில் சர்ச்சை செய்கின்றனர். பொது நுழைவுத்தேர்வால் தரம் குறைத்துவிடும், ஊழல் மலிந்துவிடும் என்பதெல்லாம் யூகமே! உண்மையில் இது போன்ற தவறுகளை களைந்து வெளிப்படைத்தன்மையுடனும், சரியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கு உகந்த நேர்மையுடனும் ஐ.ஐ.டி தேர்வுகளை அமைப்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது.

 அதனால் தான் தேர்வுகளை உருவாக்குவதில் ஐ.ஐ.டிக்கே முன்னுரிமை தரப்பட்டுள்ளது. தேர்வை நடத்துவது மட்டுமே CBSEயாக இருக்கிறது, இதுவரையிலான ஐ.ஐ.டி - ஜே.இ.இ (I I I -JEE) எனப்படும் அனைத்து ஐ.ஐ.டிகளும் இணைந்து நடத்திய பொதுத்தேர்வில் பள்ளி இறுதி தேர்வு மதிப்பெண் ஒரு பொருட்டல்ல. அதனால் மாணவர்கள் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வை மட்டும் சிறப்பாக எழுதினால் போதும் என்று பள்ளி இறுதிதேர்வை அலட்சியப்படுத்தி வந்தனர். இனி அதற்கு இடமில்லை, மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ள நுழைவுத்தேர்வில் ப்ளஸ் டூ மதிப்பெண்ணுக்கு 40% வழங்கப்படும். அதோடு இருகட்டங்களாக ஒரு மாத இடைவெளியில் தேர்வுகள் நடத்தப்படும். இதில் வெறும் எழுத்து தேர்வோடு நில்லாமல், 'கற்ற அறிவை களத்தேவைகளுக்கேற்ப கையாளும் திறன் இருக்கிறதா?' என்ற பரிசோதனையும் இருக்கிறது. மேலும் ஏகப்பட்ட நுழைவுத்தேர்வுகள், அதற்காக தனித்தனி விண்ணப்பங்கள், பயிற்சிவகுப்புகள், தயாரிப்புகள் என பெற்றோர்களும், மாணவர்களும் அனுபவித்த சிரமங்கள் குறையும். பொருளாதாரச் செலவுகளும் மிச்சப்படும்.

 புதிய நுழைவுத்தேர்வு 16 ஐ.ஐ.டிகள், 4ஐ.ஐ.ஐ.டிகள், 30 என்.ஐ.ஐ.டிகள் மற்றும் மத்திய அரசின் நிதிஉதவி பெறும் பல்கலைகழகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதனை ஒரு சில ஐ.ஐ.டி பழமைவாதிகளைத் தவிர சம்மந்தப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் வரவேற்றுள்ளன. தேர்வு பற்றிய சர்ச்சைகள் ஒரு புறம் இருக்கட்டும்!

உண்மையான பிரச்சனை என்னவென்றால் இன்றைய தினம் இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டிக்கள் தங்களைத் தனி உலகமாகக்கருதி, மக்களிடமிருந்து முற்றிலும் அந்தியப் பட்டுள்ளனர். அரசு தரும் அளவற்ற உதவிகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு படித்து வெளிநாடு செல்வதிலேயே கணிசமானோர் கவனம் வைக்கின்றனர். அதோடு ஐ.ஐ.டியில் படித்தவர்கள், படிப்பவர்கள், தேர்வில் வெற்றிபெறுபவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளிருந்தே மீண்டும், மீண்டும் வருகின்றனர் என்ற பலமான குற்றச்சாட்டுகள் சில தசாப்தங்களாக உள்ளது.

 இதை உடைப்பதற்காகவே சமீபத்தில் ஐ.ஐ.டிக்களுக்கும் இட ஒதுக்கீடு அறிமுகமாகி கூடுதல் ஐ.ஐ.டிக்கள் உருவாக்கப்பட்டன!
 தற்போது பொது நுழைவுத்தேர்வும் வர உள்ளது. தகுதி, திறமை, ஆற்றல், அறிவு ஒரு பிரிவினருக்கே சொந்தமானதல்ல, அது உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை கொண்டோருக்கு பொதுவானதாகும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
 14-6-2012

No comments: