Thursday, July 19, 2012

குடியரசுத்தலைவர்தேர்வில் குழப்பங்கள்

-சாவித்திரிகண்ணன்


குழப்பங்கள், தாமதங்கள், அபிப்ராயபேதங்கள், இழுபறிகள்... போன்ற காட்சிகளைக் கொண்ட ஒரு மெகா சீரியலைப் போல் இந்தியக் குடியரசுதலைவர் தேர்தல் நாளுக்குநாள் காட்சிமாற்றம் தருகிறது.


குடியரசுத் தலைவர் என்றால் மக்கள் தலைவர் என்று பொருளாகும்! ஆனால் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடாமல் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும்படியாக நமது நாட்டின் சட்ட விதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகள் மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பது தானே முறையாகும்! ஜனநாயகமாகும்! ஒரு யோக்கியமானவர், ஊழல்கரைபடிஅப்பாற்பட்ட பொது கண்ணோட்டம் கொண்டவர், மக்களை நேசிப்பவர், மக்களால் நேசிக்கப்படுபவர்..போன்ற அம்சங்களை கொண்டவராக தங்கள் குடியரசுத்தலைவர் அமையவேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் நாட்டில் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது...? ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவரவர் பலத்தை காட்ட, அல்லது அவரவர் அரசியல்நலன்களை பாதுகாத்துக்கொள்ள, அவரவர் அரசியல் கணக்குகளுக்கு ஒத்துவரக்கூடியவரை அடையாளப்படுத்துவதில் தான் ஆர்வம் காட்டிக் கொண்டுள்ளனர்.

இந்த 13வது குடியரசுத்தலைவர் தேர்வை குழப்பி குட்டிச்சுவராக்கி, இன்று இழுபறிநிலைமைக்கு கொண்டுவந்ததில் காங்கிரஸ் கட்சிக்கு நிகராக வேறொரு கட்சியை காட்டமுடியாது. நீண்ட குழப்பத்திற்கு பிறகு பிரணாப் முகர்ஜியை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ். பிரணாப்முகர்ஜி என்ற அறிவிப்பு ஒரு வழியாக காங்கிரஸை குழப்பத்திலிருந்து மீட்டெடுத்திருக்கலாம். ஆனால் எதிர்கட்சிகளையும், மக்களையும் அது ஒரு சேர குழப்பத்தில் ஆட்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்!

தகுதி, திறமை, அனுபவம், அறிவு, ஆற்றல் என எல்லாவற்றிலும் மேம்பட்டவர் பிரணாப்முகர்ஜி. உண்மையில் அவர் இந்தியாவின் பிரதமராக இருக்கத் தகுதியானவர், இருந்திருக்க வேண்டியவர், ஆனால் மறுக்கப்பட்டவர்! அந்தவாய்ப்பு அவருக்கு கடந்த 25 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததென்றே சொல்லவேண்டும். இப்போதும் கூட நிதித்துறையை நிர்வகிக்க, வழிநடத்த அவரைவிட்டால் ஆளில்லை என்ற நிலைமை!

இந்நிலையில் அவர் குடியரசுதலைவராக்கப்பட்டு இந்த நாடு அவரிடமிருந்து பெறவேண்டிய பலன்களை தடுத்தால் அது நியாயமாகுமா? காங்கிரஸ் தலைமையைப்பொறுத்தவரை அது இதுநாள்வரை பிரணாப்முகர்ஜிக்கு இழைத்த துரோகத்திற்கு பிராயசித்தம் தேடி இந்த பதவியை அவருக்கு தந்திருக்கலாம்! யாரோ சிலரின் சுயநலம், பிராயசித்தம் போன்றவை நாட்டின் உன்னத பதவிக்கான தேர்வில் பிரதிபலிப்பதா? எனில் இந்த நாடு அடைந்த பின்னடைவுக்கு என்ன பிராயசித்தம்....?

உண்மையில் காங்கிரஸ் கட்சி பிரணாப்முகர்ஜியின் பெயரை பிரேரணை செய்த பின்ணணி குறித்த அவநம்பிக்கைகள் மக்கள் மனதை அலைகழிக்கவே செய்கிறது. காங்கிரஸ் நிலைமை இது வென்றால் பா.ஜ.க நிலைமையும் பரிகசிக்கதக்கதாகவே உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலாவது மம்தாவை தவிர்த்து மற்ற அனைவரும் ஒன்றுபட்டுவிட்டனர். ஆனால் தேசிய ஜனநாயக முன்னணியோ திரிசங்கு நிலையில் திணறுகிறது. பா.ஜ.கவிற்குள்ளேயே பல்வேறு அபிப்ராய பேதங்கள்! சிவசேனை சிலிர்த்துக் கொண்டு வெளியேறிவிட்டது. ஐக்கிய ஜனதாதளம் அடங்க மறுக்கிறது...!

மொத்தத்தில் கட்சிகள் ஒன்றுபட்டு, ஒருமித்து செயல்பட்டிருக்கவேண்டிய குடியரசுதலைவர் தேர்தல் - கட்சிகளை அணிபிரித்து, கட்சிக்குள்ளேயே அபிப்பராயபேதங்களை வளர்க்குமளவுக்கு சென்றுவிட்டது - துர்திர்ஷ்டமே!

இது இந்திய ஜனநாயகம் இன்னும் பக்குவப்படாததையே உணர்த்துகிறது. அரசியல் கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு செயல்படுவதையும், சிந்திப்பதையும் பறைசாற்றுகிறது. குடியசுத்தலைவர் என்பவர் மக்கள் திருப்திபட்டுக் கொள்ளும் வகையில் தேர்ந்தெடுக்கப்படவேண்டுமேயல்லாது திணிக்கப்பட்டவராக மக்கள் உணரும் நிலைகூடாது.
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
June2012.

No comments: