Wednesday, July 11, 2012

பாகிஸ்தான் - ஊழல் அரசியல்வாதிகளும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளும்!


-சாவித்திரிகண்ணன்

மெக்சிகோவில் உள்ள லாஸ்கேபோஸ் நகரில் நடைபெறும் ஜி20 நாட்டுத் தலைவர்களின் கூட்டறிக்கை தற்போது பெருகிவரும் ஊழல்கள் குறித்த கவலையை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையோடு, பெருகிவரும் ஊழல்களையும் அவர்கள் இணைத்து விவாதித்திருப்பது கவனத்திற்குரியது.

குறிப்பாக தெற்காசியாவில் உள்ள வளரும் நாடுகள் அனைத்துமே ஊழலில் ஊறித் திளைத்துள்ளன... என்ற போதிலும் இதில் பாகிஸ்தான் நிலைமை தான் அதிபயங்கரமானது.

இந்தியாவின் அங்கமாக ஒரு காலத்தில் இருந்தது தான் பாகிஸ்தான்! அந்த பாகிஸ்தான் தந்தை என போற்றப்படும் முகமதலிஜின்னாவின் புகழ்பெற்ற பேச்சு ஒன்று நினைவுக்கு வருகிறது.

"இந்தியாவின் சுதந்திரம் என்பது காந்தி தலைமையில் பற்பல அறப்போராட்டங்கள், தியாகங்கள், இழப்புகளுக்கு பிறகு கிடைத்தது. ஆனால் நான் பாகிஸ்தானை ஒரு டைப்பிஸ்ட் மற்றும் டைப்ரைட்டரின் துணைகொண்டு என் ராஜதந்திரத்தால் பெற்றேன்" என்பார் ஜின்னா! இந்தியாவிலும் ஊழல்கள் இருக்கிறது என்றாலும் கடந்த இருபதாண்டுகளாகத் தான் அவை அதிகரித்துள்ளது. இது காந்திதேசம். இங்கே ஊழல் செய்வதற்கு நாணும் குற்ற உணர்வு இன்னும் முற்றாக விடைபெற்றுவிடவில்லை. ஆனால் பாகிஸ்தான் ஊழலில் உச்சகட்ட அரங்கேற்றம் கண்டுள்ளது என்பதை அந்நாட்டின் உச்சநீதிமன்றமே உறுதி படுத்துகிறது.

சுதந்திரத்திற்கு பின்னான இந்த 65 ஆண்டுகளில் சரிபாதி ஆண்டுகளுக்கு மேல் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகார ஆட்சிதான்! அதோடு அதிபராயிருந்தவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது நாடு கடத்தப்படுவார்கள், இல்லையெனில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாவார்கள்! இந்த விசித்திர நிலைமைகளினூடாக அங்கு அவ்வப்போது ஜனநாயகம் உயிர்த்தெழுவது என்பதும், பொதுவாழ்வில் அறநெறிகளை நிலைநாட்ட ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதும் நீதிமன்றங்களின் வழியாகவே தொடர்ந்து நிலைநாட்டபட்டு வருகிறது.

தற்போது பாகிஸ்தான் பிரதமர் கிலானியை பதவி இழக்கவைத்துள்ளது அந்நாட்டின் உச்சநீீதிமன்றம்! காரணம் அவர் தற்போதைய அதிபர் ஜர்தாரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை மூடிமறைக்க துணைபோனார் என்பது தான்!

இதே நீதிமன்றம் தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக சளைக்காமல் பல தீர்ப்புகளை வழங்கியது. இந்த வகையில் தலைமை நீதிபதி இஃதிகான் சௌத்திரிக்கு மக்கள் மத்தியில் மாபெரும் மரியாதை உண்டு. நவாஷ்ஷெரிப், முஷாரப், பெனாசிர்புட்டோ - ஜர்தாரி என அனைவருமே ஊழலில் ஊறித்திளைத்தவர்கள் என்றாலும் உலகமே வியக்கும் வண்ணம் - உலகநாடுகள் சிலவே தண்டிக்கும் வண்ணம் - ஊழலில் உச்சகட்ட புகழ் பெற்றவர்கள் பெனாசிர்புட்டோ - ஜர்தாரி தம்பதியாகும்!

இரண்டுமுறை பாகிஸ்தானின் பிரதமாயிருந்துள்ள பெனாசிர்புட்டோ மிது பல இமாலய ஊழல் புகார்கள் இருந்தன. இந்த ஊழல் புகார்களால் அவர் தன் முதல் பதவிகாலத்தை இருபது மாதங்களில் இழந்தார். ஆனால் அடுத்த முறை வந்தபோது ஊழலில் வரலாறுபடைத்தார்.

புட்டோ - ஜர்தாரி ஊழல்கள் குறித்து பிரெஞ்சு, போலந்து, ஸ்பெயின் மற்றும் சுவிஸ் ஆவணங்கள் பல பிரபலமானவை!

இவர்கள் மீது சுவிஸ் நீதிமன்றத்தில் ஆறுஆண்டு நடந்த வழக்கின் முடிவில் ஆகஸ்ட் 2003ல் சுவிஸ் நீதிமன்றம் இவர்களின் பணமோசடியை ஆதாரபூர்வமாக அறிவித்து, 6மாத சிறைதண்டனை அறிவித்து இருவருக்கும் தலா 50,000டாலர்கள் அபராதம் விதித்தது! இந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை சுவிஸ், பாகிஸ்தான் அரசுக்கு தந்தது. இது போல போலந்து அரசும் இவர்கள் குறித்த 500 பக்க ஆவணங்கள் தந்து 97ல் வாங்கப்பட்ட 8,000டிராக்டர்களில் நடந்த மோசடிகளை அம்பலப்படுத்தியது. இப்படியாக தங்கம் இறக்குமதி தொடங்கி ஏகப்பட்ட ஊழல் புகார்களில் சிக்கிய ஜர்தாரியை, முஷராப் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தப்ப வைத்ததைத் தான் தற்போது செல்லாது என உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.

இந்த வகையில் மீண்டும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஊழலைச் சாடியுள்ளதோடு ஜனநாயகத்தையும் உயிர்பிக்க முயன்றுள்ளது. இம்ரான்கான் போன்ற தேசபக்தர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் இதற்கு உறுதுணையாக உள்ளார்கள்.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
25-6-2012.

No comments: