Friday, July 20, 2012

கட்டாய ஓய்வு அவசியமா?



-சாவித்திரிகண்ணன்

சில நேரங்களில் சட்டங்களின் நோக்கம் மேன்மையாக இருக்கலாம்!
ஆனால் அது நடைமுறையில் மகா மோசமான விளைவுகளை உருவாக்கிவிடக்கூடும்!

தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டம் மக்கள் நலன் கருதி என்பதாகச் சொல்லப்பட்டாலும், மக்கள் விரோத நோக்கங்களுக்கு பயன்படவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

சிறப்பாகச் செயல்படாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்,எஸ் அதிகாரிகளை கட்டாய ஒய்வுகொடுத்து வீட்டுக்கு அனுப்பலாம் என மாநில அரசுகளுக்கு ஆணை அனுப்பியுள்ளது மத்திய அரசு! 'மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் செயல்படாத சோம்பேறி அதிகாரிகளுக்கு ஏன் தண்டச் சம்பளம்? அவர்களின் செயல்படாத தன்மையால் அத்துறையே ஸ்தம்பிக்கிறது. பல மக்கள் நல திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன, இதனால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் சொல்லிமாளாது... எனவே இத்திட்டம் மிகச்சரியானது தானே....' என்று தோன்றலாம்!

ஆனால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,ஐ.எப்.எஸ் போன்ற பதவிகளுக்கு சாதாரணமாக ஒருவர் வரமுடியாது. அசாதாரண முயற்சிகளும், உழைப்பும், கொண்டவர்களே நன்கு படித்து பல நிலைகளைக் கடந்து அந்நிலையை பெறுகின்றனர் அது அதற்கான தேர்வுகள் எழுதி, உரிய பயிற்சிகள் பெற்றே ஒவ்வொருவரும் பெரிய அதிகாரியாக முடியும்.

அப்படியான அதிகாரிகள் சிறப்பாகச் செயல்படவில்லை என்று
எதைக்கொண்டு முடிவுக்கு வருவது? யார் அதை முடிவு செய்வது?
சிலநேரங்களில் சில அரசியல் சூழல்கள் அதிகாரிகளின் கைகளை கட்டிப் போடும். அவர்களின் செயல்பாடுகளை முடக்கும்.. இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன! தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக, நேர்மையாகச் செயல்பட்ட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு பிடிக்காத நேரங்களில் பந்தாடப்பட்டதை நாடறியும். அந்நேரங்களில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியுள்ளனர்.

எனவே மத்திய அரசின் 'கட்டாய ஓய்வு' என்ற திட்டம் அந்தந்த மாநில அரசை ஆட்சி செய்யும் கட்சிகளின் சுயவிருப்பு வெறுப்புகளுக்கேற்ப தங்களின் சுயநலநோக்கங்களுக்கு உடன்படாத நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கக் கிடைத்த வாய்பாக மாறுவதற்கே வாய்ப்புள்ளது.

"முன்பே இச்சட்டம் அமலாக்கப்பட்டு பல அநியாயங்கள் அரங்கேறியதால் திரும்பபெறப்பட்டது" என்கிறார்கள் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்! இது தொடர்பான பல வழக்குகள் ஏற்கெனவே நமது உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடந்துள்ளன!

'கட்டாய ஒய்வு' என்பதாக அறிமுகப்படுத்தப்படும் இச்சட்டம் அதிகாரிகளின் கழுத்துக்கு வைக்கப்படும் கத்தி என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற பலநாடுகள் இச்சட்டத்தை பகிஷ்கரித்துள்ளன.

அதிகாரிகளை சரியாக வேலைவாங்கவேண்டியதும், அவர்களிடமிருந்து சிறப்பான ஒத்துழைப்பை பெற்று மக்கள் நல திட்டங்களை அமல்படுத்துவதும் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் - குறிப்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கடமை! இது ஒரு ஆட்சிக்கலையாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் செயல்பட மறுப்பவர்கள் கூட செயல்பட்டாக வேண்டும் அல்லது தகுதியில்லாதவர்கள் தாக்குபிடிக்கமுடியாமல் தாங்களே விலகிவிடநேரிடும்!

ஆகவே ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் ஆகிய பதவியில் உள்ள அதிகாரிகள் மனசாட்சிப்படி, சுதந்திரமாக, நேர்மையாக செயல்படுவதை தடுக்கவோ, முடக்கவோவான எந்த ஒரு திட்டமும், சட்டமும் நாட்டுக்கோ மக்களுக்கோ நல்லதல்ல.
மாறாக அரசு அதிகாரிகள் சிறப்பாகப் பணியாற்ற ஊக்குவிக்கும் தலைமைப் பண்போடு உள்ள அரசியல் தலைவர்களே தேவை.
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
5-07-2012

1 comment:

Anonymous said...

I agree There is a chance that this law can be misused.

For example, if an officer is not agreeing to a sign something citing some valid reason (which is good for people) he may get threatened to be shown the door using this law.

BUT, still we need a process by which he should be given feedback about quality of work being done.

Mostly media highlights the good part done of IAS officers, BUT there are still some incompetent officers who dont consider people's probelms and only take care about doing routine office work and please their superiors ONLY, which are not getting any media highlights.
There must be a process by which these officers are figured out and shown the door.

Otherwise, the entire district is into Trouble by having these incompetent officers.
==================================
The intention behind this law is good (weeding out incompetent officers) but it needs to be refined in such a way that it is not used to revenge good officers.