Sunday, February 10, 2013

தெலுங்கானா பிரச்சினை


                                                                                                                 -சாவித்திரிகண்ணன்

ஹைதராபாத் கொந்தளிப்பின் உச்சத்தில் இருக்கிறது
தெலுங்கானா தனி மாநிலத்திற்கான மக்கள் போராட்டத்தில் மத்திய அரசு தெளிவான தீர்மானத்திற்கு வர முடியாமல் நீண்ட காலமாகத் திணறிக் கொண்டிருக்கிறது.

கடைசியாக எதிர்பார்க்கப்பட்ட - உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய படி ஒரு மாத கால அவகாசம் ஜனவரி 28ல் முடிந்தது. ஆனால் முடிவெடுக்க முடியாத காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் நிலைபாட்டால் தெலுங்கானா பிரச்சினை மேன்மேலும் தீக்கொழுந்தாக எரிகிறது.

போலீஸ்தடியடி, கண்ணீர்புகை, துப்பாக்கி சூடு, கைதுகள், தீவைப்பு, பொதுச்சொத்துகள் சேதம்... என போராட்டம் வலுக்கத் தொடங்கி விட்டது.
அடுத்தகட்டமாக தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜீனாமா செய்யப் போவதாகத் தெரியவருகிறது.
தெலுங்கானா பிரச்சினை மனதளவில் ஆந்திரமக்களை ஏற்கெனவே இரு எதிர் எதிர் துருவங்களாக நிறுத்திவிட்டது.

ராயல்சீமா பகுதியின் செல்வாக்குள்ள அனைத்துக்கட்சி பிரமுகர்களும், தொழில் அதிபர்களும், முக்கியஸ்தர்களும் தெலுங்கானாவிற்கு எதிராக மிகத்திறம்பட 'லாபி' செய்து வருகின்றனர்.
1953ல் மாநிலங்கள் மறுசீரமைப்பு கமிட்டி, "தெலுங்கானா பகுதி மக்கள் ஆந்திராவோடு இணையவிரும்பவில்லை. ஆகவே தனி மாநிலம் தரலாம்" என பரிந்துரைத்தது.
அப்போதும் ராயல்சீமா பகுதி தலைவர்கள் லாபி செய்து ஒன்று பட்ட ஆந்திராவுக்கு ஓங்கி குரல் எழுப்பினர்.

விரும்பாத மக்களை சேர்ந்திருக்கும் படி வற்புறுத்துவது, 'ஆளும் நிலப்பரப்பை விரிவுபடுத்த துடிக்கும் ஏகாதிபத்திய மனோபாவமேய என்றார் ஜவஹர்லால் நேரு. ஆனபோதிலும், ராயல்சீமா பகுதி காங்கிரஸாரின் வலுவான லாபியால், "எப்போது வேண்டுமானாலும் பிரிந்துபோகக்கூடிய உரிமையுடன் கூடிய ஒப்பந்தம் பிப்ரவரி20, 1956ல் இரு பக்கத் தலைவர்களாலும் கையெழுத்திடப்பட்டது.

அதன் பிறகான இந்த 57ஆண்டுகளில் - தாங்கள் இன்று வரை ஏமாற்றப் படுவதாக - தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவே தெலுங்கானா பகுதி மக்கள் உணருகிறார்கள்.

கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம், பொருளாதாரம் என அனைத்திலும் ராயல்சீமா பகுதியினர் சுமார் 80%த்தை அனுபவித்துக் கொண்டு தங்களை சுரண்டுவதாக நினைக்கின்றனர்.

இனதால் கடந்த 57 ஆண்டுகளாக தெலுங்கானா போராட்டம் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது. 1969,1972,2000,2009 என்று அவ்வப்போது அது வெடிப்பதும், இவற்றில் இது வரை ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிர்துறந்திருப்பதும் பெருங்கொடுமை!

சமீபகாலமாக புதிதாக 12 மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா மாநில உருவாக்கத்தில் மட்டும் ஏன் இந்த தேக்கம்?

'ஹைதராபாத் - தெலுங்கானா பக்கம் போய்விடும்
கிருஷ்ணா, கோதாவரி நீர்வரத்து பாதிப் பிற்குள்ளாகும்' என்ற ராயலசீமா பகுதி மக்களின் அச்சமே தெலுங்கானா தீர்வில்லாமல் தொடரக் கராணமாகிறது.

இதனால் தான் ஒவ்வொரு முறையும் 'தெலுங்கானாவிற்கான உறுதிமொழி தரப்பட்டு பிறகு வாபஸானது. எத்தனை முறை எந்தெந்த கட்சித் தலைவர்கள் இப்படி உறுதிமொழி கொடுத்து பிறகு பின் வாங்கினர் என்பது மிகப்பெரிய பட்டியலாகும்! பா.ஜ.க ஆட்சியில் வாஜ்பாய்யும் கூட கூறினார் கடைசியாக 2008ல் பிரணாப் முகர்ஜி, 2009ல் ப.சிதம்பரம் என அறிவிப்பு தந்து பிறகு பின்வாங்கினர்.

கிருஷ்ணாகமிட்டி 5விதமான வழிமுறைகளைக் கூறி குழப்பமான தீர்ப்பளித்தது. மீறப்படும் உறுதிமொழிகள், தடுமாறும் தலைமைகள்... போன்றவை மேன்மேலும் பிரச்சனை விஸ்வரூபமெடுத்து, விரும்பா\த்தகாத விளைவுகளுக்கே வித்திடும்.
ரத்தத்திலும், வன்முறையிலும் பிரியாமல் இருதரப்பிலும் இணக்கமான சுமூகச்சூழலை கட்டமைத்து தீர்வு எடுக்கும் தலைமையே தற்போதைய தேவை!



தந்தி டிவி,
EDITORIAL VOICE,
28-1-2013

No comments: