Saturday, February 2, 2013

ஊழலுக்கு தண்டனை உறுதிப்படவேண்டும்


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்


அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலாவும், அவரது மகனும் ஆசிரியர் தேர்வில் அக்கிரமமாக ஊழலை அரங்கேற்றிய வகையில் சிறை தண்டனைக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் இந்த ஊழல் நடந்து 12ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் உறுதிபடுத்தப்பட்டு தண்டனை அறிவிக்கப் பட்டுள்ளது.

நீதி நிலைநாட்டப்படுவதற்கு மிக நீண்ட கால கட்டம் தேவைப்படுகிறது. பல வழக்குகளில் மிக நீண்ட காலகட்டம் ஆனாலுமே கூட நீதி நிலைநாட்டப் பட்டு விடுவதில்லை. ஊழல் புரிந்தவர்கள் குற்றவாளியா? இல்லையா? என்ற குழப்பமே மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாட்டுத் தீவன வழக்கு - ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்ததாக பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீதான குற்றச்சாட்டும், வழக்கும் என்ன ஆனதென்றே தெரியவில்லை. அரசாங்க கணக்கில் தப்பு செய்த லாலு, அரசியல் கணக்கில் சாணக்கியராக இருந்ததால் மத்திய காபினெட் அமைச்சராகி மாபெரும் மரியாதை பெற்றார்.

கர்நாடகாவில் எடியூரப்பா மீதான ஊழல் குற்றச் சாட்டுகளை லோக் ஆயூக்தா நீதிமன்றம் உறுதிபடுத்தியது. ஆனால் அவர் சிறை செல்லவில்லை. தலைப்பாகையைத் தான் இழந்தார்.

உத்திரபிரதேச முதல்வர் மாயாவதியின் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு வழவழ வென்று நீடித்துக் கொண்டே போகிறது. அவர் மத்திய அரசுக்கு தந்து கொண்டிருக்கும் ஆதரவு என்ற மந்திரக்கோலில் அந்த ஊழல் புகார்கள் மாயமாய் மறைத்து கொள்கின்றன.

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி மீதான ஊழல்புகார்கள் தீடீரென விஸ்வரூபமெடுத்தன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குகள் பாய்ந்தன. இப்படி அம்பு எய்தவர்களின் கட்சியின் ஆட்சிக்கு முதல்வராய் இருந்தவர் தான் ராஜசேகரரெட்டி! ஜெகன்மோகன் ரெட்டிக்கு இன்று வருமானத்திற்கு அதிகமான சொத்து இருக்குமானால் அதற்கு பொறுப்பு இறந்த அவர் தந்தை ராஜசேகரரெட்டி தான்! காங்கிரஸ் கட்சிக்கு ஆந்திராவில் முகமாய் இருந்தவரை அவர் அளப்பரிய ஊழல் செய்தபோது ஆட்சேபணை எழவில்லை. இன்று அவரது மகன் காங்கிரஸுக்கு எதிராகச் சென்றவுடன் வழக்குகள் அவரை சுற்றி வளைக்கின்றன. சிறைக்குள் தள்ளுகின்றன!

சுதந்திரத்திற்கு பிறகான சுமார் 60 ஆண்டுகால இந்திய அரசியலில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத ஆட்சியாளர்கள் மிக அரிதே! அந்த அரிதானவர்களும் ஆரம்பகாலத்தலைவர்களே! ஆனால் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ஆட்சித் தலைமைகள் சுலபத்தில் தண்டிக்கப்படுவதில்லை.

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக மிக்குறுகிய காலம் பதவிவகித்த மதுகோடா மாபெரும் செல்வந்தராக மாறிய மர்மம் என்ன? அவர் சிறைக்குச் சென்ற குறுகிய காலத்திற்குள் வெளிவர முடிந்தது எப்படி?

இதெல்லாம் இந்திய மக்களின் மனங்களில் விடை தெரியாத கேள்விகளாக தொடர்கின்றன...
சௌதாலா கைது, ஊழல் எதிர்பாளர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.
இதேபோல் அனைத்து ஊழல் அதிகாரமையங்களும் தண்டனைக்கு ஆட்படுத்தப்படவேண்டும்.

'ஊழல் செய்தால் தண்டனையிலிருந்து தப்ப முடியாது' என்பது இந்தியா முழுமையும் உறுதிபடுத்தப்படவேண்டும். அரியானா முன்னாள் முதல்வர் ஒம்பிரகாஷ்சௌதாலாவின் சிறைவாசம் இதற்கு தொடக்கப்புள்ளியாகட்டும்!
தந்தி டிவி,
EDITORIAL VOICE,
17-1-2013

No comments: