Saturday, February 2, 2013

பென்னிகுயிக்கின் பெரும் தியாகம்


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

தமிழக மக்களின் நீண்டகால ஆசையை இன்று நிறைவேற்றி வைத்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா.

தென் தமிழக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற பிரிட்டிஷ் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களின் மணிமண்டபத்தையும், வெண்கலச்சிலையையும் முல்லை பெரியாறு அணைகட்டின் லோயர் கேம்பில் இன்று தமிழக முதல்வர் நேரில் சென்று திறந்து வைத்து அந்த மாமனிதருக்கு மரியாதை செலுத்தி உள்ளார். உண்மையில் இன்று தென்மேற்கு தமிழக மக்கள் உள்ளம் உவகை பெருக்கில் பொங்கிவழிகிறது.

'வெள்ளையனே வெளியேறு' என்று போர்ப்பரணி பாடிய நாட்டில், ஒரு வெள்ளை இனத்து இன்ஜினியர் மக்களின் இதயங்களை கொள்ளையடித்து நிரந்தரமாக கொழுவீற்றிருக்கும் அதிசய வரலாறு பென்னிகுக்கின் மகத்தான சாதனையாகும்!
இந்த மாபெரும் முக்கியத்துவம், அவருக்கு எப்படி கிடைத்தது? என்பதை வராலாற்றை பின்நோக்கிப் பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.
வறட்சியும், வறுமையும் தென் தமிழக மக்களை ஆட்டி படைத்துக் கொண்டிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் மேற்குநோக்கிப் பாய்ந்து கடலில் வீணாகிக் கொண்டிருக்கும் முல்லைபெரியாறு நீரை கிழக்குநோக்கித் திருப்ப முயற்சி எடுத்து முடியாமல் தவித்தார் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி.

இந்நிலையில் பட்டினிச்சாவுகளும், சமூக விரோதச் செயல்களும் மலிந்தன. உழைக்கும் ஆர்வம் கொண்ட இந்த மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாக வேண்டுமென்றால் வேளாண்மைக்கு வித்திடுவதே சரியான வழி என்று தேர்ந்து தெளிந்தார் பென்னிகுயிக்.

இதையடுத்து பிரிட்டிஷ் அரசுக்கு அவர் ஒரு பிராஜெக்ட் ரிப்போர்ட் கொடுத்தார். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் சிவகிரி மலையில் உற்பத்தியாகி தெற்குநோக்கி பாய்ந்து முல்லைபெரியாறில் கலந்து திசைமாறி மேற்குநோக்கிச்செல்லும் நீரை கிழக்கு நோக்கித் திருப்ப வேண்டும். அப்படி திருப்பினால் தேனீ, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் சிவகங்கை பகுதிகள் வளம் பெறும். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விளைநிலங்களாக மாறும், வேளாண்மை தழைத்தோங்கும். அதன் மூலம் வேளாண்மை தழைத்தோங்கும் என கணித்தார் பென்னிகுயிக். இந்த பிராஜக்ட் ரிப்போர்ட்டை பிரிட்டிஷ் அரசு ஏற்ற போதிலும் இதற்கு நிதி உதவி செய்வதில் பின்வாங்கியது.

இதைத்தொடர்ந்து பென்னிகுயிக்கின் மனைவி தன் அத்தனை நகைகளையும் களைந்து தர, மேற்கொண்டும் நிதி தேவைப்பட சொந்த நாட்டிற்குச் சென்று சொத்துகள் அனைத்தையும் விற்று வந்து ரூ 42லட்சத்தை பொதுப்பணிக்கு அர்பணித்தார் பென்னிகுயிக். அணையின் மொத்த செலவே 53லட்சம்! இதில் பென்னிகுயிக்கின் சொந்தப்பணமே பெரும்பகுதி.

இந்தச் சாதனையை பெரும் மக்கள் திரளை ஒன்று திரட்டி அவர்களின் உழைப்புதிறனை, அயராத ஆர்வப்பெருக்கை முறையாகப் பயன்படுத்தியதில் தான் அவரது வெற்றியின் ரகசியமே புதைந்துள்ளது. 

இந்த கரடுமுரடான பெரும் பணியில் விஷப்பூச்சிகள், கொடிய அட்டை பூச்சிகள், வனவிலங்குகள், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் என அனைத்தையும் எதிர்கொண்டு எட்டாண்டுகள் பாடுபட்டதில் தங்கள் இன்னுயிரை இந்த இடர்பணியில் இழந்தவர்களின் எண்ணிக்கை 123. இதில் பிரிட்டிஷார் 23பேர். தமிழர்கள் 100பேர்.

இந்த தருணத்தில் அந்த தியாகிகளுக்கும் நாம் கரம்குவித்து, சிரம்தாழ்த்தி கண்ணீர் மல்க நன்றி சொல்வதே நியாயமாகும்!
அரபிக்கடலில் அநியாயமாக கலந்து வீணாண தண்ணீரை திசைதிருப்பி தமிழகத்திற்கு தந்ததில் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உடன்பாடில்லை என்றாலும் பிரிட்டிஷ் பேரரசின் நிர்பந்தம் 999வருட ஒப்பந்தத்திற்கு திருவிதாங்கூரை உடன்பட வைத்தது.

அதனால் தான் இன்று வரை கேரளமக்கள் பென்னிகுயிக்கின் பெரும் பணியை அங்கீகரிக்க மறுக்கின்றனர். ஆனால் அவர் கட்டிய அணைத்தண்ணீரை தங்களுக்கும் சேர்த்து இடுக்கி உள்ளிட்ட பெரும் நிலப்பரப்பிற்கு இன்று பயன்படுத்தி வருகின்றனர்.

நாம் நன்றி மறவா நன்நிலத்திற்கு சொந்தக்காரர்கள் என்று காலம் தாழ்ந்தேனும் அந்த வரலாற்று நாயகரை கௌரவித்ததில் நிலைநிறுத்திவிட்டோம்....! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
15-1-2013 

No comments: