Sunday, February 3, 2013

வர்மாகமிட்டி அறிக்கை தீர்வாகாது!


                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

தில்லி மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையையடுத்து எழுந்த தார்மீக ஆவேச உணர்ச்சிப் பேரலைகள் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான சட்டவடிவங்களை கடுமையாக்கும் நிர்பந்தத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் மூவர் கமிட்டி உருவாக்கப்பட்டு, அக்கமிட்டியானது மிக்குறுகிய காலத்திற்குள் ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு அறிவித்துள்ளது.

இந்த கமிட்டி தந்த அறிக்கை அவசரகோலத்தில் அள்ளித் தெளித்ததைப் போன்று அமைந்துள்ளது.

முதலாவதாக, நாட்டில் அதிகரித்துவரும் பாலியல் வக்கிரங்களை சட்டத்தின் வழியாக மட்டுமே சமாளித்துவிடலாம் என மத்திய அரசும், வர்மா கமிட்டியும் நம்புவது நகைப்பிற்குரியதாகிவிடும்!

சமூக அமைப்பு, குடும்ப அமைப்புகள், கலாச்சார ரசனைகள், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் கலை படைப்புகள், கற்பிக்கப்படும் கல்வி வாழும் சூழல்... என அனைத்திற்குமே பாலியல்வன்முறைகளுக்கான பங்களிப்பு உள்ளது.

எனவே சமூகத்தின் பல தளங்களிலும் செயல்படும் பெண்கள் அமைப்பு, இளைஞர்கள் அமைப்பு... போன்ற எண்ணற்ற அமைப்புகளிடம் கலந்துரையாடல்களை நிகழ்த்தி உருவாக்கப்படவேண்டிய கருத்தாக்கங்களே இதற்கு சரியான தீர்வை நோக்கிய பயணத்தை சமூகத்திற்கு காட்டவல்லது.

ஏதோ பெருநகரங்களின் சாலைகளில் மட்டும் இந்த அநீதிகள் அரங்கேறுவதில்லை விவசாயக் கூலிகளாக உள்ள பெண்கள்
கட்டிடவேலை செய்யும் பெண்கள்
டீ எஸ்டேட் போன்ற பண்ணைகளில் பணியாற்றும் பெண்கள்
வீட்டுபணிகளை மேற்கொள்ளும் பெண்கள்
சின்னஞ்சிறுகடைகள் தொடங்கி பெரிய ஷாப்பிங்மால் வரை குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் ஏழை எளியவர்க்கத்து பெண்கள்.... 
என பற்பல தளங்களில் பணியாற்றும் பெண்கள் சந்திக்கும் பாலியல் நெருக்கடிகளும் அவை சார்ந்த மன உளைச்சல்களும் வெவ்வேறானவை!
இவை தவிர்த்து குடும்ப அமைப்பிற்குள்ளேயே நெருங்கிய உறவினர்கள் சிலரால் ஏற்படும் வெளியில் சொல்லமுடியாத புழுக்கங்கள் கோடி!

இவற்றையெல்லாம் கள ஆய்வுகள் நடத்தி, சேகரித்து அதன் அடிப்படையில் ஒரு ஒட்டுமொத்த சமூக மாற்றித்திற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும்.
இதற்கு உண்மையான அக்கறையும், தொய்வில்லாத செயல்பாடுகளும் அவசியமாகும்!

ஆகவே, தண்டனைகளின் கால அளவை நிர்ணயிப்பதாலோ 
தண்டனையின் கடுமையை அதிகரிப்பதாலோ பாலியல் குற்றங்களை ஒரு போதும் குறைத்துவிடமுடியாது!

அதே சமயம் பாலியல் குற்றங்களுக்கு மரணதண்டனை தேவையற்றது,
ஆண்மை குறைப்பு அணுகுமுறைகள் மனித உரிமைக்கும், சட்டத்திற்கும் விரோதமானது போன்ற விசயங்களை தெளிவுபடுத்திய வகையில் வர்மா கமிட்டியின் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

வர்மாகமிட்டியின் அறிக்கை உடனடியாக மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு வைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அரசியல் சட்டதிருத்தத்தில் மாற்றம் செய்யப்படும் என மத்தியசட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் கூறியுள்ளார்.

ஆண்டாண்டுகாலமாக ஆழமாக வேரூன்றி, விஸ்வரூபமெடுத்து நிற்கும் ஒரு சமூக குற்றத்தை அடியோடு களைய வேண்டுமெனில் அதற்கு அவசரம் கூடாது. தேவை நிதானம் மற்றும் திடசித்தம்!

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
24-1-2013

No comments: