Saturday, February 4, 2017

உணவில் உறையும் வாழ்வியல் அறம் விதவிதமான உணவுகள்; விதவிதமான வியாதிகள்!

                                                                                                            -    சாவித்திரி கண்ணன்

எண்ணிலடங்கா உணவு வகைகள்…!
பெயர் உச்சரிக்கச் சிரம்ப்படுமளவுக்கான உணவு மெனுக்கள்….!
கண்ணைக் கவர்கின்றன…, காட்சியில் அசத்துகின்றன…!
பார்வையின் வழியிலான பசி பார்ப்பவரைத் தொற்றுகிறது…!
ஆசை பிறக்கிறது… ஆசைக்கு அறிவேது? நாணமேது? என்ன ருசியோ…? சுவையோ தெரியாத நிலையில் கேட்டும் பணத்தைத் தந்து புசிக்கின்றனர் பலர்! தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஏகப்பட்ட புதுப்புதுவகை சமையல்கள் நாள்தோறும் அறிமுகப்படுத்தப்படுகிறது….
எதனோடு எதை சேர்க்கக் கூடாதோ அதை சேர்த்துச் செய்வது புதுமை என்ற பெயரில் பிரபலமாகிறது. யார் வேண்டுமானாலும் சமையல் நிபுணர்களாகிவிடுகிறார்கள் தொலைக்காட்சி புகழுக்குப் பிறகு!

ஆம்! முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூகம் தற்போது உணவுப் பண்பாட்டில் உருக்குலைந்து வருகிறது….!

கல்யாண வீடுகளில் தங்கள் அந்தஸ்த்தை வெளிப்படுத்த பகட்டான, விதவிதமான உணவுகளை இலையில் நிரப்புகிறார்கள்! ஒரு இனிப்பு பலகாரம், ஒரு பாயாசம் என்ற நிலையெல்லாம் ஏதோ கதியற்றவர்களின் வீட்டு கல்யாணமாக கருதும் நிலை ஏற்பட்டுவருகிறது. நாலைந்து இனிப்புவகைகள் போடு பன் நடுத்தர குடும்பமென்றால் பத்து, பன்னிரெண்டு இனுப்புவகைகளை இலைபரப்பி பணக்காரர்கள் தங்கள் பகட்டை வெளிப்படுத்துகிறார்கள்.
இத்துடன் நான்கைந்து பலகார வகைகள், நாலைந்து சாப்பாடுவகைகள், மூன்று நான்கு அப்பளம், சிப்ஸ் வகைகள், வடை, கட்லெட்டு வகையறாக்கள் இதற்கு மேலும் வெள்ளைச்சோறு, ரசம், கூட்டு, பொறியல்… இத்யாதிகள் இத்துடன் முடிந்தால், கல்யாண வீட்டாரின் கௌரவம் முழுமை பெறாது என நினைத்தோ என்னவோ மீண்டும் ஒரு பக்கம் பழக்கலவை கிண்ணங்கள், ஐஸ்கிரீம் கிண்ணங்கள், பீடா, வெத்தலை வகையறாக்கள்… என அமர்களம் தான்!

இத்தனை வகைகளை உண்டால் ஆரோக்கியம் அதோகதி தான்! ஒரு வகையில் ஆடம்பர திருமணவிருந்துகளை நான் வயிற்றின் மீது செலுத்தப்படும் வன்முறையாகத்தான் நான் பாவிக்கிறேன்.

மகாபாரதத்தில் கௌரவர்களின் மத்தியில் மாட்டிக்கொண்டு சுற்றிலும் அம்புகளின் தாக்குதலை எதிர்கொண்ட அபிமன்யூவைப் போல நம் ஜீரண உறுப்புகளை இந்த கல்யாண விருந்துகளின் அயிட்டங்கள் தாக்கி நிலைகுலைய வைக்கின்றன!.

இது மிகைப்படுத்தப்பட்ட உவமையல்ல…!
இத்தகைய விருந்துகளால் நமது உணவுப்பாதையே ஸ்தம்பிக்கிறது. சிறுகுடல் சின்னாபின்னப்பட…
பெருங்குடல் பிதுங்கி திணற…,
கல்லீரல் கதிகலங்க….,
மண்ணீரல் மன்றாட…,
எதுக்களிப்பால் நெஞ்சு நிலைதடுமாற…,
கழிவுகளின் தேக்கத்தால் உடல் சூடேற…,
மொத்தத்தில் ஆரோக்கியத்தின் மீதான பலமான அடியாக பல திருமண விருஃந்துகள் சாப்பிடுபவர்களை திக்குமுக்காட வைக்கிறது. பொதுவாக உண்ணும் உணவு உடலுக்கு புத்துணர்ச்சி தர வேண்டும் ஆனால் அதீத உணவோ நம்மிடம் இருந்து கொண்டிருக்கும் ஆற்றலை, இழக்கும்படி செய்து விடுகிறது.

பலமான விருந்தின் இறுதியில் ஐஸ்கிரீம் சாப்பிடும்போது இந்த ஐஸ்கிரிமானது முன் உண்ட அனைத்து உணவுகளையும் செரிமானமாகாமல் தடுக்கும் பணியை செய்கிறது. ஏற்கெனவே அதீத உணவு உள்ளே போயுள்ளதால் சிரமப்படும் ஜீரண உறுப்புகளை மேலும் செயலிழக்க செய்யும் இந்த ஐஸ்கிரீமை ஏன் விருந்தின் இறுதியில் சேர்க்கிறார்கள்? இது எவ்வளவு விவஸ்தைகெட்ட அணுகுமுறை…! இந்த உச்சகட்ட முட்டாள்தனத்தை கறுப்புபணத்தை அழிப்பதற்கென்றே கல்யாணவிருந்தை நடத்தும் கொழுத்த பணக்காரர்கள் சிலர்தான் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்.

புளிச்ச ஏப்பக்காரர்கள் சிலரின் புரையோடிய உணவு கலாச்சாரம் சமூக கலாச்சாரமாக மாறிவருவது சாபக்கேடு! இப்படிப்பட்ட ஆடம்பரமான திருமணவிருந்து உணவு கலாச்சாரம் இன்று நடுத்தரவர்க்கத்தினரையும், எளிய மக்களையும் கூட தொற்றிக்கொண்டு வருகிறது. தங்கள் வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் போட்டாலும் போதாது என்று பெரும் கடன்பட்டும் திருமணவிருந்து நடத்துகிறார்கள். திருமணவிருந்து, மஞ்சள் நீராட்டுவிழா, பிறந்தநாள் விழா… என்று நாள்தோறும் ஏகதடபுடலாக நடந்தேறும் உணவு விருந்துகள் அதை நடத்துபவர்களுக்கும் நஷ்டத்தையும், கஷ்டத்தையும் தருவதோடு, வந்து சாப்பிட்டுச் செல்பவர்களின் ஆரோக்கியத்திற்கும் உலைவைக்கிறது. தானும் இது போல் தன் வீட்டு விசேஷங்களை நடத்த வேண்டும் என்ற விஷத்தையும் விதைக்கிறது.

இத்துடன் ஒவ்வொரு விஷேஷத்திலும் விரயமாகும் உணவுப் பலகாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒவ்வொரு இலையிலும் 20 முதல் 40% உணவுகள் விரயமென்றால், எண்ணிக்கை தெரியாமல் சமைப்பதன் மூலம் சுமார் 30 முதல் 50% உணவுகள் விரயமாகிறது. உணவின் மீது இந்த சமூகத்திற்கு இருக்கும் அலட்சியத்திற்கு இந்த விருந்துகளே அத்தாட்சி.

‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’
அளவுக்கு மீறி உட்கொண்ட உணவு மாத்திரம் நஞ்சாவதில்லை, உட்கொண்ட அத்துனை உணவுமே நஞ்சாகிவிடும். உடலும் நலிவடையும். இயற்கை உணவை மட்டுமே உட்கொண்டபோதிலுமே கூட ஒரே நேரத்தில் பற்பல காய்கறிகளையோ, பழங்களையோ உட்கொள்ளக் கூடாது.

ஏனெனில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை இருக்கும். செரிமானத்திறன் வேறுபடும். இதுமட்டுமின்றி ஒன்றுடன் ஒன்று சேர முடியாத காய்கறிகளும் உள்ளன.
உதாரணத்திற்கு முள்ளங்கி, முட்டைகோஸ், காளிளெவர், வாழைத்தண்டு போன்று காய்கறிகளை உட்கொள்ளும் போது மற்ற காய்கறிகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் மற்ற காய்கறிகளிலுள்ள அயோடின் சத்தை உடலில் சேராத வண்ணம் தடுத்துவிடும் இயல்பு இக்காய்கறிகளுக்குள்ளது.

இது மட்டுமின்றி காய்கறிகலவையாக சமைக்கும் போது உடனே வெந்துவிடக் கூடிய காய்களையும், தாமதமாக வேகும் காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து சமைக்கக் கூடாது. அப்படி சமைத்தால் சீக்கிரமாக வெந்த காய்கறிகளில் உள்ள தாது உப்புகள் எனப்படும் மினரல்ஸ் அதீத சூட்டில் அழிந்துபோவதோடு, அமிலத்தன்மை கொண்டதாக மாறிவிடும். குறிப்பாக பூரணிக்காய், வெள்ளரி, வெண்டை, முள்ளங்கி, காளிபிளவர், வாழைப்பூ போன்றவற்றை அடுப்பில் அதிக நேரம் சூடேற்றக் கூடாது.

தற்போது உணவகங்களில் காளிபிளவரை சிக்கன் 65 போல மசாலா தடவி பொறித்து தருகிறார்கள். இது காளிபிளவரிலுள்ள சத்துகளை காலியாக்கிவிடும். பொதுவாக நமது தமிழ் உணவு கலாச்சாரத்தில் பொறிப்பது, வறுப்பது என்பது கிடையாது. ஆவியில் வேகவைப்பது தான் நம் மரபார்ந்த உணவு கலாச்சாரமாகும்.

நம் உணவு கலாச்சாரத்தின் ஒவ்வொரு அணுகுமுறையும் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதாகும்!  ஆவியில் வெந்த உணவு செரிமாணத்திற்கு துணைபுரியும்! வறுத்த உணவும், பொறித்த உணவும் செரிமாணத்தை சிரமத்திற்குள்ளாக்கும். அருமையாக ஆவியில் வெந்தெடுத்த உணவை சட்டியில் போட்டு வதைத்து, வறுத்து ‘பிரைடுரைஸ்’ எனப்பெயரிட்டு தக்காளி சாஸை ஊற்றிக்கொடுப்பது நவீனமல்ல, அறிவீனம். இதற்கு பிரைடுரைஸ் எனப்பெயரிடுவதற்கு மாறாக ‘பிராடுரைஸ்’ எனப் பெயரிடுவது பொருத்தமாகும். அதுவும் ரசாயனக் கலப்பிலான ரீபைண்ட் ஆயில், பாமாயில், டால்டா போன்றவை கொண்டு உருவாக்கப்படும் உணவுகள் நம் உடலுக்குள் சென்ற பின்பு முழுவதுமாக செரித்து பயன்தருவதுமில்லை, கழிவுகளாக முற்றிலும் வெளியேறிவிடுவதுமில்லை, இவை கழிவுகளாகி ரத்த நானங்களில் படிகிறது. இதனால் ரத்தநாளங்கள் நெகிழ்வு தன்மை மறைந்து விரைப்பு பெற்றுவிடுகின்றன. ரத்தம் அடர்த்தியாகிவிடுகிறது. ரத்த ஓட்டம் தடைபடுகிறது. உடலினுள் ரத்த ஓட்டத்திற்கு துணைபுரியும் வியான வாயு வீரியம் இழக்கிறது. ஜீரணத்திற்கு ஆதாரமான சமான வாயு சஞ்சாரம் செய்ய வழியின்றி சங்கடத்திற்குள்ளாகிறது. இதன் விளைவாக கைகால் வலி, கழுத்துவலி, மூட்டுவலி என உடல் பிரச்சினைக்குள்ளாகிறது.

எனவே அடிப்படையில் அறம் சார்ந்த உணவு கலாச்சாரமாக திகழ்ந்த தமிழ் சமூகம் அறம் கொன்ற உணவு கலாச்சாரத்திற்கு  வேகமாக நகர்ந்து கொண்டிருப்பது வேதனையாகவும், வியப்பாகவும் உள்ளது.

‘’பசிகொல்லா விரதமே அறத்தின் முதல் படி நிலை’’ எனக் கருதி வாழ்ந்த தமிழ் சமூகம் பசிகொன்று புசிப்பதில் பேராசைக் கொண்டே சமூகமாக மாறுவது தடுக்கப்பட்டாக வேண்டும்.

நன்றி: ரௌத்திரம், ஏப்ரல் 2016No comments: