Saturday, February 4, 2017

விவசாயம் - நேற்று இன்று நாளை                                                                                                                -சாவித்திரிகண்ணன்

எங்கெங்கும் காணினும் பச்சைபசேல் பயிர்கள்....
நெற்கதிர்கள், சிறுதானியங்கள், ஊடுபயிர்கள்....
சத்துமிக்க காய்கறிகள், மணம்வீசும் பூக்கள்
வாழை, தென்னை, பனை, மா, பலா, கொய்யா.... என எண்ணற்ற பழ மரங்கள்...,
கிராமங்கள் தோறும் அரசமரம், ஆலமரம்,பூங்கன், வேம்பு, வாகை, முருங்கை...செழிதோங்கிய மரங்கள்!
கால்நடைகள் இல்லாத விவசாயி வீட்டை பார்க்க முடியாது.

மண் என்றால் செம்மண்,கரிசல்மண்.வண்டல்மண்,களிமண்..என்பது பொது புரிதல்
ஆனால்,மண்ணை அதன் இயற்கை சூழல் சார்ந்து
குறிஞ்சி(மலை),முல்லை(காடு),மருதம்(நாடு),நெய்தல்(கடல்),பாலை(வற்ட்சி பகுதி) என பகுத்து அந்தந்த மண்ணுகுரிய பயிர் செய்து வாழ்ந்தவன் தமிழன்.
'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என
ஆனை கட்டிப் போரடித்ததது' தமிழ் மண்!
விவசாய தொழில் நுட்பத்தில், வேளாண்துறை சார்ந்த பட்டறிவில் உலகத்திற்கே முன்னோடியாகத் திகழ்ந்த பூமி தமிழகம் !

வேட்டைச் சமூகமாகத் திரிந்த மனிதகுலம் நிலவுடைமைச் சமுதாயத்திற்கு மாறியதிலிருந்து சுமார் 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக தாவரப்பயிர்கள் குறித்த தன்நிகரற்ற நுண்ணறிவைக் கொண்டது நம் தமிழ்ச்சமூகம்!

நம் உழவுக்கு பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ளது.

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுதுஉண்டு பின் செல் பவர்.
என உழவை முதன்மை படுத்திய சமூகம்

விவசாயம் என்பது ஏதோ பிழைப்பதற்கான தொழிலல்ல!
அது வாழ்வின் ஒரு அங்கம்! மிகப்புனிதமானது!

தமிழனின் வாழ்வியல் அறநெறிகளோடு பின்னிப் பிணைந்தது

இங்கே விதைப்பது தொடங்கி அறுவடை வரை அனைத்துமே புனிதமான சடங்குகளாக கொண்டாடப்பட்டன.

குழந்தைக்கு முதன் முதலாக சோறுட்டுவதே சோறு தித்துதல் என்ற கொண்டாட்டமானது!

ஐயாயிரம் வகை நெல்ரகங்கள் கதிராடிச் செழித்தோங்கிய பூமி வேறெங்காவது உண்டா?

ஒவ்வொரு அரிசிக்கும் ஒரு தனிச்சுவை, தனி மருத்துவ குணம்!

ஆண்டவனுக்கு நிகராக அரிசியை கொண்டாடியவன் தமிழன்

பசியால் துடித்தாலும் அவன் விதைநெல்லை சாப்பிடமாட்டான்! அது அடுத்த உழவுக்கானது! அடுத்தடுத்த தலைமுறைக்கானது என்பதை ஆணித்தரமாக நம்பினான்!

வறட்சி, வெள்ளம், இயற்கை சீற்றத்தில் தான் அழிந்தாலும், விதை நெல்லை அழியவிடக்கூடாது என அவற்றை ஆலயங்களின் கோபுரக் கலசங்களில் சேகரித்து வைத்தனர் நம் முன்னோர்.!

வெள்ளத்தை சமாளிக்க மடுமுழங்கி சம்பா, உவர்நிலத்திற்கு உவர் சம்பா, புஞ்சை நிலமென்றால் சிறுதானியங்கள்.... என இயற்கையின் இயல்பிற்கேற்ப பட்டறிவால் பயிர்களை பயிரிட்டது தமிழ்ச்சமூகம்.

இன்று வரை இந்த பூமியின் நிலப்பரப்பில் காணப்படும் தாவரங்களில் 15,000 வகையினங்கள் வரையிலுமே அதன் மருத்துவ பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால், நம் தமிழ்மண்கண்ட சித்தர்களோ பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே 8,700வகை தாவரங்களின் மருத்துவகுணங்கள், அவற்றை பண்படுத்தி பயன்படுத்தும் முறைகள் ஆகியவற்றை கூறிச்சென்றுள்ளனர்!
நீர் மேலாண்மைககு ஒரு நிகரற்ற சான்றாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட கல்லணை! கட்டியவன் கரிகாழச்சோழன் எனும் தமிழன்!
ஆனால், அப்படிப்பட்ட பெருமை படைத்திருந்த இன்று நம் தமிழ்நாட்டிற்கு என்னாயிற்று?

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதொர் வைகை பொருணைநதி - என
மேவிய ஆறு பல ஓடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு
என்று பரவசத்துடன் பாரதி பாடிவியந்ததெல்லாம் கனவா? பழங்கதையா?
நாள்தோறும் விவசாயிகளின் தற்கொலைகள்.....
நகரங்கள் தோறும் புகழிடம் தேடும் விவசாயிக் கூலிகள்,
வெறிச்சோடிய வயல்வெளிகள்,
விரிவாக்கமடைந்து கொண்டிருக்கும் நகர்புறங்கள்,
கான்கிரிட் காடுகளாகும் விளைநிலங்கள்,
வற்றிப் போன ஆறுகள்,
ஆலைக்கழிவுகளால் அலங்கோலமான ஆற்றுப்படுகைகள்,
மறுபுறம் சூறையாடப்பட்ட ஆற்றோர மணற்பரப்புகள்.... ௨
தோண்டிப் பார்த்தும் நீர் எடுக்க முடியாமல்
துளைபோட்டு நீர் எடுத்து சக்கையாக உறிஞ்சி
சல்லடையாக்கப்பட்ட நிலத்தடி நீர்வளம்.

ஏன் இந்த நிலைமை?

'சுழன்றும் ஏர் பின்னது உலகம்'
என்ற பொய்யாமொழிப் புலவனின் வார்த்தை பொய்யாகுமா?

இல்லை, இது தற்காலிகப் பின்னடைவே!

ஆனால், நம் வீழ்ச்சியின் விபரிதத்தைத்தை உணர்ந்தால் தான் நாம் எழுச்சிக்கான பாதை புலப்படும்.

நமது தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 325லட்சம் ஏக்கராகும்.

இதில் 17 முக்கிய ஆற்றுப்படுகைகள்,61நீர்தேக்கங்கள் மூலம் பாசன வசதி பெற்ற நிலப்பரப்பு சுமார் 80லட்சம் ஏக்கர் தான்!

அதே சமயம் கிணறு, ஏரி, குளம் மூலம் மழைநீரை சேகரித்து விவசாயம் செய்ய முடிந்த நிலப்பரப்பு சுமார் 90லட்சம் ஏக்கர்களாகும்!
இப்படியாக விவசாயத்திற்கான விளைநிலங்கள் 180லட்சம் ஏக்கர்களாக இருந்தது - 40ஆண்டுகளுக்கு முன்பு வரை!

ஆனால், இது படிப்படியாகக் குறைந்து தற்போது சுமார் 50லட்சம் ஏக்கரில் மட்டுமே விவசாயம் நடக்கின்றது.
இதற்கெல்லாம் காரணம் என்ன?
காவேரியை கர்நாடகம் சிறைபிடித்தது.
பாலாற்றை ஆந்திரா பதுக்க முயற்சிக்கிறது
முல்லை பெரியாரை கேரளா முழங்கிய வண்ணமுள்ளது
என்றாலும் கூட நீர்மேலாண்மை இங்கு நீர்மூலமாக்கப்பட்டது ஒரு பிரதான காரணமாகும்!

ஆண்டுக்கு சராசரியாக தமிழ்மண்ணில் 950மி.மி மழைபெய்கிறது.
நம் மண்ணில் முன்னோர்கள் சுமார் 49,000 ஏரி குளங்களை உருவாக்கி தந்தனர்.
இவற்றில் பெருமளவை நாம் தொலைத்துவிட்டோம் 7கி.மீ வரை நீண்டிருந்த ஏரிகெளல்லாம் எங்கே போனதென்றே தெரியாமல் அடுக்குமாடிக்கட்டிடங்களாக ஆக்கிரமித்துவிட்டோம்.
மண்மேடிட்ட ஏரி குளங்களை நமக்கு தூர்வாரத்துப்பின்றி வாழ்கிறோம்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மேட்டூர் அணைக்குள் மூன்றில் ஒரு பங்கு மணலால் மூடப்பட்டு, அதனால் தண்ணீர் சேதாரமாவது பற்றி சிந்திக்காமல் அரசியல் செய்கிறோம்.

நம் பக்கத்து மாநிலங்கள் நூற்றுக்கணக்கில் கதவணைகள், தடுப்பணைகள், சிற்றணைகள் கட்டி நமக்கு சேரவேண்டிய தண்ணீரை பிடித்து வைக்கின்றன.
ஆனால் நாமோ கிடைக்கும் மழைநீரில் சரிபாதியை கடலுக்கு தாரை வார்க்கிறோம்.

கர்நாடகத்துடன் காவேரி நீருக்காக சண்டையிட்டுக் கொண்டே ஆண்டுதோறும் சராசரியாக 90டி.எம்.சி தண்ணீரை கடலுக்கு அரிபணிக்கிறோம்

விஞ்ஞான வளர்ச்சி நமக்கு கைகொடுத்த காரணத்தால் நிலத்தின் நீர்வளத்தை ஆயிரம் அடிக்கு மேலாக போர்போட்டு துளைத்து சூறையாடி வருகிறோம்!
1950ல் அன்றைய விரிந்து பரந்த மதராஸ் மாநிலத்தில் இருந்த போர்பம்புகள் 14000 தான்1

ஆனால் இன்றோ சுருங்கிப் போன தமிழகத்தில் 20லட்சம் பம்புசெட்டுகள் இந்த நிலத்தை சல்லடையாக்கி நீரை உறிஞ்சி வருகின்றன!

1960களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைபுரட்சி விவசாயத்தின் அறக்கோட்பாடுகளையெல்லாம் ஆழப்புதைத்தது.
அதன் விளைவு நமக்கு உணவிட்ட அன்னை பூமியில் அதிக விளைச்சலுக்காக அளவில்லாமல் ரசாயன உரங்களை கொட்டி அணுஅணுவாக அதன் வளத்தை சாகடித்தோம்!

இயற்கை விவசாய பயிர்விளைச்சலில் நுனிமட்டுமே வீட்டுக்கு கிடைத்தது. நடுப்பகுதி தீவினமாக மாட்டுக்குவைக்கோலானது.

ஆக விளைச்சலில் ஒரு பங்கு தானியமாக மனிதனுக்கென்றால் இருபங்கு மாட்டுக்கானது. பால் நமக்கு உணவானது. அதன் சாணமும், மூத்திரமும் நிலத்திற்கு ஊட்டசத்து மிக்க உணவானது. பசுமைபுரட்சியில் தானியம் இருமடங்கு வைக்கோல் ஒரு பங்குமாக மாறியது. இதனால் கால்நடைச் செல்வங்கள் காணமலானது, மண்மலடானது, விளைந்த தானியங்களோ மனிதர்களை நோயாளிகளாக்கியது.

சுமார் அரை நூற்றாண்டு பசுமைபுரட்சியின் கசப்பு அனுபவங்கள் நம்மை பாரம்பரியவிவசாயத்தை நோக்கி பயணித்தே ஆக வேண்டிய கட்டாயத்தை நமக்கு நிர்பந்தித்துள்ளது.

இப்போதைய நிலை அப்படியே தொடருமானால் இன்னும் ஒரிரு தசாப்தங்களில் உலக மக்கள் தொகையில் 25 சதவிகிதத்தனருக்கு மட்டுமே உணவு கிடைக்கும் என ஐ.நாவின் அங்கமானதும், ஆப்ரிக்க ஐரோப்பிய நாடுகளின் பல்கலை அங்கமானதுமான 'கானா இயற்கை வளங்கள் நிறுவனம்' எச்சரித்துள்ளது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே செயற்கை விவசாயம் முளைவிட்டபோதே அன்று கடுமையாக எதிர்த்தவர் சர்.ஆர்பர்ட்ஹார்வார்டு. இயற்கைக்கு இணைந்த வேளாண்மையே மனிதகுலத்திற்கு உகந்தது என்றார். இதைத்தான் ஜப்பானின் மசனோபுஃபுகோகாவும் வலியுறுத்தினார்.

இயற்கை விவசாயத்திற்கான குரல்கள் இந்தியாவிலும் எதிரொலித்தது. மகாராஷ்டிராவில் பாஸ்கர் ஹிராஜிசாவே, நரேந்திர தபோல்கர், சுபாஷ் பாலேக்கர் போன்றவர்கள் எடுத்த பகீரத முயற்சிகளாலும், தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ நம்மாழ்வாரின் அயராத பேருழைப்பும் நமக்கு ஓரளவு நம்பிக்கையை துளிர்க்க வைத்துள்ளது.

காணாமல் மறைந்துபோன பல்லாயிர கணக்கான அரிய பாரம்பரிய நெல் ரகங்களில் 600 வகை நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று தமிழகத்தில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு திரும்பியுள்ளனர்.
இயற்கை விவசாயத்தில் நல்லவிளைச்சலும், லாபமும் உள்ளது என்பதன் அத்தாட்சியாக இன்று நகரங்களெங்கும் முளைத்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இயற்கை அங்காடிகள் திகழ்கின்றன.

நகர்புறத்தில் படித்து தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிய மென் பொறியாளர்களான இளைஞர்களும், பல்வேறு துறை சார்ந்த இளைஞர்களும் தற்போது கிராமங்களில் ஆங்காங்கே தங்கள் சக்திகேற்ப நிலங்கள் வாங்கி விவசாயத்தில் அர்பணிப்போடு ஈடுபடுகின்ற ஆச்சிரியத்தை கடந்த 10 ஆண்டுகளாக பார்க்க முடிகிறது!

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் வழிகாட்டிகளாகவும் தஞ்சை கோ.சித்தர், கொடுமுடி டாக்டரும், பஞ்சகவ்ய சித்தருமான நடராஜன், நெல்ஜெயராமன், நாகர்கோவில் இரா. பொன்னம்பலம், பரமக்குடி முனைவர்.பி.துரைசிங்கம், அரச்சலூர் செல்வம், உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம், திண்டுக்கல் காந்திகிராமிய பல்கலைக்கழகம், கரூர் மாவட்ட வானகம்,புதுச்சேரியின் பூர்வீகம் அறக்கட்டளை, புதுக்கோட்டையின் ரோஸ் தொண்டு நிறுவனம், குடும்பம்..... போன்ற எண்ணற்ற ஆளுமைகளும், நிறுவனங்களும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் போரில் முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர்.

நம் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க முடியுமா? நோயற்ற ஆரோக்கியமான உணவுகான விளைச்சலை பெருக்கமுடியுமா? என்ற கேள்விகள் எழுந்த வண்ணமுள்ளன.
இது நீண்ட நெடிய போராட்டம்தான்! காலம் தான் இதற்கு விடை சொல்லும். அந்த மகத்தான காலக்கட்டத்திற்கு கைகொடுக்கும் முயற்சியாகத்தான் நாம் இந்த தொடரில் நேற்றைய விவசாயத்தின் நிலை, இன்றுள்ள சிக்கல்கள், நாளை நாம் சென்றடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை பற்றி அலச உள்ளோம்.


நன்றி: குமுதம் மண்வாசனை, பிப்ரவரி 1 

No comments: