Saturday, February 4, 2017

மீட்டெடுக்கபடவேண்டிய பாரம்பரிய உணவுகள்

                                                                                                          -சாவித்திரிகண்ணன்

நம் முன்னோர்கள், பரம்பரைபரம்பரையாக எந்த உணவை உண்டு, உடல்திறன்பெற்று வாழ்ந்தார்களோ...., அந்த உணவைத் தான் பாரம்பரிய உணவுகள் என்றழைக்கிறோம். அன்று நம் முன்னோர்கள் உண்ட சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிகளின் பெயர்களை சொன்னாலே இன்றுள்ள தலைமுறைக்கு தெரிவதில்லை.

சிறுதானியங்கள், ஆனால் பெரும் பலன்கள்!

சிறுதானியங்கள் அரிசியைக் காட்டிலும் அதிமுக்கியத்துவமானவையா?
ஆமாம். காரணம் அரிசியில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும், கொழுப்பும் அதிகம்.

அதனால் அரிசி அமிலத்தன்மை கொண்ட உணவாகும். ஆனால் சிறுதானியத்திலோ புரதம் அரிசியைக்காட்டிலும் இருமடங்காகும். நார்சத்தோ பல நூறுமடங்கு அதிகமாகும்.
மினரல்ஸ் எனப்படும் தாது உப்புகள், இரும்புசத்து, கால்சியம் போன்றவை அரிசியைக் காட்டிலும் பற்பல மடங்கு கூடுதலாகும்.
எனவே தான் குமரிமுனை தொடங்கி இமயம் வரை சிறுதானியம் பன்னெடுங்காலமாகப் பயிரிடப்படுகின்றன உலகில் 20க்கு மேற்பட்ட நாடுகளில் சிறுதானிய உற்பத்தி சிறப்பிடம் பெற்றுள்ளது. இதிலுள்ள கரையாத நார்சத்துகள் மலச்சிக்கலுக்கு மருந்தாகின்றன.

இதயத்தை அரண்செய்கின்றன.
பருவ வயதினருக்கு பலம் சேர்க்கின்றன.
மாதவிடாய் நின்ற நின்ற பெண்களுக்கு மகத்துவமாகின்றன
 நீரிழிவு நோயை நிருமூலமாக்குகின்றன.
புற்றுநோயை புறமிடவைக்கின்றன.
பித்தகற்களை சத்தமின்றி கரைக்கின்றன! அல்லது வராமலே தவிர்கின்றன.
மொத்தத்தில் சிறுதானியங்கள் ஆரோக்கியத்தின் திறவுகோலாகின்றன.

சிறுதானியங்கள் என்றால் அவை வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, பனிவரகு, சின்னசோளம் ஆகிய எட்டையும் குறிக்கும்.

 அரிசி, கோதுமை, மக்காசோளம்.... போன்றவற்றை நாம் பெருதானியங்கள் என்கிறோம்.

 நவதானியங்கள் என்பவை பச்சைபயிறு, கொண்டைக்கடலை, நிலக்கடலை, மொச்சை, கருப்பு உளுந்து,காராமணி, சோயாபீன்ஸ், கொள்ளு, பச்சை பட்டாணி போன்றவையாகும்.

அந்தந்த மண்ணில் பிறந்தவர்கள், எந்தெந்த இடத்தில் வாழ்ந்தாலும் பிறந்த மண்ணுக்குரிய உணவே அவர்கள் உடலுக்கும். உள்ளத்திற்கும் உகந்ததாகும். காற்றும், நெருப்பும், ஆகாயமும் உலகத்திற்கே பொதுவானவை.

ஆனால், நிலமும், நீரும் அந்தந்தச் சூழலுக்கு உகந்தவை. உணவென்பது நிலமும், நீரும் கலந்த கலவையே.

நம் முன்னோர்கள் காலத்தில் பணம், காசுக்கு மாற்றாக பண்டமாற்று என்றொரு வழக்கம் இருந்தது. இதனால் சமூகத்தின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்டு ஒன்றைக் கொடுத்து, மற்றெல்லாவற்றையும் பெற்றனர்.

மூன்று கி.மீக்கு ஒரு விதை நெல் புழக்கத்திலிருக்கும். அரிசியும், சிறுதானியங்களும் நிலத்திற்கு நிலம் வேறுபட்டன.
அவை அனைத்தும் அந்தந்த நிலத்திற்குரிய மக்களால் பெயர்சூட்டப்பட்டன. யானைமுக்கன், கம்மன்சம்பா, காட்டுயாணம், மிளகுச்சம்பா, குள்ளக்கார், பெருங்கார்....
என ஆயிரத்திற்கும் மேலான விதவிதமான பெயர்களில் அரிசி ரகங்கள் இருந்தன.

இவை போன்றே சிறுதானியங்களிலும் நிறைய ரகங்கள் உள்ளன. தினை என்றால் நாற்பத்துக்கு மேற்பட்ட ரகங்கள் உள்ளன.

நமது கல்வியிலும், கலாச்சாரத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் அந்நிய ஆதிக்கம் நுழைந்ததைப் போலவே உணவிலும் அந்நிய ஆதிக்கம் படிப்படியாக நுழைந்தது.

உணவில் நுழைந்த அந்நிய ஆதிக்கம் எதிர்புகளின்றி ஏகபோக மாயிற்று.

விளைவு, பலசாலிகளாத் திகழ்ந்த தமிழ்ச்சமூகம் பலஹீன மடைந்துவிட்டது.

தன்மான சிங்கங்களாக சிலிர்த்து திரிந்த சமூகம் அற்பச் சுகங்களுக்காக அடிமை மனோபாவத்தில் ஆழ்ந்து திளைக்கிறது.

நாக்குச் சுவைக்காகவும், பார்வைப் பசிக்காகவும் நாம் அனுமதித்த உணவுகள்
நம் உடலை பலஹீனமாக்கி, உணர்ச்சிகளை மலடாக்கி, உள்ளத்தை வெறுமையாக்கி மொத்தத்தில் நம் நலத்தையும், குணத்தையும் மாற்றி விட்டன.

நாம் உண்ணும் உணவு தான் நம் உடலாகிறது.
 உதிரமாகிறது.
தசையாகிறது,
மஞ்ஜையாகிறது
என்பதெல்லாவற்றையும் விட அவையே நம் எண்ணங்களுக்கும், சிந்தனைக்கும், செயல்பாடுகளுக்கும் அடித்தளமாகின்றன.

இவற்றின் வழியே நம் அடையாளத்தை கட்டமைக்கின்றன. அந்த வகையில் நாம் நம் அடையாளத்தை இழந்துவிட்டோம்.

அன்று ஆண்களிடமிருந்த வீரம் இன்று என்னவாயிற்று? பெண்களிடமிருந்த நாணம் ஏன் நழுவிப் போயிற்று?
குழந்தை பருவத்திற்கேயுரிய 'இன்னாசென்ஸ்' தற்போது இல்லாமலாகிவருகிறது.
 பிஞ்சிலே பழுத்து, நஞ்சிலே துவைத்தெடுத்த நச்சு முத்துக்களாக இன்றைய இளம் சமூகத்தை வளர்த்தெடுக்கப் போகிறோமா?

தமிழனுக்கேயுரிய தன்மானமான உணர்வு குறைந்து வருகிறது. விருந்தினரை உபசரிக்கும் விருந்தோம்பல் எனும் அடிப்படை பண்புநலன் அருகிவருகிறது. பெரியாரைப்பணிதல், சிறியோரை அரவணைத்தல், சமூகநலனுக்காக கூடி உழைத்தல், பிறர்நலன்விழைதல், உழைத்து வாழ்வதில் உவகைகொள்ளுதல், பழிபாவத்திற்கு அஞ்சுவது, பொதுநலனில் ஈடுபாடு, தாய்மொழிபற்று, நாட்டுப்பற்று... என சென்ற தலைமுறைகளின் அடையாளங்களாகத் திகழ்நதவை யாவும் இப்போது உருக்குலைந்து வருகின்றன.

எல்லாவற்றுக்கும் உணவுக்கலாச்சாரம் உருக்குலைந்ததே அடிப்படையாகும்.

 புறநானுறு காவியத்தில் போரில் புறமுதுகிட்டு, முதுகில் ஈட்டிபாய்ந்து கிடந்த மகனைக் கண்ட அவன் தாய், அவனுக்கு பாலூட்டிய தன் முளையை வெட்டி எறிந்த நிகழ்வு உணர்த்தும் செய்தி என்ன? என் மார்பகத்து தாய்பால் இவனுக்கு வீரத்தை யல்லவா ஊட்டியிருக்க வேண்டும்? அன்றி இவன் கோழையாகிப் போனானென்றால் இவனுக்கு பாலூட்டிய என் குற்றமன்றோ அது? என்று அந்தத் தாய் சிந்தித்தன் விளைவாகத் தான் தன் மார்பகத்தை அறுத்தெறிந்தாள்! கேட்கவே சிலிர்க்கிறதல்லவா?

 நாட்டு மாட்டில் பால் குடித்து வளர்ந்த காலத்தில் நம் நரம்புகளில் தன் மான ரத்தம் ஓடியது.
சீமைமாட்டுப்பாலை, அதிலும் அதீத பாலுக்காக ஊசிபோட்டு கறக்கப்பட்டு, பின்பு பதப்படுத்தவென்று பலவிதங்களில் பாழ்பட்டு,
நாம் குடிக்கின்ற பாலில் வீரமா விளையும்?
இல்லை இது சோரத்திற்கே துணைபுரியும்.
பாலில் மட்டுமா?
நம் உணவே ஏறத்தாழ நம்மிடமிருந்து அபகரிக்கபட்டு விட்டதல்லவா?
சிலகாலத்திற்கு சிறுதானியங்களே வழுக்கொழிந்து போனது எப்படி நிகழ்ந்தது?
சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பெயர் குறிப்பிடப்படும் வரகும், திணையும் வழக்கொழிந்ததன் மாயம் என்ன?

தேனும், திணைமாவும் உண்டு, தினவெடுத்த தோளும், வாளும் கொண்டு போர்புரிந்த இனம் இன்று பம்மிீககிடப்பதென்ன? 'வரகரிச்சோறும் வழுதுணங்காய்வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும்.....'

என நம் ஔவைபாட்டி சுவைத்து எழுதிய உணவு தடம் மாறி காணாமலானதென்ன?

உடல்வலுப்பெற, உயிரணுக்கள் விருத்தியாக வேண்டுமென்றால், சாப்பிடவேண்டிய சம்பா அரிசிக்குப் பெயரே, மாப்பிள்ளை சம்பா என வைத்து, மலட்டுத் தன்மையற்ற சமூகத்தை மருந்துகளின்றி உணவின் வழியே புரந்த தமிழ்சமூகத்தின் உணவு கலாச்சாரம் என்னானது?

கருவுற்ற பெண் ஆரோக்கியமாக குழந்தையைப் பெற்றடுக்கவும், சுகப்பிரசவம் காணவும் வேண்டி கண்டெடுக்கப்பட்ட பூங்கார் அரிசியும், சுகப்பிரசவத்திற்குப் பின் தாய்ப்பால் சுரப்பிற்கென கொடுக்கப்பட்ட திணையரிசியும், கிச்சலிசம்பாவும், நிலச்சம்பாவும், குழிவெடிச்சான் அரிசியும் காணாமலாக்கப்பட்டு ஐ.ஆர்.எட்டு, ஐ.ஆர் இருபது, சூப்பர் பொன்னி... என ஏதேதோ பெயர்களில் ஓட்டுரகங்களும், வீரியவிதை அரிசி ரகங்களும் பட்டைதீட்டபட்டு, பளபளப்பாக பந்தி வைக்கப்பட்ட காலத்தின் கோலத்தை என்னென்பது?

 மூங்கில் அரிசியும், காட்டுயாணமும் நூறுவயதைக் கடந்த முதியோர்களைக் கூட மூட்டுவலிகளின்றி திண்ணென திகழச் செய்த அரிசி ரகங்களல்லவா?

அறுசுவைக்குள் ஆரோக்கியத்தை புதைத்து பேணிவந்த சமூகமல்லவா தமிழ்ச் சமூகம்!

பாகற்காய், கடுக்காய், கறிவேப்பிலை, வாழைப்பூ, மாம்பருப்பு, ஓமம், வெந்தயம் போன்றவை நம் உணவிலிருந்து விடுபட்ட காலத்திலிந்து தான் நீரிழிவு நோய் நீக்கமறப் பரவியது.

மைதா, வெள்ளைச் சீனி, டால்டா, ரீபைண்ட் ஆயில், பாலீஸ் செய்யப்பட்ட பாரம்பரியமில்லா அரிசி... இவற்றின் வருகைக்கு முன் உள்ள தமிழ்ச்சமூகம் எப்படி இருந்தது?

இவற்றின் வருகைக்கு பின் தமிழ்ச்சமூகம் எப்படி வீழ்ந்தது?
என்பதை குறித்த ஆய்வுகள் வருங்காலத்தில் ஆயிரமாயிரம் பக்கங்களுக்கு வரக்கூடும்.

இன்று எங்கெங்கு காணினும் பரோட்டா, நாண், பீட்சா, பர்க்கர், நூடுல்ஸ், ப்ப்ஸ், சமோச்சா, குளாப்ஜாமுன், பாதுஷா விதவிதமான கேக்குகள், பன்கள், ரொட்டிகள், சான்விட்ச்சுகள்... என எல்லாம் மைதா மயம்...!

 தமிழர்களின் தேசிய உணவாகிவிட்டதா மைதா?
மைதா என்பது உண்ணத்தகாத ஒரு கழிவு....

 கழிவிலிருந்து சமூகத்திற்கு பயன்படும் ஆக்கப் பொருளை உருவாக்கலாம்.
ஆனால் கழிவுகளிலிருந்து உணவு தயாராகலாமா?
கழிவுகளையே உணவுகளாக கருதி கொண்டாட்ட மனோபாவத்தில் திளைக்கும் சமூகம் கழிசடைச் சமூகமல்லவா?

மைதாவை மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் ஏன் தடை செய்துள்ளன......?

பென்சாயில் பெராக்சைடால், அயிலட்டசான் போன்ற ரசாயணக் கலவைகளின் விளைவல்லவா மைதா?

மலச்சிக்கல், நீரிழிவு, மூட்டுவலி, ரத்த அழுத்தம்.... என அனைத்து நோய்களுக்கும் ஆதார மூலமல்லவா மைதா?

தீண்டக் கூடாத குப்பைக்கழிவு தீஞ்சுவை உணவாகியுள்ளதே?

இதுபோல் மற்றொரு பெருந்தீமை வெள்ளைச்சீனி;
 இது ஒரு வெள்ளைவிஷம். இதில் தான் நாம் தமிழர்கள் பாயாசம் செய்து பரவசத்துடன் பருகுகிறார்கள்.

பாஸ்போரிக் ஆசிட், சல்பர்டை ஆக்சைட், காஸ்டிக் சோடா, வாஷிங்சோடா இந்தக் கலவையில் மனித எலும்புகளையும் கூட்டு சேர்த்து தயாரிக்கப்படும் வெண்மைவிஷம் தான் சீனி. இதில் தயாரிக்கப்படுவதற்கு பாயாசம் என்பதா?

 'பாய்சன்' என்பதா?
இது மட்டுமல்ல இன்றைக்கு பழச்சாறுகள் தொடங்கி காபி, டீ, பலகாரங்கள், பால்கோவா, லட்டு, ஜிலேபி, அல்வா.. . என அனைத்து இனிப்புகளும் வெள்ளை சீனியால் தான் செய்யப்படுகின்றன.
 ஒரு ஸ்பூன் சீனியானாலும் அது நம் உடம்பிலுள்ள கால்சியத்தை களவாடிவிடும்.

தினசரி சீனியை ஏதோ ஒரு வகையில் நாம் உட்கொண்டபடியே தான் இருக்கிறோம்.
அப்படி ஒவ்வொரு முறை உட்கொள்ளும் போதும் நம் உடம்பிலுள்ள கால்சியம் களவாடப் பட்டுக் கொண்டேதான் இருக்கும். பிறகு ஏன் மூட்டுவலி வராது.
சிலருக்கு சாதாரணமாக அடிபட்டாலே தற்போதெல்லாம் எலும்புகள் நொறுங்கிவிடுகின்றன. தடுமாறிக் கீழே விழுந்து எலும்பு முறிவு கொள்பவர்கள் ஏராளம்.
எல்லாம் வெள்ளைச் சீனியின் விபரீதங்களே! இது மட்டுமின்றி நீரிழிவு எனப்படும் சக்கரைவியாதி, சிறுநீரகநோய், ஜீரணக்கோளாறு, ஆண்மையின்மை என பல நோய்களை சீனி தோற்றுவிக்கும்.

 சீனி என்பது அடிப்படையில் ஒரு அமிலமாகும்.
எனவே உடம்பில் இது பித்தத்தை அதிகரிக்கும்.
பித்த அதிகரிப்பில் உண்டாகும் நோய்களுக்கெல்லாம் இது துணைபுரியும்.

ஐம்பது வருஷத்திற்கு முன்பு தமிழகத்தில் சீனி எத்தனை பேருக்குத் தெரியும்?

மிகச்சிறிய அளவே புழுகத்திலிருந்தது. சீமைச்சீனி என்பார்கள்.

பனைவெல்லம், தென்னைவெல்லம், பனங்கற்கண்டு, நாட்டுசர்க்கரை, மண்டைவெல்லம் இவை தாம் நாம் இனிப்புக்கு பயன்படுத்தியவை.

தேநீர், காபி, பாயாசம், பொங்கல், மிட்டாய், கும்மாயம், பணியாரம், அதிரசம், புட்டு, களி... என எல்லாவற்றிக்குமே நாம் கருப்பட்டியையும், மண்டைவெல்லத்தையும் அல்லவா பயன்படுத்திவந்தோம்.

 சக்கரைவியாதி என்பது அன்று மிகவும் ஆபூர்வம். அது பணக்காரர்களின் நோயாகத் தான் பார்க்கப்பட்டது.
இன்றோ சக்கரைவியாதி என்பதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அது ஒரு தேசிய நோயாக விஸ்வரூபமெடுத்துள்ளது.
காரணம் நாம் உண்ணும் பாரம்பரியம் தொலைத்த - பாலீஸ் செய்யப்பட்ட - அரிசி,
வெள்ளைச்சீனி, மைதா, டால்டா, ரீபைண்ட்ஆயில் மற்றும் செக்கில் ஆட்டாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவையே!

எனவே, 'பாஸ்ட்புட்' கலாச்சாரத்தை தொலைத்து
பாரம்பரிய கலாச்சாரத்தை நாடுவோம். 

No comments: