Saturday, February 4, 2017

உணவில் உறையும் வாழ்வியல் அறம்

காற்றும் ஓர் உணவேஎந்தெந்த உணவுகள் நன்மை தரும்
எந்தெந்த உணவுகள் தீமை தரும்
என்ற அடிப்படைப் புரிதல்கள் அவசியம்!
அத்துடன் அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப நன்மை எனச் சொல்லப்படுபவை தீமையாகிப் போகும்! தீமை என கருதத்தக்கவை நன்மையாகிவிடும் என்ற யதார்த்தத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

வேர்கடலை மிக நல்லுணவு. புரதம் அதிகமுள்ளது சந்தேகமேயில்லை ஆனால் பித்த உடம்புக்காரர்கள் அறவே தவிர்க்க வேண்டியுள்ளதே! தினையும், கேழ்வரகும் ஆகச்சிறப்பான ஆகாரங்கள்; ஆனால், சூடு உடம்பு கொண்டவர்களுக்கு நல்லதல்ல! இதெல்லாம் அவரவர் அனுபவம் சார்ந்து, உடல் உணர்த்தும் உண்மைகளின் வழியே தெளிந்து பின்பற்ற வேண்டும். சிலபேர் புத்தகங்கள், அல்லது இணையதளத்தில் வழியே அளப்பரிய தகவல்களைப் படித்து நல்லநல்ல சத்தான உணவுகளை சாப்பிடுகிறேன் என அதீத உணவெடுத்துக் கொண்டு அவஸ்த்தைக்கு ஆளாகிறார்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே!

இவர்கள் எந்நாளும் நோய்களிலிருந்து மீளவே முடியாமல் நிரந்தர நோயாளிகளாயிருப்பார்கள். வெளியிலிருந்து எவ்வளவு அரிய தகவல்கள் கிடைத்தாலும் நம் உடலும், உள் உணர்வும் கூறவரும் உண்மைகளுக்கு மட்டுமே செவி சாய்க்க வேண்டும்.  தற்போது ‘பேலியோ டயட்’ என்ற பெயரிலான ஒரு உணவு முறையை கடைப்பிடிப்போரின் கூட்டம் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதைத் தமிழில் ‘ஆதிமனிதன் உணவு முறை’ என்றழைக்கிறார்கள் ‘’மாமிசம் மற்றும் புரதம் நிறைந்த கொட்டைபருப்புகள் தான் மனிதனின் பிரதான உணவு’’ என்பது இந்த தரப்பினரின் நம்பிக்கை! அந்த நம்பிக்கை பலருக்கு கைகொடுத்துள்ளது. நோய்களை வெல்ல உதவியுள்ளது. விஞ்ஞான பூர்வமாக நிருபித்துள்ளனர். ஆனால், இந்த விதியை அனைவருக்கும் பொதுவாக்கிவிடவே முடியாது. உணவுத்துறையில் நாளுக்குநாள் புதியபுதிய உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.  ஒவ்வொன்றுக்கும் ஒரு வியாக்யானம் தரப்படுகிறது… இதை உண்டால் இந்தப் பலன், அதை உண்டால் அந்தப் பலன்…! பார்ப்பதையெல்லாம், கேட்பதையெல்லாம் சாப்பிட்டு பார்க்கும் ஆர்வமும், தேடலும் அதிகமாகவே காணப்படுகிறது. உடல்கெட்டு, நோய் முற்றி, நாக்குமரத்து… எந்த உணவுமே உட்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட பிறகுதான் சிலருக்கு ஞானம் பிறக்கிறது!

மாறுபாடு இல்லா உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
என்றார் வள்ளுவர்.

அறிமுகமில்லாத உணவை, குறிப்பாக நம் மரபில் இல்லாத உணவை தயக்கமில்லாமல் மறுத்துவிட வேண்டும். பார்வைபசிக்கு ஆட்பட்டோ, பகட்டுக்காகவோ வேறுபட்ட உணவுகலாச்சாரத்தில் காலடிவைப்பது வேரறுமட்ட நிலைக்கு நம் உடலையும், உள்ளத்தையும் வைத்துவிடும்.

சமையல் கலையில் நவீனபகட்டுத்தனம், நுகர்வு கலாச்சாரத்தை அதிகரித்து, நோய்களை பெருக்கியவண்ணமுள்ளது.
‘’உணவு ஒழுக்கத்தால் உணர்ச்சிகள் கட்டுக்குள் வரும்
உணவின் தூய்மை அறிவை மெருகேற்றும்
இதனால் நினைவு தூய்மையாகும்
தூய நினைவுகள் துன்பங்களிலிருந்து விடுதலை தரும்
வீடுபேறும், மோட்ச நிலையும் கைகூடும்’’
என்பது சாந்தியோக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது.

‘’மாறுபட்ட உணவை தவிர்ப்பதும்
பசியில்லா நிலையில் உணவை மறுப்பதும்
நூறு வைத்தியர்களால் பெறமுடியாத நன்மையைத் தரும்’’
என்பது நம் ஆன்றோர்களின் வாக்காகும்.

உணவு ஒழுக்கம் மட்டும் போதுமானதல்ல, உள்ளதுதூய்மை இல்லாத நிலையில் உட்கொள்ளப்டும் அமிர்தம் கூட விஷமாகிவிடும்!
இதற்கு நல்லதொரு உதாரணத்தை முத்தமிழ் அறிஞரும், உணவியல் நிபுணருமான கி.ஆ.பெ. விசுவநாதம் கூறுகிறார்.
‘’தாய்பாலை விடவும் உன்னதமான, உயர்வான உணவு, குழந்தைகளுக்கு கிடையாது! ஆனால் ஒரு பெண் தன் கணவனிடம் சல்லாபித்திருக்கும் நிலையில் இடையே வெளியேறியோ, அல்லது சல்லாபித்து முடித்த சிறிது நேரத்திலோ குழந்தைக்கு பாலூட்ட நேர்ந்தால் அப்போது அந்த தாய்பால் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். குழந்தைக்கு இதனால் மந்தபேதி ஏற்படும். இதிலிருந்து குழந்தையை மீட்க படாதபாடு படவேண்டியதாகிவிடும்’’. என எச்சரித்துள்ளார். ஆக, ஏற்கனவே நாம் வலியுறுத்திய படி உணவை பரிமாறுபவர்க்கும், உணவை ஏற்பவருக்கும் உடல்தூய்மை, உள்ளத்தூய்மை இன்றியமையாததாகும்.

அடுத்ததாக நம் உடலுக்கு வாயால் நுகரப்படும் திட உணவு, திரவ உணவை விடவும் முக்கியமான வேறொரு உணவு உள்ளது. அது நம் நாசியால் நுகர்ந்து நுரையீரலுக்கு உணவாகும் காற்றாகும்.

நம்மில் எத்தனைபேருக்கு நுரையீரலுக்கு தூய ஆரோக்கியமான காற்றுணவை தரும் வாய்ப்புள்ளது…?
நுரையீரலால் பெறப்படும் காற்றுணவே நம் உடலுக்கு மிகப் பெரும் பலத்தைத் தருகிறது! மூளையை சுறுசுறுப்பாக்குகிறது! சித்தத்தை தெளிவாக வைக்கிறது! மலைபோன்ற உறுதியை மனத்திற்குத் தருகிறது ! தன்னைத்தான்றியும் நுண் உணர்வை மேம்படுத்துகிறது. நம் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஓய்வில்லாமல் உழைக்கும் அளப்பரிய ஆற்றலை அள்ளி வழங்குகிறது. ஆனால் இவ்வளவு பெருமைவாய்ந்த, செலவில்லாத காற்றுணவை நம்மில் எத்தனைபேர் முறையாகவும், முழுமையாகவும் உட்கொள்கிறோம்?

நம்மில் பலர் நம் நுரையீரலின் மொத்த கொள்ளவுக்கு மூன்றில் ஒரு பங்கு காற்றையே சுவாசிக்கிறோம். அதாவது மேலெழுந்தவாரியாகத் தான் சுவாசிக்கிறோம். ஆனால் நாம் எந்த அளவுக்கு அதிகமாக காற்றை நுகர்ந்து நுரையீரலுக்கு பரிமாறுகிறோமோ அந்த அளவுக்கு பலம் பெறுவோம் ஆழ்ந்தும், நிதானமாகவும் சுவாசிப்பவனின் ஆயுள் அதிகரிக்கிறது. இது மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்களுக்கும் பொருந்தும் கோட்பாடாகும். நிமிடத்திற்கு 38 முறை மூச்சிழுத்து விடும் முயலின் ஆயுள்காலம் 8 ஆண்டுகளே! ஆனால், நிமிடத்திற்கு 5 முறை மட்டுமே சுவாசிக்கும் ஆமையின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாகும்! நீர்வாழ் விலங்கினமான ஆமையை தெய்வாம்சம் பொருந்தியதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆமையின் நீர் வழித்தடத்தை பின்பற்றியே பல நாடுகளை கண்டறிவார்கள் ஆராய்ச்சியாளர்கள். சராசரி மனிதன் நிமிடத்திற்கு 18 முறை சுவாசிக்கிறான். மனிதன் நடக்கும்போது வேகத்திற்கேற்ப சுவாசம் 50% அதிகரிக்கும். படுத்தாலோ சுவாம் பாதியளவாகிவிடும். ஆகவே ஒருவர் படுக்கும் நேரத்தை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறாரோ அந்த அளவுக்கு ஆயுளும் ஆரோக்கியமும் பெறுவார். நிமிடத்திற்கு 9 முறை சுவாசிப்பவர் ஓங்கிய ஆயுள் பெறுவார் அதனால்தான் இன்றும் கூட வள்ளலார் வழியில் மரணமில்லா பெருவாழ்வுக்கு முயற்சிப்பவர்கள் தூக்கத்தை கணிசமாகவோ அல்லது முற்றாகவோ துறந்துவிடுகிறார்கள். (படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளியும் கூட ஓரளவு உடல்தேறியவுடன் முதலில் உட்கார்ந்து ஓய்வெடுக்கவும், பிறகு உலாத்தியபடியே உடலைத் தேற்றவும் வேண்டும்.)  ஆன்மிகத்தில் இருப்பவர்களின் முதல்படியே வாயால் உட்கொள்ளும் உணவுகளைக் குறைத்து நாசியால் நுகரும் காற்றின் அளவை அதிகப்படுத்துவதுதான். சராசரியாக நாம் ஒருமுறை சுவாசத்தில் 500 மில்லி காற்றை உள் இழுக்கிறோம் என்றால் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இதைக்காட்டிலும் ஒரு மடங்கு கூடுதலாக மூச்சிழுப்பார்கள்!

நம் நுரையிரலில் காற்றையடைத்து வெளியேற்றும் கலை ஒன்று தெரிந்தால் போதும் கடையி காலம் வரை காலனை காலால் மிதிக்கும் பேராற்றலோடு திகழலாம்!
சித்தர்களும், யோகிகளும், தவஞானிகளும் இந்தக் கலையை கைவசப்படுத்தியவர்களே!

உடம்பை பேண முடியாதவர்களால் அறிவில் உயர்ந்தோங்க முடியாது. இதனால்தான் திருமூலர்,
உடம்பால் அழியில், உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
என்றெழுதினார்.
நம்மிள் பெரும்பாலோர் உடம்பினை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை உடம்பு விஷயத்தில் அவ்வளவு அலட்சியமாக உள்ளனர். அப்படி அலட்சியப்படுத்தியவர்கள் எவ்வளவு பெரிய பதவி, அந்தஸ்த்து, செல்வம், பெருமை பெற்றிருந்தாலும் அது எதனாலும் அவர்கள் இழந்த உடல் நலனை மீட்டெடுக்கவே முடியாது.

நம் உடல் என்பது மிக உன்னதமானது. அண்ட சராசரங்களின் அம்சமும் இந்த எண்ஜான் உடம்பிற்குள் உள்ளது. இயற்கையின் பேராற்றல் நிறைந்த பொக்கிஷமே இவ்வுடல். இவ்வுடலை பேண உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். உடல் நலத்திற்கான நிபந்தனையாகவே உள்ளத்தூய்மையை அறிந்துகொள்வோம்.
கனிகளை தின்று பிணிகளைக் கொன்று
காய்களை செறித்து நோய்களைத் தவிர்த்து
இயற்கையை ஏற்று இசைபட வாழ்ந்து
மூச்சினை உண்டு முதுமையை வென்று
தொண்டெனப்படுவதே தொழிலாய்க் கொண்டு
வண்டெனப் பறப்பதே வாழ்விய்யல் அறமாம்.

இயற்கையின் பேராற்றலும், மனித உடலும் வேறுவேற்றல்ல, இயற்கையின் பேராற்றலே இணையற்ற மருத்துவராய் நம் உடலில் வீற்றிருந்து நம்மை இயக்கிக் கொண்டுள்ளது….

No comments: