ஊடக வரலாறு எப்போது பத்திரிக்கைகள் வர தொடங்கினவோ, அப்போது முதல் அதிகாரமையங்கள் அட்டங்கொள்ள ஆரம்பித்தன. மன்னர்கள் தலைகளிலிருந்த மகுடங்கள் மக்கள் கைகளுக்கு மாறத்தொடங்கிய காலத்தின் அறிகுறியாக பத்திரிக்கைகள் ஆரம்பமாயின. அரசர்களை ஆண்டவனுக்குச் சமமாக அடையாளம் காட்டி, மக்களை உரிமைகளற்ற ஊமைப் பதுமைகளாகக் கருதிய மன்னராட்சி காலங்களில், அரசனாக விரும்பிவெளிபடுத்தும் செய்திகளின்றி வேறெந்த செய்திகளையும் மக்கள் தெரிந்துகொள்ள வழியில்லை. நாற்சந்தியில் முரசைரைந்து நாட்டு மக்களுக்கு சொல்லப்பட்ட அரசு செய்திகளும், வரலாற்றில் இடம்பெறவேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட கல் வெட்டுகளும் மட்டுமே அன்றைய தினம் மக்கள் அறிந்து கொள்ள முடிந்த செய்திகளாயிருந்தன. 'நவீன நாகரிகத்தின் சின்னம்' என்றும், 'பிறரிடமிருந்து கற்றுக்கொண்ட தந்திரம்' என்றும் பாரதியாரால் அர்த்தப்படுத்தப்பட்ட பத்திரிக்கை தொழில் சீனாவில் வேர்விட்டது, ஜெர்மனியில் உருப்பெற்றது, இங்கிலாந்தில் வலுப்பெற்று வடிவம் கண்டது. 17ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் ஆங்கில செய்திதாட்கள் வெளிவரத்தொடங்கின. 17ஆம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் அமெரிக்காவிலும் செய்திதாட்கள் வெளிவரத்தொடங்கின. ஆனால் இந்தியாவிலோ இதற்கு ஒரு நூற்றாண்டுக்கு பிறகே, 1780ல் முதல் செய்திதாள் வெளியானது. இந்திய இதழியல் துறையின் முன்னோடியான 'ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹக்கியின்' 'பெங்கால்கெஜட்' அந்தாளில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்தது. முதல் முப்பது ஆண்டுகள் ஆங்கிலத்தில் மட்டுமே செய்திதாட்கள் வெளிவந்தன முதன் முதலாக இந்திய மொழிகளில் தமிழ்தான் இதழியலுக்காக அச்சேறிய மொழியாகும். அச்சேறிய ஆண்டு 1812. இதழின் பெயர் மாசத் தினசரிதை. இந்த இதழின் ஆசிரியர் தஞ்சையை சேர்ந்த ஞானபிரகாசம்இந்த தகவல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இதழியல் ஆய்வில் தொய்வின்றி ஈடுப்பட்டு வரும் மூத்த பத்திரிக்கையாளர் அ.ம.சாமியின் 'விடுதலை இயக்கத் தமிழ் இதழ்கள்' என்ற நூலில் உள்ளது. ஆனால் இது வரையிலான மற்ற பல ஆய்வாளர்கள் 1820களில் வெளியான வங்காள இதழ்களையே இந்திய பிரதேச மொழிகளில் வெளியான முதல் இதழ்களாக எழுதி வந்தனர்.'தின மாதச்சரிதை' விடுதலை இயக்கப்போராட்டத்திற்கு எந்த பங்களிப்பும் செய்ததாக தகவல் இல்லை. ஆனால் சுதேசிமித்தரனுக்கு முன்பாகவே பல தமிழ் இதழ்கள் விடுதலைப்போராட்டங்களுக்கு வித்தூன்றியது என்ற தகவல்கள் இப்போது தான் வெளியாக ஆரம்பித்துள்ளன. 1831ல் வெளியான 'தமிழ் மேகசின்' தமிழின் முதல் இதழ் என்றும்,. 1856ல் வெளியான தினவர்த்தமானியே முதல் வார இதழ் என்றும் கூறுகிறார் டாக்டர் மா.பா.குருசாமி. ஆயினும் சுதேசிமித்திரனுக்கு முன்பே 'சேலம் சுதேசாபிமானி' என்ற மாதமிருமுறை இதழை1877லிருந்தே சே.ப.நரசிம்மலு என்ற சிறப்புமிக்க செய்தியாளர் நடத்தியுள்ளார்.இதை மற்றொரு இதழியல் ஆய்வாளரான பெ.சு.மணியும் உறுதிப்படுத்துகிறார். தமிழின் முதல் புலனாய்வு இதழ் என்ற கூடுதல் சிறப்பும் இவ்விதழுக்குரியது. 1881 களிலேயே மாஜிஸ்திரேட்டுகளும், தாசில்தாரும், மலினப்பட்டு கையுட்டுப்பெறுவதை கண்டுபிடித்து எழுதியது இவ்விதழ். சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இதழாளர் எனக் கருதப்பட்ட நரசிம்மலு ஒரு கள ஆய்வாளருமாவார். கோவை குடிநீர் பஞ்சம் தீர மலை உச்சியிலிருக்கும் முத்துக்குளம் அருவியிலிருந்து தண்ணிர் கொண்டு வரமுடியம் என்று முதன் முதல் கண்டறிந்து எழுதியவர், வலியுறுத்திச் சொன்னவர் நரசிம்மலு. 1800களின் பிற்பகுதியலேயே தமிழில் சுமார் ஐநூறு இதழ்கள் வெளிவந்துள்ளன. வேறெந்த இந்திய மொழிகளிலும் இவ்வளவு அதிகமான இதழ்கள் வெளியாகியிருக்குமா....? என்பது கேள்விக்குறி. அதே சமயம் மக்களிடம் இதழ்கள் படிக்கும் ஆர்வம் அதிகம் இருந்ததாகச் சொல்ல வழியில்லை. ஏனெனில் அந்த காலக்கட்டத்தில் படித்தவர்களின் விகிதாச்சாரமே ஏழெட்டு சதவீததிற்கு மேலில்லை. அப்படி படித்தவர்களிலும் கூட நாட்டு நடப்புகளை, பொதுவிவகாரங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் அதிகம் இல்லை. இதனால் பத்திரிக்கை ஆரம்பித்தவர்கள் பாடு,படு திண்டாட்டமாயிருந்துள்ளது. பத்திரிக்கை ஆரம்பித்தவர்கள் எப்படியாவது சந்தா சேர்பதற்காக முதல் சில நாட்கள் இலவசமாக அனுப்பியும்கூட மக்கள் இசைந்து கொடுக்கவில்லை. மேலும் ஆங்கிலம் படித்தவர்கள் தமிழ் பத்திரிக்கை படிப்பதை காட்டிலும் ஆங்கில பத்திரிக்கையில் தான் ஆர்வம்காட்டியுள்ளனர். எனவே மக்களை பத்திரிக்கை படிக்கவைக்க மன்றாடிபார்த்தும் அவர்கள் மசியாத காரணத்தால் மரித்து போன பத்திரிக்கைகள் அநேகம். பத்திரிக்கைகளின் விற்பனையோ சுமார் 50 படிகளிலிருந்து அதிகபட்சம் 500 படிகள் என்பதாயிருந்தது. விலையோ சுமார் ஒருபைசாதான். இதில் விதிவிலக்காக விற்பனையை அதிகபடுத்தி 1000 பிரதிகளை தொட்ட பத்திரிக்கை ஜி.சுப்பிரமணிய ஐயரால் தொடங்கப்பட்ட 'சுதேசமித்திரன்' தான். சுதந்திர வேட்கைக்கான சுடரொளி தாங்கிய இதழாக தமிழ்மக்களால் இது தலையில் வைத்து போற்றப்பட்டது. ஆரம்பித்த காலத்தில் அதிக பொருளாதார இடர்பாடுகளை சந்தித்த போதிலும் அழுத்தமான கொள்கைப்பற்றால் மெல்ல, மெல்ல ஆதரவு தளத்தை அதிகபடுத்தி கொண்டது. காங்கிரஸ் பேரியக்கத்தின் எண்ணங்களை, நோக்கங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் மகத்தான பங்குபணி ஆற்றியது இவ்விதழ். ஜி.சுப்பிரமணிய ஐயர் முற்போக்கு வாதியாக, முன்னோடியாகத் திகழ்ந்தவர். விதவைப்பெண்கள் சமூகத்தில் வெறுத்தொதுக்கப்பட்டு சகல இன்னல்களுக்கும் சாட்சியங்களாகி கொண்டிருந்த சமூகச் சூழலில், தன் விதவை மகளுக்கு மறு விவாகம் செய்து வைத்தார். இதனால் இந்து பத்திரிக்கையின் பாகஸ்தராக இருந்த ஜி. சுப்பிரமணிய ஐயர் பலர் இடர்பாடுகளுக்கு ஆளாகி கடைசியில் இந்து பத்திரிக்கையை தன் கூட்டாளி வீரராகவாச்சரியிடமே விட்டுவிட்டார். தி ஹிந்து பத்திரிக்கை ஜி .சுப்பிரமணிய ஐயருக்குப் பிறகு ஆங்கில அரசுக்கு அனுசரனையாக மாறியது. ஆங்கில அரசின் அடக்குமுறைசட்டங்களால் சிறைசாலைக்கு சென்று மனச் சிதைவுகளுக்கு ஆளானார் ஜி.சுப்பிரமணிய ஐயர். சுதந்திர வேட்கையில், சுதேசாபிமானத்தை சாதரண மக்களிடம் சரியாக எடுத்துசென்ற சமூக கடமையை செய்த ஜி. சுப்பிரமணிய ஐயர் தான், மதுரையிலுள்ள பள்ளிகூடத்தில் ஆசிரியராக வேலைபார்த்து வந்த பாரதியாரை சென்னைக்கு அழைத்து சுதேசிமித்திரனின் துணைஆசிரியராக்கி, பாரதியாரை இந்த பாருக்கே அறிமுகம் செய்தார். பற்றிக்கொள்ளும் நெருப்பு போல பத்திரிக்கைதளத்தில் கருத்துகளை பரப்பியவர் பாரதியார். சுதேசகருத்துகளை பரப்புவதே சுவாசமாக்கி கொண்ட பாரதியார் சுதேசமித்தரத்திரனை சுதந்திர வேட்கைகான போர்வாளாக மாற்றினார். ஆயினும் அவரது அதித ஆற்றலுக்கு சுதேசமித்திரன் மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. அவரது கவிதைகளை பிரசுரிப்பதற்கு சுதேசமித்திரன் ஆசிரியர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகவிருந்து கொண்டு 'சக்கரவர்த்தினி' மகளிர் மாத இதழின் ஆசிரியராக சமரசமற்ற கருத்துப்போர் நடத்தினார் பாரதியார். மண்டையம் குடும்பத்தாரின் ஆதரவில் நடத்தப்பட்ட 'இந்தியா' இதழின் ஆசிரியராக பாரதியார் பொறுப்பேற்ற ஆண்டு ஆண்டு 1907. அந்த ஆண்டில் தான் இந்திய தேசிய காங்கிரஸானது தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரண்டாக பிளவப்பட்டது. தீவிரவாதிகளின் அணியில் இருந்த பாரதியார் திலகரை தலைவராக ஏற்றுக்கொண்டு தீப்பிழம்பாக இந்தியாவில் கட்டுரைகளை எழுதினார். இதனால் இந்தியா இதழை அசிட்டவரான சீனிவாசனை ஆங்கில அரசு கைது செய்து ஐந்து வருடம் சிறையில் அடைத்தது. பாரதியார் தப்பிச்சென்று பாண்டிச்சேரியில் அடைக்கலமானார். பாண்டிச்சேரியிலிருந்து கொண்டே இந்தியா இதழை மூன்றாண்டுகள் மும்மரமாகக் கொண்டு வந்தார் பாரதியார். அந்நாளில் 'இந்தியா' இதழின் விற்பனை அதிகபட்சமே ஆயிரம் பிரதிகள் தான் என்றபோதிலும் ஒவ்வொரு இதழும் குறைந்தபட்சம் ஐம்பது பேரிடமாவது கைமாறியது; விவாதிக்கப்பட்டது; விரிவான கருத்துப் பரவலுக்கு வித்தூன்றியது. பாரதியார் இந்தியா இதழின் வருடச் சந்தாவை எப்படி நிர்ணயித்தார் என்பது சுவாரஷ்யமான செய்தியாகும். சாதாரண பொது ஜனங்களுக்கு ஆண்டு சந்தா ரூபாய் 3 என்ற பாரதியார், வசதியாக வருவாய் ஈட்டுவோருக்கு ரூபாய் 15 என்றும், ஜமீன்தார், ராஜாக்களாயிருந்தால் ரூபாய் 30 என்றும், வெள்ளை அரசாங்கத்தாருக்கு வேண்டுமென்றால் ஐம்பது ரூபாய்க்குகுறைந்து அனுப்ப முடியாதென்றும் அறிவித்தார். 'கார்டூன்' எனப்படும் கருத்து சித்திரத்தை தமிழ் பத்திரிக்கையில் முதன் முதலில் அறிமுகப்படுத்தி பெரும் வரவேற்பை பெற்றது இந்தியா இதழ். எப்படி இந்த கருத்து சித்திரத்தை ரசிக்கவேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் கூடவே வர்ணித்து எழுதினார் பாரதியார். இந்தியா இதழோடு 'பாலபாரதம்' என்ற ஆங்கில வார இதழும் துணை இதழாக வந்தது. இந்த ஆங்கில இதழின் ஆசிரியரும் பாரதியார் தான். புதுச்சேரி புகழிடம் தானே என்றில்லாமல் 'விஜயா' என்ற மாலை நாளிதழுக்கும் ஆசிரியராயிருந்தது எழுதிகுவித்தார் பாரதியார். இது புதுவையில் வெளியான முதல் நாளிதழாகும். பிறகு சூரியோதயம் என்ற வார இதழிலும் வரிந்து கட்டிக்கொண்டு ஆங்கில அரசை எதிர்த்து எழுதினார் பாரதியார். இதனால் இந்தியா இதழுடன் இவ்விதழுக்கும் தமிழ்நாட்டில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. அரவிந்தர் ஆசிரியராகவிருந்து நடத்திய ஆங்கில இதழான கர்மயோகியின் தமிழ் பதிப்புக்கும் பாரதியார் ஆசிரியராக இருந்தார். இப்போது இலவசமாக வழங்கப்படும் இதழ்களைப் போல அன்றே இலவசமாக விநியோகப் பட்ட இதழின் பெயர் தர்மம். இதிலும் ஆசிரியர் பொறுப்பேற்று தர்மயுத்தம் நடத்தினார் பாரதியார். பாரதியின் வெற்றி பெறாத முயற்சிகளாக முளையிலேயே அழிந்தது 'அமிர்தம்' என்ற பெயரில் அவர் ஆரம்பிக்கவிருந்த இதழும், 'சித்திராவளி' என்ற பெயரில் முழுக்க முழுக்க சித்திரங்களின் வழியாகவே கருத்தை பரப்ப எண்ணிய இதழும்! பாரதியார் சுமார் 18 ஆண்டுகளே பத்திரிக்கை துறையில் பணியாற்றியுள்ளார். இந்த குறுகிய காலகட்டத்திலேயே அவர் ஈடிணையற்ற சாதனையாளராக சகலவிதங்களிலும் முத்திரை பதித்துள்ளார். அவர் எழுதிய காலகட்டங்களில் தமிழ்நாட்டில், இந்தியாவில், சர்வதேச நாடுகளில் நிகழ்ந்த பெரும்பான்மையான நிகழ்வுகளை ஊன்றி கவனித்து விமர்சித்துள்ளார். நிரந்தரமாக ஒரே இதழில் பணியாற்ற முடியாமை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரிக்கைகளில் எழுதுவது, பற்பல புதிய யுத்திகளை இதழியலுக்கு கொண்டுவந்தது. லட்சிய நோக்கத்தோடு பத்திரிக்கை நடத்தி தொடரமுடியாமல் துவண்டது,அப்படியும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய இதழ்கள் கொண்டுவர முயன்று முடியாமல் போனது.... என எண்ணற்ற இன்னல்களை பத்திரிக்கை அனுபவத்தில் பார்த்தவரான பாரதி மீண்டும் சுதேசிமித்திரனிலேயே வந்து சேர்ந்துவிட்டார். பாரதியாரின் நெருங்கிய நண்பரான சுப்பிரமணியசிவா 'ஞானபானு', 'பிரபஞ்சமித்திரன்' என்ற இதழ்களை நடத்தி தீப்பிழம்பென சுதேசியத்தையும், தமிழையும் ஒருங்கே பரப்பினார். "உறங்கி கிடக்கும் தமிழ்சாதியாரை அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி, அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உண்டு பண்ணி முன்னிலையில் கொண்டுவருவதே இப்பத்திரிக்கையின் நோக்கம்" ஞானபானுவின் 1915ஜூன் இதழில் பிரகடனப்படுத்தினார். கூடவே சமஸ்கிருதம் கலவாமல் தனித்தமிழில் எழுதப்படும் கட்டுரைக்கு ரூபாய் 5 பரிசாகத் தரப்படும் என்றும் சிவா அறிவித்தார். தென்நாட்டுத் திலகராக மக்களை தட்டி எழுப்பிய வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா சிறை சென்ற காலங்களிலெல்லாம் 'ஞானுபானு'வின் ஆசிரியப் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்பட்டுள்ளார். இது தவிர தென் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியான 'விவேகபாநு'விலும் இலங்கையிலிருந்து வெளியான வீரகேசரியிலும் தொடர்ந்து எழுதிய வ.உ.சி பத்திரிக்கை தொடஙுகும் முயற்சிகளில் ஈடுபட்டு அந்த எண்ணம் ஈடேறாமல் விட்டுவிட்டார். திரு.வி.கல்யாணசுந்தரனாரின் 'தேசபக்தன்' இதழ் 1917முதல் வெளியானது. தெருவெங்கும் தமிழ்முழக்கமும் ,தேசிய முழக்கமும் செய்யும் இதழாக இது வெளியானது. சமஸ்கிருதம் கலந்த மணிப் பிரவாள நடையிலேயே மற்ற பத்திரிக்கைகள் அன்று வந்து கொண்டிருந்த சூழலில் தனித்தமிழை, பழகு தமிழாக்கி மக்களிடையே பரவவிட்டார் திரு.வி.க. தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்குவதிலும் தொழிலாளர்களிடையே தமிழ்ப்பற்று, தேசப்பற்று வளர்வதற்கும் திரு.வி.க 'தேசபக்தன்' வழியாக தீவிர பணியாற்றினார். பிறகு 1920 தொடங்கி 1941 வரை 'நவசக்தி' என்ற வார இதழை திரு.வி.க நடத்தினார். அப்போது திரு.வி.கவின் குருகுலத்தில் உருவானவர்களே வெ.சாமிநாதசர்மா, கல்கி, கி.வா.ஜகந்தாதன் போன்றோர். மற்றொரு தேசபக்தரான வ.வே.சு ஐயரவர்களும் திரு.வி.க விற்கு பிறகு சிறிது காலம் 'தேசபக்தன் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். இவர் திரு.வி.கவை விடவும் தீவிரமாகத் தனித்தமிழை கையாண்டவர். பத்தரிக்கையின் பக்க எண்களைக் கூட தமிழ் எண்ணிலையே குறிப்பிட்டார் வ.வே.சு ஐயர். சேலம் மருத்துவர். வரதராஜூலு நாயுடுவால் நடத்தப்பட்ட தமிழ்நாடு இதழுக்கு தமிழ் இதழியல் வரலாற்றில் தனி முக்கியத்துவமுண்டு. 1923-ல் வார இதழாக ஆரம்பிக்கப்பட்டு 1926ல் நாளிதழாக்கப்பட்டு 1931வரை வெளியான தமிழ்நாடு இதழ், சுதேசிமித்திரனுக்கு போட்டி இதழாக பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. இந்த இதழ் பல முன்னோடி இதழலாளர்களை தமிழ் இதழ் உலகிற்கு தநதது. 'பேனா மன்னன்' என்றழைக்கப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், மணிக்கொடி சீனிவாசன், வ.ரா, தி.ஜ.ர , 'தமிழ் மணி' ரெங்கசாமி, 'வந்தேமாதரம்' சீனிவாசன், கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு போன்ற பலர் இந்த இதழிலிருந்து உருவானார்கள். மருத்துவர் வரதராஜூலுநாயுடு தான் முதன் முதல் இந்தியன் எக்ஸ்பிரஸ்,ஆந்திரபிரஜா ஆகிய இதழ்களை ஆரம்பித்தார். டி.எஸ். சொக்கலிங்கம் 'தமிழ்நாடு' இதழுக்குப் பிறகு 'காந்தி' என்ற வாரமிருமுறை இதழை 1931ல் ஆரம்பித்தார். காலாணாவிலைக்கு விற்பனையான இவ்விதழ் காலப்போக்கில் நாளிதழானது. இவ்விதழ் நின்றபிறகு 1934ல் தினமணி ஆரம்பிக்கபட்டபோது அதன் ஆசிரியரானார். பாரதியின் நினைவுநாளான செப்டம்பர்11ல் ஆரம்பிக்குப்பட்ட தினமணி 'பாரதியின் கனவை நிறைவேற்றுவதே இதழின் லட்சியம்' என்று பிரகடனப்படுத்தியது. தினமணி ஆசிரியர்குழுவிலிருந்த அத்தனை பேருமே தேசபக்தர்களாகவும், சிறந்த எழுத்தாளர்களாகவுமிருந்தனர். இதில் சிலர் சுதந்திர போராட்டத்தில்சிறையும் சென்றுள்ளனர். ஏ.என். சிவராமன், புதுமைபித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி... போன்றோரை துணை ஆசிரியர்களாக கொண்டு சொக்கலிங்கம் ஆசிரியராகப் பணியாற்றிய காலம் தினமணியின் வரலாற்றில் ஓர் பொற்காலமாகும். பிரபல பத்திரிக்கையாளர் சதானந்த்தால் ஆரம்பிக்கப்பட்ட தினமணி பிறகு ராம்நாத்கோயங்காவின் கைக்குமாறியது. அதற்கு பிறகு ஏற்பட்ட நிர்வாக அணுகுமுறைகள், அவர்கள் ஆசிரியர் குழுவினரை நடத்தியவிதம் போன்றவற்றில் அதிருப்தியுற்று சொக்கலிங்கம் தினமணியிலிருந்து வெளியேறி 'தினசரி' என்ற பெயரில் நாளிதழ் ஆரம்பித்தார். அவருடனேயே வெளியேறியவர்களில் புதுமைபித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி குறிப்பித்தக்கவர்கள். பொருளாதார நெருக்கடிகளால் 'தினசரி' திணறி நின்றுபோனது. பிறகு ஜனயுகம்,பாரதம்,நவசக்தி போன்ற பல பத்திரிக்கையும் நடத்தினார் சொக்கலிங்கம். பொதுவாகவே அந்நாளில் பத்திரிக்கையாளர் பலர் தேசபக்தர்களாக இருந்தனர். அந்திய துணிக்கடை எதிர்க்கும் மறியலில் சுயராஜ்ஜியா பத்திரிக்கை ஆசிரியர் சுப்பாராவ் மற்றும் நிருபர் ஓ.பி.ராமசாமி இருவரும் போலிஸ்சாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, வழக்கும் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1920கள் வரை பத்திரிக்கைகளின் விற்பனை அதிகபட்சம் ஆயிரத்து சொச்சம் என்ற அளவில் தான் இருந்தது. இப்படியான நிலையிலிருந்த இதழியல் துறை மகாத்மாகாந்தியின் அரசியல் நுழைவு ஆரம்பமான பிறகு படிப்படியாக வளர்ச்சி கண்டது. மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், கிலாபத் இயக்கம், போன்றவைகளின் போது இதழ்கள் ஒரளவு விற்பனை கூடியது. உப்புசத்தியாக்கிரக போராட்டத்தின் போதோ மிகவும் உச்சபட்ச விற்பனையை எட்டின அன்றைய இதழ்கள்! 1930ல் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட 'சுதந்திரச்சங்கு' பத்திரிக்கை உலகில் ஒரு சூறாவளிபோல் சுழன்றது. எஸ்.கணேசன் என்ற தேசபக்தரால் நடத்தப்பட்ட சுதந்திரசங்குவின் ஆசிரியர் 'சங்கு'சுப்பிரமணியன். கதர்பிரச்சாரம், தீண்டாமை ஒழிப்பு, காந்தியின் பிரசங்கங்கள்..... போன்றவற்றை பிரசுரித்தே இப்பத்திரிக்கை ஒரு லட்சம் பிரதிகள் வரை விற்பனையானது. இதன் மக்கள் மொழியிலான நடை, எள்ளலும், துள்ளலுமான தலைப்புச் செய்திகள் போன்றவை மக்களிடம் பெரும்வரவேற்புபெற்றது. அந்தாளில் சுதந்திர போராட்டத்தில் சிறைசென்றுவெளியான தியாகிகள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு 'சுதந்திரச்சங்கு' அலுவலகம் சென்று அருகிலுள்ள கதர் கடையில் அலுவலக கணக்கில் ஒரு ஜோடி கதர் துணிமணிகளைப் பெறுவதும். அடுத்திருந்த உணவுவிடுதியில் பசியாற இரண்டு வேளை இலவசமாக உணவருந்திச் செல்வதும் வழக்கமாயிருந்துள்ளது. சுதந்திர வேள்வியில் சுடர்விடும் அக்கினிக் குஞ்சாக வெளிவந்த 'சுதந்திரச்சங்கு' 1938ல் அஞ்சாத வாசம் கண்டது. அப்பழக்கற்ற தலைவராகவும், ஆளுமைமிக்க பேச்சாளராகவும், ஆற்றல்மிக்க இலக்கிய பேராசானாகவும் கருதப்பட்ட பா.ஜூவானந்தம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட 'ஜனசக்தி'வார இதழ் ஆரம்பத்தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் கருத்துகளை பரப்பியது. பிறகு 1942 செப்டம்பர் 30முதல் பொதுவுடைமை இயக்கத்தின் போர்வாளாகத் திகழ்ந்தது. ஏகாத்திய எதிர்ப்பில் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை அணிதிரட்டியதில் ஜனசக்திக்கு தனியிடமுண்டு. 1930ல் ஆனந்த விகடன் இதழ் ஆங்கில அரசால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு சில காலம் வெளிவராமல் தடைப்பட்டது. இந்தியாவிற்கு தமிழகம் தந்த தலைசிறந்த பத்திரிக்கையாளர்களில் சதானந்தம் குறிப்பித்தக்கவராவார். தினமணியை ஆரம்பித்து வைத்த சதானந்தம் அதற்கும் முன்பே, முதன்முதலில் இந்திய அளவிலான செய்தி நிறுவனமாக 'அசோசியேட் பிரஸ் ஆப் இந்தியா'வை ஆரம்பித்து திறம்பட நடத்தியவர். ஆந்திரகேசரி பிரகாசத்தின் 'சுயராஜ்ஜியா' மகாத்மாகாந்தியின் 'யங் இந்தியா' ஆகியவற்றலெல்லாம் பணியாற்றியவர் சதானந்தம். 1939- 'பாரததேவி' என்ற பெயரில் நாளிதழ் மற்றும் வாரஇதழ் தொடங்கி நடத்தினார். இந்த பாரததேவியில் ஆசிரியராகப் பணியாற்றிய பக்தவத்சலம் பின்னாளில் தமிழகத்தின் முதலமைச்சரானார். மும்பையில் 'ப்ரீ பிரஸ் ஜெர்னல்' என்ற பிரபல ஆங்கில இதழையும், 'நவபாரத்' என்ற மராட்டிய இதழையும் சதானந்தம் கொண்டுவந்தார். இந்த அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு மஹாராஷ்டிர அரசு 'ப்ரி பிரஸ் ஜெனரல் சாலை' என்று பெயர் சூட்டியுள்ளது. தமிழ் இலக்கிய உலகில் ஒரு மணிமகுடமென திகழ்ந்த மணிக்கொடி டி.எஸ். சொக்கலிங்கம், வ.ரா, ஸ்டாலின் சீனிவாசன் ஆகிய மூம்மூர்த்திகளால் 1937ல் தொடங்கப்பட்டது. பல இலக்கிய முன்னோடிகள் இந்த இதழால் தமிழ் இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டப்ட்டனர். புதுச்சேரியிலும் பல இதழ்கள் விடுதலை வேட்கையுடன் வெளியாயின அவற்றில் மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் சுதந்திரம் இதழ் குறிப்பிடத்தக்கது. மகாத்மாகாந்தி அவர்களால் நடத்தப்பட்ட 'யங் இந்தியா' இதழுக்கு அவர் சிறை சென்ற தருணங்களிலெல்லாம். ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த சி.ராஜகோபாலச்சாரியாரும், மதுரையைச்சேர்ந்த ஜார்ஜ் ஜோசப்பும் தான் என்பது ஒரு பெருமையான செய்தியாகும். அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த காந்தியபொருளாதார நிபுணரான ஜே.சி.குமரப்பா காந்தி சிறை சென்ற காலங்களிலெல்லாம் 'ஹரிஜன்' இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றவராவார். 1942ல் 'தந்தி' என்ற தமிழ் நாளிதழை தேசிய இதழாக தொடங்கினார் சி.பா.ஆதித்தனார். அதற்கு முன்பே தமிழன் என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தி விடுதலை வேட்கையை பரப்பினார் ஆதித்தனார்.நேதாஜிக்காக நிதித் திரட்டி அவரது இந்தியதேசிய இராணுவத்திற்கு உதவியது 'தினத்தந்தி'. இவை தவிர காந்தியுகத்திற்கு முன்பே தமிழில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகுரலாகவும், ஆதிதிராவிடர்களின் ஆயுதமாகவும் பல இதழ்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சூரியோதயம் (1869), பஞ்சமன்(1871) 'திராவிடமித்ரன்'(1885) இரட்டை மலை சீனிவாசனாரால் நடத்தப்பட்ட 'பறையன்'(1893) அயோத்திதாச பண்டிதரால் நடத்தப்பட்ட ஒரு பைசா தமிழன் (1907) போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். மதுவிலக்கு கொள்கையை மக்களிடையே பரப்ப இராஜாஜியால் கல்கி கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதழ் 'விமோசனம்'. இதே போல காந்தியின் கதர் பிரச்சாரத்தை வலியுறுத்துவதற்கென்றே அந்தாளில் கணக்கற்ற சிற்றிதழ்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இதே வகையில் தீண்டாமைக்கு எதிராகவும் ஏராளமான சிற்றிதழ்கள் தமிழில் ஆரம்பித்து நடத்தப்பட்டன. பொதுவாக நாட்டைபாதிக்கும் முக்கிய பிரச்சினைகள், போராட்டங்கள் வெடிக்கும் போது மக்களிடையே விழிப்புணர்ச்சி பெருகிறது. மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவும், சில சமயங்களில் மக்களிடையே கருத்தாங்கங்களை உருவாக்கவும் இதழ்கள் பெரும் பணி ஆற்றியுள்ளன. இதழியலானது மக்களிடையே ஏற்படுத்தும் ஆழமான தாக்கங்களை அறிந்தே அன்றைய தினம் பெரும் தலைவர்களெல்லாம் இதழ்களை தொடங்கி நடத்தினார்கள். திலகர், கோபாலகிருஷ்ணகோகலே, அரவிந்தர், அபுல்கலாம் ஆசாத், வி.எஸ்.சீனிவாசாச்சிரியார். ஆந்திரகேசரி பிரகாசம், ராஜாஜி, ஜவஹர்லால்நேரு, மதன்மோகன் மாளவியா, அன்னிபெசன்ட் அம்மையார் போன்ற தேசிய தலைவர்கள் இதழியல் பொறுப்பேற்று மக்கள் திரளை தங்கள் கொள்கைகள், கருத்துகளுக்கேற்ப அணிதிரட்டினர். இவ்விதமே தமிழ்நாட்டிலும் ஜீவா 'ஜனசக்தி'யையும், ஈ.வே.ரா பெரியார் 'குடியரசு', 'விடுதலை' போன்றவற்றையும் சி.என்.அண்ணாதுரை 'ஹோம்லேண்ட்', திராவிடநாடு, காஞ்சி போன்ற இதழ்களையும், பிரிட்டிஸ் பேரரசை ஆதரித்து திராவிட இயகத்தினர் திராவிடன் நாளிதழையும், நீதிக்கட்சி தலைவர் டி.எம்.நாயர் 'ஜஸ்டிஸ்' ஆங்கில இதழையும் நடத்தினார்கள். இவ்விதழ்கள் பிரிட்டிஷ் பேரரசை தீவிரமாக ஆதரித்தன. காங்கிரஸ் கட்சியின் சுதந்திரப் போராட்டதை கண்டித்தன. அந்தாளில் தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் பிராமணர் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இதனால் பிரமணரல்லாதோரில் பலர் தங்களுக்கு காங்கிரஸில் உரிய முக்கியத்துவம் இல்லை என கருதி காங்கிரஸுக்கு எதிராக இயக்கம் கண்டனர். மேலும் காங்கிரஸில் பிராமணர்களின் ஆதிக்கத்தால் பழமை, பிற்போக்கு சிந்தனைகள் சமூக சீர்கேடுகள் பாதுகாக்கப்படுவதாக இவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆங்கில அரசின் ஆதரவால் விதவைமறுமணம். தேவதாசி ஒழிப்புச்சட்டம், இட ஒதுக்கீடு சட்டம் போன்றவற்றை நீதிக்கட்சியின் ஆட்சி நிறைவேற்றியது. திராவிட இயக்கத்தின் வருகையால் தமிழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்தன. இவை பாமர மக்களிடையே படிக்கும் பழக்கத்தையும், விவாதிக்கும் ஆற்றலையும் வியக்கத்தக்க அளவில் வளர்த்தன. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பிரதேசமொழிகளில் பிரசவமான இதழியல் துறை வளர்ச்சி 20ஆம் நூற்றாண்டின் அரசியல், சமூக சூழல்களால் இணையற்ற வளர்ச்சிகண்டன. இப்போது 21ஆம் நூற்றாண்டின் தகவல் தொழில் நுட்ப புரட்சி இணைய இதழ்களின் சகாப்தத்தை முன்னேடுத்துச் செல்கிறது.
3 comments:
மிக நல்ல பதிவு.
தமிழ் மன்றம் என்னும் கூகுள்
குழுமத்தில் உங்கள் கட்டுரையை இட்டிருக்கின்றேன். நீங்கள் இதனை
அடிப்படையாகக் கொண்டு தமிழ் விக்கிப்பீடியாவிலும் எழுதலாமே.
தமிழ் மன்றம் கூகுள் குழுவில் உங்கள் கட்டுரையின் இணைப்பைத் தர
மறந்துவிட்டேன். இதோ அது:
http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/686954a952da4122#
தமிழ் மன்றம் கூகுள் குழுமத்தின்
மின் முகவரி:
tamilmanram@googlegroups.com
நல்ல பதிவு இதைதான் நான் என் வகுப்பில் சேமினார் எடுக்க போறேன்
Post a Comment