Monday, October 22, 2007

இசையில் சிறந்த தமிழகத்தில் இசைபல்கலைக் கழகம்

சாவித்திரிகண்ணன்
சமீபத்தில் கலைஞரின் 'உளியின் ஒசை' என்ற திரைப்படத்துவக்க விழாவில் இசைஞானி இளையராஜாவின் வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர் கருணாநிதி, இசைப்பல்கலைக் கழகம் ஒன்றை தமிழகத்தில் நிறுவ இசைவு தெரிவித்துள்ளார்.
"இந்த இசைப்பல்கலைக்கழகம் தமிழகம், இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகம் முழக்க இருப்பவர்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்படும்" என்று முதல்வர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. இசையானதுமொழி எல்லைகளைக் கடந்தது என்றவகையில் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயத்தில் உலகிலேயே தமிழிசை தான் மிகவும் தொன்மையானது என்பதும், தமிழர்கள் தங்கள் வாழ்க்கையோடு இசையையும் இணைத்து இசைபட வாழ்ந்தவர்கள் என்பதும் உலகில் வேறு எவருக்குமில்லாத சிறப்பாகும்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முதல் தமிழ்சங்கம் கண்டபோதே இசைச்சங்கமும் கண்டது தான் தமிழினம். அக்கால இலக்கியங்களில் இசைப்ற்றிய அரியசெய்திகள் உள்ளன. துயில் எழுந்தும் பாடுவதற்கு சிலவும், நண்பகலில் பாடுவதற்கு பத்துப்பண்களும், இரவுக்கேற்ற இனிய பண்கள் எட்டு என்றும் தமிழறிஞர்கள் கூறுகின்றனர். 'சரிகமபதநி'- என்பதற்கு சட்சமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிசாதம் என்பதே அர்த்தம். இது தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இனி, விளரி, தாரம் என ஏற்கெனவே விவரிக்கப்பட்டுள்ளது என்பதே தமிழ்இசை ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும்.
நமது பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம, திருவருட்பா போன்றவையாவுமே இசைவடிவங்கள் தாம்! சிலப்பதிகாரம் மணிமேகலை உள்ளட்டவையும் வெறும் காவியங்களல்ல. இசைக் காவியங்கள் தாம்!
பிறந்த குழந்தைக்கு தாலாட்டு, நாற்றுநாட்டால் ஒரு பாட்டு, ஏர்உழுதால் ஒரு பாட்டு, நெசவுநெய்தால் ஒரு பாட்டு, செத்தால் ஒப்பாரி என தமிழர்களின் வாழ்வே இசை மயம்தான்! அப்படிபட்ட தமிழ்நாட்டில் தமிழிசை மறக்கப்பட்டுக் கொண்டுள்ளது. மறைந்து கொண்டுமுள்ளது. இவற்றை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த இசைப்பல்கலைக் கழகம் திகழவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
"சங்கீதத்திலும், சாகித்தியத்திலும் சிறந்த வித்வான்கள் பலர் தமிழில் கீர்த்தனைகள் இயற்றி உள்ளனர். அவற்றை பாடவோ, பாராட்டவோ யாரும் இல்லாததால் காலப்போக்கில் இவை போன்ற ஆயிரக்கணக்கான கீர்த்தனங்கள் அழிந்துபோயின" என 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் வருத்தப்பட்டுள்ளார்.
நமது மார்கழி மாத இசைவிழா கச்சேரிகளில் சங்கீத மும்மூர்த்திகளான தியாகய்யர், முத்துசாமி தீட்சிதர், சாமா சாஸ்திரிகள் போன்றவர்களின் தெலுங்கு பாடல்களையே பெரும்பாலும் பாடுகிறார்கள். தவறில்லை. அதே போல் தமிழ் மூம்மூர்த்திகளான முத்துதாண்டவர், மாரிமுத்துபிள்ளை, அருணாச்சல கவிராயர் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதியார், கனம்கிருஷ்ணய்யர், மகாகவிபாரதி ஆகியோர்களின் பாடல்களையும் பாடவேண்டும் என்று ரசிகமணி டி.கே.சி, ராஜாஜி, கல்கி, பாரதிதாசன், செட்டிநாட்டரசர் போன்றவர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். எனினும் இது இன்று வரை கைகூடவில்லை.
1943-ல் செட்டிநாட்டரசர் முயற்சியில் தமிழ்இசைச் சங்கமம் ஆரம்பித்தது முதல் ஏதோ ஒரளவு தமிழ்இசையும் காப்பாற்றப்பட்டு வருகிறது. சுதா ரகுநாதன், கே.ஜே.ஜேசுதாஸ், மதுரை டி.என்.சேஷகோபாலன், சீர்காழி சிவசிதம்பரம்... போன்ற இசைக்கலைஞர்கள் தமிழிசைக்கு தக்க பங்களிப்பை தந்துகொண்டுள்ளனர். பா.ம.க தலைவர் டாக்டர்.ராமதாசும் தமிழ்இசைக்கு வருடந்தோறும் மேடை அமைத்து வாய்ப்பு தந்து கொண்டிருக்கிறார்.ஆனால் அரசாங்கம் சார்பில் இதற்கான முயற்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லை. இனி இநத இசைப்பல்கலைக்கழகமாவது மறைந்து கொண்டிருக்கும் தமிழிசைக்கு மறுவாழ்வு தரவேண்டும். உலகமெல்லாம் தமிழிசையின் பெருமைகளை கொண்டு செல்லவேண்டும். நாட்டுபுற இசைக்கு நல்லதோர் எதிர்காலம் ஏற்படுத்தவேண்டும்.
கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை,... போன்ற எல்லா இசை பிரிவுகளுக்கும் தனிதனித்துறை உருவாக்கப்பட்டு அவை தழைத்தோங்க, பல சந்ததிகளுக்கு சங்கிலி தொடர் போலச் செல்ல இசைப் பல்கலைகழகம் விதையூன்ற வேண்டும்!
உலக முழுவதுமுள்ள இசையை தமிழர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும். இசைஞானி இளையராஜா அவர்களையே இநத இசை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முதல்வர் நியமித்தால் அவர் தமிழர்களின் கனவையெல்லம் தரணியெங்கும் சாத்தியப்படுத்தி விடுவார்.

No comments: