Friday, December 28, 2012

சுடர்விடப்போகும் சூரியமின்சக்தி



                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

நல்லதொரு தொடக்கம் ஏற்பட்டுள்ளது.
சூரிய மின்சக்திக்கான ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு தொழில்வளர்ச்சிகழகத்திற்கும், தனியார் நிறுவனத்திற்கும் கையெழுத்தாகியுள்ளது.

இதற்காக இந்தியாவிலேயே முதன்முதலாக சூரியமின்சக்தி உற்பத்தி பூங்கா ஒன்று ராமநாதபுரத்தில் 500ஏக்கரில் 920கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு 1000மெகாவாட் வீதம் மூன்றாண்டுகளில் 3000மெகாவாட் சூரிய மின்சக்தி தயாரிக்கும் திட்டம் நிறைவேறவுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் ஜவஹர்லால்நேரு தேசிய அமைப்பு இந்தியா முழுமையிலும் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டமிட்டுள்ளதன் ஓர் அங்கமாகவே இத்திட்டம் அமலாகிறது. தேசிய அளவில் ஐந்தாண்டுகளில் 54,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு அதில் 5,000மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு அரசுடனும், தனியாருடனும் இணைந்து உற்பத்தியாகவுள்ளது.

தமிழகத்தில் சூரியசக்தி மூலம் மின்உற்பத்தி செய்ய சுமார் 600க்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன. இது இதில் பிரகாசமான எதிர்காலம் உள்ளதையே காட்டுகிறது.

ஏனெனில் சூரிய ஒளி மூலமான மின்சார உற்பத்திக்கு மூன்றாண்டுக்கு முன்பு யூனிட்டுக்கு ரூ 18செலவானதென்றால் தற்போது ஏழரை ரூபாய் மட்டுமே செலவாகிறது. காலப்போக்கில் இதுவும் குறையலாம்.

மேலும் இதில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அறவே இல்லை. எனவே இதற்கான எதிர்ப்பு மக்களிடையே ஏற்படவாய்ப்பில்லை. மாறாக மக்கள் மத்தியிலுமே கூட வணிக நிறுவனங்கள், வீடுகள் ஆகியவற்றில் சூரிய மின்சக்தி தயாரித்து பயன்படுத்தும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

ஆகவே தான் தமிழக அரசு இவ்விதம் முயற்சிப்போருக்கு சலுகைகளும் மானியங்களும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் சுமார் 8,000தொழில் நிறுவனங்கள் உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றன. அவை ஒவ்வொன்றும் தலா ஒரு மெகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்தாகவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் சிகரமாக தமிழகத்தில் 103 மாணவர் விடுதிகள் சூரியமின்சக்தி பெறுவதற்காக ரூ2கோடி 32லட்சத்தை தமிழக முதல்வர் ஒதுக்கி உள்ளார்.

இவையாவும் முனைப்போடு செயல்படுத்தப்படவேண்டும். நமது மின்தட்டுப்பாடு நீங்குவதற்கு வரப்பிரசாதமாக வாய்ந்துள்ள இத்திட்டங்களை அரசு நிர்வாகத்தில் உள்ளோர் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படுத்திட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

அணுமின்சக்தியில் உள்ள ஆபத்து குறித்த அம்சங்கள், அதனால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, நிலக்கரி கிடைப்பதில் உள்ள சிக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் அணு மற்றும் அனல் மின்சாரம் போன்றவற்றிற்கு இனி எதிர்காலம் கேள்விக்குரியாகியுள்ளது.
அதே சமயம் புதுமையான பற்பல வழிகளில் மாற்று மின் உற்பத்தி திட்டங்கள் மகத்தான வரவேற்பு பெற்று வருகின்றன.
ஜெர்மன் நாட்டில் 50 விழுக்காடு மின்சாரம் சூரியமின்சக்தியால் தான் பெறப்படுகிறது. ஜெர்மனி ஒரு மணிநேரத்திற்கு 22,000மெகாவாட் மின்சாரம் சூரியசக்தி மூலம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இது 20 அணுமின்நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்திற்கு இணையாகும்

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாட்டிற்கு சூரிய மின்சக்தி என்பதே மிகவும் ஏற்புடையதாகும். தற்போது கிடைத்துள்ளது காலம் கடந்த ஞானோதயம் என்றாலும் கருமமே கண்ணாக இதை நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்!

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
13-12-2012

No comments: