Wednesday, December 5, 2012

வன்கொடுமை தடுப்பு சட்டம்


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்


வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆபத்தானதா? அவசியமானதா? என்பது தற்போது சமூகத்தில் ஒரு விவாதப் பொருளாகியுள்ளது. இதற்கான ஆதரவும், எதிர்ப்பும் அவரவர் அரசியல் உள்நோக்கங்கள் சார்ந்து அணுகப்பட்டு வரும் நிலையில் ஜாதிகளைக் கடந்த மனிதநேயப் பார்வையில் இதை நாம் அணுக வேண்டியுள்ளது.

நமது அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போது தலித் மக்களை பாதுகாக்கவென்று தனிசட்டம் உருவாக்கப்படவில்லை. 1955ன் குடிமை உரிமை பாதுகாப்புச் சட்டத்திலேயே தலித் மக்களின் பாதுகாப்புக்கான கூறுகளையும் உள்ளடக்கியிருந்தனர்.
அன்றைய தினம் நிலவிய காந்தியத்தின் தாக்கம், பெரியார், நாராயணகுரு போன்றவர்களால் உருவாக்கப்பட்ட சாதிமறுப்பு பார்வைகள், பாரதியார், பாரதிதாசன், தாகூர், சரத்சந்திரர், பக்கிம்சந்திரர்... தொடங்கி பல மாபெரும் படைப்பிலக்கியவாதிகள் சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு மேலோங்கியிருந்தது.

பிற்காலத்தில் தேர்தல் அரசியல், சாதியத்தின் தேவையை வளர்த்தது. இதைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை தற்காக்கவென்று 1989ல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் கொண்டுவரபட்டது.

இச்சட்டத்தில் 15விதமான வன்கொடுமைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி வனகொடுமையில் ஈடுபடுவோருக்கு 6மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தணடனை நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தவிர்த்து குடிமை உரிமை பாதுகாப்புச்சட்டப்படியும், இந்திய தண்டனைச் சட்டப்படியும் மேலும் 7வன்கொடுமைகள் சேர்க்கப்பட்டு அதற்கு ஏழாண்டுகள் தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டம் தவறாக கையாளப்படுகிறது. இது தலித்அல்லாதவர்களைச் அச்சுறுத்த, அடிபணிய வைக்கப் பயன்படுத்தப்படுகிறது.... என்ற வாதம் தற்போது வலுப்பெற்று வருகிறது. இந்த வாதத்திற்கு தலித் அல்லாத சில ஆதிக்க சாதியினரின் ஆதரவும் கிட்டியுள்ளது...!

இந்த எதிர்பபு சில நடைமுறை கசப்பான அனுபவங்களில் இருந்து எழுந்துள்ளது. இந்த வாதத்தை முற்றிலும் புறக்கணிக்க முடியாது. ஆனால் நாம் சில எதார்த்தங்களை, நடைமுறை நிதர்சனஙக்ளை கணக்கில் கொள்ளவேண்டும்.

"இதுவரை பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளில் 2.2% மட்டுமே நிருபணமாகியுள்ளது. மற்றவை நிருபிக்க முடியவில்லை. எனவே அவையாவும் பொய்வழக்குகள்.." என்பவை எதிர்ப்பவர்களின் வாதம்!
இந்தச்சூழலில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான தேசிய ஆவண காப்பகம் சமீபத்தில் தந்துள்ள தகவல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இரண்டு தலித்துகள் கொல்லப்படுகின்றனர். 12 தலித்துகள் படுகாயப்படுத்தப்படுகின்றனர். ஆண்டுக்கு சுமார் ஆயிரம் தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆண்டுக்கு சுமார் 1000 முதல் 1200 கௌரவ கொலைகள் அரங்கேறுகின்றன.... ஒவ்வொர் ஆண்டும் 30,000க்கு மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன.

இவை ஒரு புறமிருக்க, இந்த வன்கொடுமை சட்டத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
அவற்றின் சராம்சம் என்னவெனில், " வன்கொடுமை தடுப்பு சட்டம் ஒரு சில சமூக விரோத சக்திகளாலோ, அல்லது சந்தர்ப்பவாதிகளாலோ தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவை மிகக் குறைவே. உண்மையில் தலித்துகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சுலபத்தில் வெளியில் சொல்வதில்லை. ஏனெனில் அதன் எதிர்விளைவுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் அவர்களில் பெரும்பாலோருக்கு இல்லை. அப்படியே ஒரு சிலர் காவல் நிலையம் வந்து புகார் அளித்தாலும் அவர்களை கடுமையாக அலைகழிக்காமல் அதை காவலர்கள் பதிவு செய்வதில்லை. பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சட்டத் தேவைகளுக்கு உட்பட்டு சாட்சியங்களைக் கொண்டு நிருபிக்க வேண்டிய பொறுப்பு சாதாரணமானதல்ல. இதற்கிடையில் ஆதிக்க ஜாதியினர் தரும் நிர்பந்தம், காவல்துறையின் நேர்மையின்மை போன்றவற்றால் வன்கொடுமை சட்டவழக்கு நிருபிக்கப்பாடாமல் நீர்த்துப் போகிறது.

எனவே விடுவிக்கப்பட்டவர்கள் - குற்றம் நிருபணமாகாமல் போனவர்களே அன்றி- நிரபராதிகளல்லர்....! என்கிறது அந்த ஆய்வுகள்.
எனவே வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதில் ஒரளவு உண்மை இருந்தாலும், அச்சட்டம் சரியாக பயன்பட்டு தலித்துகளை காப்பாற்றவில்லை என்பது பெருமளவு உண்மை.
தமிழகத்தில் மேலவளவுபடுகொலைகள், திண்ணியம் கொடுமைகள் போன்ற பிரபல வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களே நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டனர். ஆகவே, வன்கொடுமை தடுப்புசட்டத்தை நியாயமாக அமல்படுத்தவேண்டும். அதே சமயம் எந்த ஒரு சட்டமும் முழு பாதுகாப்பை தந்துவிட முடியாது. மனமாற்றம் தான் முக்கியம். இதற்கு காந்தி வழியே கதிமோட்சமாகும். 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
01-12-2012

No comments: