Sunday, December 16, 2012

வால்மார்டிடம் விலை போனார்களா? நமது எம்.பிக்கள்?


                                                                                                                 -சாவித்திரிகண்ணன்

மூன்று நாட்களாக பாராளுமனறம் முடக்கப்பட்டதற்கான காரணம் வால்மார்ட் நிறுவனத்தால் விலைபேசப்பட்டவர்கள் யார் யார்? என்பதற்கான விடைதேடலே!

'முடிவாக ஒய்வுபெற்ற நீதிபதி ஒருவரை வைத்து விசாரணை நடத்துவோம்' என்று மத்திய அரசு அறிவிக்க, எதிர்கட்சிகள் ஒய்நதன.
'விசாரணைகமிஷன் என்பது கிணற்றில் போடப்படும் கல்போல' என்பதே கடந்த காலத்தில் நாம் கண்ட அனுபவம்.

நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபேசப்பட்ட சம்பவங்கள் நமக்கு புதிதல்ல. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவான நல்லதிட்டங்களை உருவாக்கும் பொருட்டு பணம் பெற்றுக்கொண்டு கேள்விகேட்ட MPக்கள் அம்பலப்பட்ட சம்பவம் எளிதில் மறக்கக் கூடியதன்று.

கொள்கை உறுதி, மக்கள்நலன் குறித்த பார்வைகள் அரசியல்கட்சிகளின் தலைமைக்கே அற்று போய்விட்ட நிலையில் எம்.பிக்களிடம் மட்டும் நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஒரு வேளை வால்மார்ட் விலைபேசியிருப்பார்களேயானால் அது அரசியல்கட்சித் தலமைகளை குறிவைத்தே நடந்திருக்கவேண்டும். யார்கண்டது?

"வால்மார்ட் யார்யாருக்கு பணம் கொடுத்தது?" என பாராளுமன்றத்தில் கூச்சல் எழுப்பிய கூட்டத்திலேயே கூட பணம் பெற்ற எம்.பிக்கள் பாதுகாப்பாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் சில உள்ளன.
பல கோடி செலவழிப்பவர்களே இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களில் 150க்கு மேற்பட்டோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஒவ்வொரு எம்.பி.யும் பதவி ஏற்கும் போது வைத்திருக்கும் சொத்துமதிப்பிற்கும் பதவி முடியும் தருவாயில் வைத்திருக்கும் சொத்து மதிப்பிற்குமான இடைவெளி மிகப்பெரிதாகவுள்ளது.
இத்தனைக்குப் பிறகும் நாம் மீண்டும், மீண்டும் இவர்களையே அல்லது இவர்களை போன்றவர்களையே தேர்ந்தெடுக்கிறோம்.

ஓட்டுக்கு விலைபோக மக்கள் தயாராகி விட்டபிறகு, வால்மார்ட்டிற்கு விலைப்போகும் எம்.பிக்கள் குறித்துப் பேசும் அருகதையை நாம் இழந்துவிடுகிறோம்!

இப்போது நமது நாட்டில் உள்ள மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படும் 80 சதவிகிதமான பொருள்கள் - சோப்பு, பற்பசை, பால்பவுடர், கூல்டிரிங்ஸ் உள்ளிட்டவை வெளி நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் தாம். இவற்றை வாங்கி விற்பதற்கு நமது வியாபாரிகள் தயங்கவில்லை. உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கும் ஆதரவு காட்டவில்லை ஆக பொதுவாக நமது நாட்டு வியாபாரிகளின் மனநிலை வெளிநாட்டு நிறுவன பொருட்களை ஏற்றுக்கொள்கிறது ஆனால் அதை அவர்கள் மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதை மட்டுமே எதிர்க்கிறது.

இந்நிலையில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு காட்டும் எதிர்ப்பு என்பது 'முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்க்கு' என்பதை போலத்தான். சுதேசி பொருட்களே இல்லாமல் அற்று போய்கொண்டிருக்கும் ஒரு தேசத்தை நாம் எல்லோரும் சேர்ந்து கட்டமைத்துவிட்டபிற்பாடு அதை கடை விரிப்பதற்கு மட்டும் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்கமாட்டோம் என்பது எந்த கொள்கை உறுதியில் சேர்த்தியாகும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
12-12-2012

No comments: