Sunday, December 16, 2012

ஜல்லிகட்டு

                                                                                                                  -சாவித்திரிகண்ணன்
கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிகட்டு நடத்துவது ஒரு விவாதப் பொருளாகி நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளை சந்தித்துவருகிறது. தற்போது அந்த 19 வழக்குகளும் உச்சநீதிமன்றத்திற்கு வந்துள்ளன. இந்நிலையில், 'ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடைவிதிக்கமுடியாது' என்று உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கூறியுள்ளதானது தமிழக மக்களில் ஒரு பிரிவினரிடையே பெரிய சந்தோஷத்தை தோற்றுவித்துள்ளது.

பிராணிகள் நல வாரியம், விலங்குகள் வதை தடுப்பு அமைப்புகள், ஜீவகாருண்ய சங்கங்கள் போன்றவை ஜல்லிகட்டு கூடாதென்று கடுமையாக சட்டப்போராட்டம் நடத்தி வருவதோடு பிரச்சாரங்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம் ஜல்லிகட்டு என்பது பாரம்பரிய வீர விளையாட்டு, பழந்தமிழர்களின் கலாச்சார அடையாளம், இதில் விலங்குகள் கொடுமைப்படுத்தபடுவதில்லை என்ற வாதங்களும் வைக்கப்பட்டன.
ஆனால் மிருக வதை தடுப்பு அமைப்புகளோ இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் என்னென்ன வகைகளில் வதைப்படுத்தப்படுகின்றன என்பதை துல்லியமாக ஒரு ஆவணப் பதிவாகவே நீதிமன்றங்களில் சமர்பித்தனர். இதைத் தொடர்ந்தே ஜல்லிகட்டுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது.

 
ஆனால் இந்த தடையை எதிரத்து தமிழகத்தில் ஒரு பிரிவினரிடையே பலத்த கொந்தளிப்பு உருவானது. தடையை விலக்ககோரி போராட்டங்கள் நடந்தன. இதனால் தமிழக அரசே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தடையை விலக்ககோரி நீதிமன்றம் சென்றது.

இதனால் சில கட்டுபாடுகள், விதிமுறைகள் கறாராக உருவாக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் ஜல்லிகட்டு நடத்தலாம் என நீதிமன்றம் அனுமதித்தது. இந்நிலையில் ஜல்லிகட்டில் நடந்தேறிய சில விரும்பத் தகாத அம்சங்கள் விலக்கப்பட்டன. உயர்பலிகளும், படுகாயங்களும் குறைந்தன. மிருகவதையும் ஒரளவு கட்டுபடுத்தப்பட்டது. எனினும் தங்கள் நோக்கம் முழுமை பெறும் வகையில் ஜல்லிகட்டு ஒழிக்கப்பட வேண்டும். என்பதில் ஜீவகாருண்ய அமைப்புகள் கச்சைகட்டிக் கொண்டு களத்தில் இறங்கியும், நீதிமன்றங்களில் போராடியும் வருகின்றன. இன்றைய நிலையில் சுமார் 19 வழக்குகள் நடந்துகொண்டுள்ளன.... என்பதே இதன் தீவிரத்தை உணர்த்துவதாகும்.

2008தொடங்கி, தொடர்ந்த மூன்றாண்டுகளில் ஜல்லிகட்டில் 43 மனித உயிர்கள் பலியாகியுள்ளன. நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.... எனினும் ஜல்லிகட்டு குறிந்த அச்சமோ, வெறுப்போ அது சம்மந்தப்பட்ட மக்களிடம் ஏற்படவில்லை.

ஜல்லிகட்டு குறித்து பழம்பெரும் எழுத்தாளர் சி.சு.செல்லாப்பாவின் 'வாடிவாசல்' நாவல் மிகவும் புகழ்பெற்றது. மாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் சல்லிக்காசு துணியை துணிச்சலாக பறித்தெடுப்பது தான், 'ஜல்லிகட்டு' என்ற வழக்குமொழியானது. அந்த காலத்து பெரும் நிலச்சுவான்தார்கள் இதற்காகவே தங்கள் காளைகளை கொழு, கொழுவென்று வளர்ப்பார்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்து வீரமறவர்கள் மாடுகளை அடக்கி அந்த சல்லிக்காசு துணி முடிச்சை பறிப்பார்கள்.

எது ஒன்றும் தொன்றுதொட்டு பழக்கமாகும் போது, அது சமூகத்தின் பெருவாரியான மக்களிடையே நீண்டகாலத்திற்கு முன்பே திணிக்கப்பட்டு, அது பிறகு ஏற்கப்பட்டு, விருபப்திற்குரிய ஒன்றாக மாற்றமடைந்துவிடும் போது அவை குறிந்த தீய விளைவுகளை மக்கள் ஆராய்ந்து கொண்டு இருப்பதில்லை.

பாட்டன், முப்பாட்டன் காலத்துவீரவிளையாட்டு, சமூகத்தில் கிடைக்கும் ஒரு கௌரவம், மாற்றுப் பார்வைக்கே வழியில்லாமல் ஒரே நோக்கில் உருவான சிந்தனை போக்கு.... ஜாதிய அடையாளத்தை மீட்டெடுக்க வலியுறுத்தப்படும் குலப்பெருமை போன்றவை ஜல்லிக்கட்டில் ஈர்ப்பு ஏற்பட காரணமாகின்றன.

ஜல்லிக்கட்டின் பின் உள்ள சமூக முரண்கள், ஜாதிமோதல்கள், வித்திடப்படும் பகைமை போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளன. அரசும், நீதிமன்றங்களும் எவ்வளவு கறாராக விதிகளை போட்டாலும் நடைமுறையில் அவை ஒரளவே சாத்தியமாகின்றன. ஜல்லிகட்டு பாதுகாப்பற்ற வீர விளையாட்டகவே தொடர்கின்றன.

அன்பு, கருணை போன்றவை மனித உயிர்களைக் கடந்து சகல ஜவராசிகளிடமும் வியாபிக்கும் போதே மனிதன் உன்னத நிலையை அடைகிறான். தன் உடல்பலத்தை நிருபிக்க, அப்பாவி மிருகங்களை கட்டாயப்படுத்தி நிர்பந்திக்கும் போது ஒரு வகையில் மனிதன் மிருக நிலைக்கு கீழ்இறங்கி விடுவதோடு, மிருகத்திற்கே வெறி ஏற்படுத்தி வீரத்தை நிலைநாட்டத் துடிக்கிறான். சேவல்சண்டை தொடங்கி ஜல்லிக்கட்டுவரை வெளிப்படும் ஆர்வம் மற்றும் வெறிசார்ந்த மனநிலை நாம் பண்பட இன்னும் பயணப்பட வேண்டியதையே உணர்த்துகின்றன.


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
11-12-2012

No comments: