Saturday, December 8, 2012

சிறைத்துறை சீர்த்திருத்தம்

                                                                                                                   -சாவித்திரிகண்ணன்


சேலம் சிறையில் கைதிகள் கலாட்டா,
மதுரை சிறையில் கைதிகள் மரத்தின் மீது ஏறிப்போராட்டம்,
வார்டன்கெடுபிடியால் கோவை சிறையில் கைதிகள் குமுறல்,
திருச்சி சிறையில் திடீர் பதற்றம்... இது போன்ற செய்திகள் சமீபத்தில் அதிகமாக வருகின்றன.

சிறைச்சாலைகளில் என்னதான் நடக்கின்றன...?

எந்த மனிதர்களால் சமூகத்திற்கு ஆபத்து என்று கூறி அரசு அவர்களை சிறைக்கொட்டடியில் அடைத்ததோ, அந்த மனிதர்கள் இங்கே தங்களுக்கு பாதுகாப்பில்லை' என மரத்தின் மீது ஏறி கூவினார்கள்... அது தான் அடுத்த சில நாட்களில் உண்மையானது. அவர்கள் போலிஎன்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

இது ஏதோ தமிழகத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வுகளல்ல. இந்தியா முழுமையிலும் சிறைக்கூடங்கள் அமைதியிழந்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அளவில் விசாரணை வளையத்தில் இருக்க வேண்டிய 2560 பேர் போலி என்கௌண்டர்களில் பலியாகியுள்ளனர்.

இது ஒரு புறமிருக்க, சிறை நிர்வாக அமைப்பே முற்றிலும் சீர்குலைந்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் தொடுத்த வழக்கில் சிறையில் டி.ஐ.ஜிக்கள், ஏ.டி.எஸ்.பிக்கள் உள்ளிட்ட 20 பெரிய பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்படாமல் இருப்பதாகவும், இதனால் சீறை நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் பல சிறைத்துறை அதிகாரிகள் பதவி உயர்வு கிடைக்காததால் பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிகிறது.

இதனால் முன்எச்சரிக்கை கைது செய்பவர்களை விடுவித்தல், தண்டனை முடிந்த கைதிகளை விடுவித்தல், பரோல் கேட்கும் கைதிகளுக்கு அனுமதி வழங்கல், போன்றவை தடைபடுவதால் கைதிகள் அனைவரும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலை தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்திய சிறைகள் முழுமையிலுமே இது போன்ற பற்பல இன்னல்களே நீக்கமற நிறைந்துள்ளன. தேசிய குற்ற ஆவண ஆணையத்தின் தகவல்படி இந்தியாவில் மொத்தமுள்ள 1374 சிறைகளில் 16,000பெண்கள் உள்ளிட்ட 3,80,000பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் விசாரணை கைதிகள் மட்டுமே 2,14,200. கடும் இட நெருக்கடியில் உழலும் நமது சிறைகளில் நீண்ட நெடிய ஆண்டுகள் விசாரணை என்ற பெயரில் இந்த அளவு எண்ணிக்கையில் கைதிகளை அடைத்துவைப்பது எந்த நீதியில் சேரும்?

மோசமான சுகாதாரச்சீர்கேடு, தரமற்ற உணவு, சரியான மருத்துவ உதவி கிடைக்காமை போன்றவற்றால் ஆண்டுக்கு சுமார் 1400 கைதிகள் மரணமடைகின்றனர். மற்றும் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அத்துடன் முறைகேடான ஒரினச்சேர்க்கை போன்றவற்றால் கணிசமானோர் எச்.ஐ.வியால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமாற வேண்டும்.

சிறைச்சாலைகளில் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படவர்கள் தங்களை உள்நோக்கி பார்த்து சீர்திருத்திக் கொண்டு வெளியேறும் வகையிலான சூழல்கள் அமைய வேண்டும்.

வழக்குகள் விரைந்து நடத்தப்பட்டால் தான் விசாரணை கைதிகளுக்கு விடிவுகாலம் ஏற்படும். இந்திய நீதிமன்றங்களில் சுமார் இரண்டரைலட்சம் வழக்குகள் தேங்கியுள்ளதே.... தாமதிக்கப்பட்ட நீதி, அநீதியல்லவா?

சிறைச்சாலைகளில் அவரவருக்கு தக்க உடல் உழைப்பை கட்டாயமாக்க வேண்டும். உழைப்பு என்பது ஒரு ஒழுக்கத்தை ஏற்படுத்தி தரும். அத்துடன் யோகா, தியானம், உடற்பயிற்சி, சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், நூலகவாசிப்பு, விளையாட்டு நேரம்... என சகலமும் தரப்பட வேண்டும்.

சமூகத்திலிருந்து அவர்களை தனிமைப்படுத்தும் தண்டனை ஒன்றே போதுமானது. மற்றபடி சிறைச்சாலை அவர்களுக்கான சீர்திருத்த கூடமாயிக்க வேண்டுமேயல்லாது சித்திரவதைக் கூடங்கள் ஆகிவிடலாகாது.

சீகரெட், பீடி, கஞ்சா, கத்தி, இரும்புகம்பி, செல்போன்கள் போன்றவை அவர்களிடம் இருக்குமானால் அதற்கு அதிகாரிகள், ஊழியர்களே முழுப்பொறுப்பாகும்.

எவ்வளவு செல்வாக்கானவர்கள் சிறைக்குள் வந்தாலும் சரி, எவ்வளவு எளிய மனிதன் வந்தாலும் சரி பராபட்சமின்றி நிர்வாகம் செயல்படவேண்டும்.

சிறைச்சாலைகளுக்கு வெளியில் இருக்கும் ஆபத்தானவர்களை விடவும், சிறையில் இருப்பவர்கள் ஆபத்தானவர்களல்ல, சிறைச்சாலைக்குள் சிறந்த மனிதநேயம் சாத்தியபடுமானால் அது தான் ஒரு நாகரீக சழுதாயத்திற்கான ஆகச் சிறந்த அடையாளமாகும்.



தந்தி டிவி,
EDITORIAL VOICE,
07-12-2012

No comments: