Saturday, December 8, 2012

கலப்பு திருமணங்கள்

                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

காலந்தோறும் காதல் திருமணங்கள் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டு தான் உள்ளன. காதல்களே பல காவியங்கள் உருவாக காரணமாயிருந்திருக்கின்றன. நேற்றைய இன்றைய இலக்கியங்கள் மட்டுமல்ல, காட்சி ஊடகங்களும் காதலைத்தான் மீண்டும், மீண்டும் பேசுகின்றன.

படிப்பதற்கும், பார்ப்பதற்கும் இன்பமாக இருக்கும் காதல், ஏனோ வாழ்வியல் அனுபவமாகும் போது எதிர்க்கத்தக்கதாகிவிடுகிறது. உறவுகள், சொந்தங்களின் தொடர்பு அறுந்து போய்விடுமோ, பழக்கவழக்கங்கள், மரபுகள் மறைந்துவிடுமோ..., உணவு, உடை, பேச்சு, கடவுள் நம்பிக்கை என ஒவ்வொரு ஜாதிக்கும் இருக்கும் பிரத்யேக அடையாளங்கள் பின்பற்றப்படாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சங்கள் சொல்லப்படுகின்றன.

அன்பு வலுவாக இருந்தால் உறவுகள் ஜாதிகளைக் கடந்து பலப்படும். காலந்தோறும் பழக்கவழக்கங்கள் மாறத்தான் செய்யும்.. நவின தொழில்நுட்பங்கள் நமது வாழ்க்கையை எவ்வளவோ புரட்டிப் போட்டுள்ளன. மாற்றங்களை ஏற்கும் சமூகம் மட்டுமே வளரமுடிகிறது.

இந்தியா முழுமையும் செய்யப்பட்ட பல்வேறு விதமான ஆய்வுகள், ஜாதிப் படிநிலையில் முதலாவதாக உள்ள பிராமண ஜாதி தான் காதல்கலப்பு திருமண விகிதாச்சாரத்திலும் முதலாவதாக உள்ளதாக தெரிவிக்கின்றன.

எனவே எந்த ஜாதியால், ஜாதிகள் கட்டமைக்கப்பட்டது என்று நாம் கூறிவந்தோமோ, அந்த ஜாதி தான் இன்று ஜாதி மறுப்புத் திருமணங்களில் முன்னோடியாகத் திகழ்கிறது என்பது கவனத்திற்குரியது. இதற்கு அடுத்ததாக தலித்துகள் அதிகமாக கலப்புத் திருமணங்கள் செய்கிறார்கள். முன்னதில் இல்லாத எதிர்ப்பு பின்னதில் மட்டும் ஏன் வருகிறது..?

பறச்சியாவது ஏதடா
பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பிலும்
இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ
பணத்திபோகம் வேறதோ?
என்ற சிவவாக்கியார் எழுதிய பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.

கலப்புத் திருமணங்களுக்கு மத்திய மாநில அரசுகள் சட்டங்களே இயற்றி நிதி உதவி மற்றும் சலுகைகள் வழங்கி வருகின்றன.

தாழ்த்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்தால் ரூ 20,000மும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவரைத் திருமணம் செய்தால் ரூ 10,000மும்
தமிழக அரசு வழங்குகிறது. புதுச்சேரி அரசோ கலப்புமணத்தம்பதிகளுக்கு ரூ 60,000 தருகிறது.

கலப்புத் திருமணத்தால் கைவிடப்பட்ட பெண்கள் எந்த ஜாதியில் அதிகம் என்றால் அதில் தலித்பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுவும் தாழ்த்தபட்ட பெண்ணை திருமணம் செய்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதைப் பயன்படுத்தி வேலையும் பெற்றுக்கொண்டு, நல்ல அரசு வேலை கிடைத்த தைரியத்தில் சொந்த ஜாதியில் வரதட்சனை, சீர்வரிசை பெற்று திருமணம் செய்யும் இளைஞர்கள் கணிசமாக உள்ளனர். இதற்கு காவல் துறையில் பதிவான புகார்களே சாட்சியங்களாகும்! எனவே திருமண உறவில் விரிசல், ஏமாற்றங்கள் என்பதற்கு எந்த ஜாதியும் விதிவிலக்கல்ல.
எல்லா திருமணங்களும் 100க்கு நூறு வெற்றி பெறுவதுமில்லை.
காதலை தடுக்க செல்போன், சினிமா, சீரியல், இண்டர்நெட்... என எதையும் இளைஞர்களோ, பெண்களோ பார்க்க அல்லது பயன்படுத்தக்கூடாது என்று எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தடுத்தால் அதில் முழுவெற்றியும் கிட்டாது.

நமது அரசு பதிவுத்துறைத் தரும் தகவல்களின்படி நடைபெறும் திருமணங்களில் பத்துசதவிகிதத்திற்கும் மேலானவை ஜாதிகலப்புத் திருமணங்களாக உள்ளன. இந்த எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாகவும் பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூகம் வேகமாக மாற்றத்தை உட்கிரகித்துக் கொண்டு வருகிறது என்ற எதார்த்தை ஏற்க மறுப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகத் தான் அர்த்தம். அன்பு, அறிவு, பண்பு போன்றவற்றை மட்டுமே கணக்கில் கொண்டால், காலம் எதிர்கொண்டு வரும் எந்த பிரச்சனையையும் சமாளித்துவிடமுடியும்.

இப்போதும் கூட இதே தமிழகத்தில் லட்சக் கணக்கான ஜாதிகலப்பு திருமணம் புரிந்தோர் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் ஒரு நீண்டகால கோரிக்கை என்னவென்றால் ஜாதிமறுப்புத் திருமணம் செய்தோருக்கு கல்வி, வேலைவாய்ப்பு படிவங்களில் சாதிகளற்றவர்கள் என பதிவு செய்யும் உரிமையைத் தாருங்கள் என்பதே! இப்படிப்பட்டவர்களுக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தி விட்டால்... அப்புறம் இந்த சமூகத்தில் நடக்கும் அதிசயங்களுக்கு அளவிருக்காது.


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
02-12-2012

No comments: