Tuesday, January 1, 2013

அரசு கேபிள் தடுக்கப்பட்டது சரிதானா?


                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

இந்தியாவில் வேறெந்த மாநில அரசும் கேபிள் நெட்வொர்க்கை கையில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தமிழகத்தில் ஏற்கெனவே கேபிள் தொழிலில் நிலவிய அரசியல் ஆதிக்கப்போட்டியின் தொடர்ச்சியாகத்தான் கேபிள் தொழில் மாநில அரசின் அதிகாரபிடிக்குள் சென்றது.

முதலில் சூப்பர் டூப்பர் டிவி என்பதாக 1995 - ல் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் கேபிள் தொழிலுக்குள் அதிரடியாய் நுழைந்து, அராஜகமாய் அனைத்து ஆப்ரேட்டர்களிடமும் ரூ5,000 வசூலித்து தன் நிறுவனத்தின் கீழ் இணைத்தார். ஆனால் நிர்வாக அறிவும், தொழில்நுட்பவளர்ச்சிபோக்கும் அவருக்கு இல்லாததால் சூப்பர் டூப்பர் காணாமல் போனது.

அதற்குப் பிறகு 2000 - த்தில் எஸ்.சி வி நிறுவனம் தொழில் போட்டியாளர்களை ஒழித்து அரசியல் பலத்தால் ஆழமாக வேரூன்றியது.

தயாநிதிமாறன் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராயிருந்த போது ஜெயாகுழுமத்தின் புதிய சேனலுக்கு அனுமதி கிடைக்காத ஆத்திரத்தில் கேபிள் தொழிலை அரசுடமையாக்கும் அவசரசட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார் ஜெயலலிதா.

மத்திய அரசின் அதிகாரவரம்பிற்குள் வரும் கேபிள்தொழிலை ஒரு மாநில அரசு, அரசுடமையாக்க முடியாது என்பதால் அதை அன்றைய கவர்னர் பர்னாலா மத்திய அரசுக்கு அனுப்பவில்லை.

அடுத்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க. அக்கட்சியின் குடும்ப அதிகார மையங்களுக்கிடையே நடந்த கொந்தளிப்பு அரசியல் சூழ்நிலை நிர்பந்தத்தால் 2007 செப்டம்பரில் தமிழக அரசு, கேபிள் தொழிலை கைவசம் எடுத்தது.

"கேபிள் தொழிலையே அரசுடமையாக்குகிறேன்" என்ற ஜெயலலிதாவின் நிலைபாட்டிற்கும், 'கேபிள் தொழிலை அரசும் செய்யும்' என்ற கருணாநிதியின் நிலைபாட்டிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

பிறகு அரசியல் காரணங்களால் அன்றைய அரசு கேபிள்கார்ப்பரேஷனின் கைகள் கட்டப்பட்டன, என்பது ஒரு புறமிருக்க, 2008 -ல் மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒழுங்கு முறை ஆணையம் என்ற டிராய் அமைப்பின் தெளிவான உறுதியான நிலைபாடும் அரசு கேபிள் கார்ப்பரேஷன் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணமாகவும் கொள்ளலாம்.


2008ல் டிராய் அமைப்பு என்னென்ன பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியதோ, அதையே இன்றும் அச்சுப்பிறழாமல் உறுதிபடுத்தியுள்ளது.

அதன் சாராம்சம் இது தான்;
மத்திய அமைச்சகங்களோ, மாநில அரசு துறைகளோ, 
மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான நிறுவனங்களோ 
மத்திய மாநில அரசின் சார்பு நிறுவனங்களோ, அல்லது 
மத்திய மாநில அரசுகள் தனியாருடன் இணைந்து கூட்டாகவோ, அல்லது 
மத்திய மாநில அரசு நிதி உதவியில் செயல்பட்டு வரும் எந்த ஒரு நிறுவனமோ 
சேனல் ஒளிபரப்பிலோ, கேபிள் விநியோகத்திலோ ஈடுபட அனுமதிக்கக் கூடாது என்பதே டிராயின் தெளிவான அறிவுறுத்தல். 

இதில் இடம்பெற்றுள்ள வாசகங்களை உற்று நோக்கினால் மத்திய மாநில அரசுகளின் எந்த ஒரு அதிகாரபலமும் அல்லது அதன் அதிகாரச் சாயல் கூட கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்துகின்ற இந்த காட்சி ஊடகத்திற்குள் கால்பதித்துவிடலாகாது என்பதில் டிராய் கொண்டுள்ள தெளிவான - மக்கள் நலன் சார்ந்த பார்வை - புலப்படும்.

இதனால் தான் ஏற்கெனவே சேனல் தொடங்குவதற்கு விண்ணப்பித்திருந்த மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை, குஜராத் அரசு, ஆந்திர அரசு மற்றும் பஞ்சாப் அரசு ஆகியவற்றிக்கு சேனல் தொடங்க அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது.
ஆனால் இதையெல்லாம் அந்தந்த மாநில அரசுகளோ அரசியல் தலைமைகளோ, 'அரசியல் சூழ்ச்சி' என்று குற்றம் சாட்டவில்லை.

ஒரே ஒரு சேனல் நடத்துவதற்கே எந்த அரசுக்கும், அமைச்சகத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அனைத்து சேனல்களையும் கட்டுப்படுத்தும் அசுரபலம் பொருந்திய கேபிள் விநியோகத்திற்கு எப்படி அனுமதி தரப்படும்? என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அரசுகளோ, அரசியல் கட்சிகளோ சேனல்கள் நடத்தக்கூடாது என்பதை உச்சநீதிமன்றமுமே கூட உறுதிபடுத்தியுள்ளது. ஏனெனில், 'அப்படி சேனல் நடத்துவதால் மக்கள் பாரபட்சமற்ற செய்திகளைப் பெறமுடியாது' என்று உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு டிராயின் பரிந்துரைகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றாலும் தமிழக அரசுக்கு பெரும் தலைக்குனிவே ஏற்படும்.

காரணம் என்னவெனில், அரசுத்துறை காட்சி ஊடகத்தில் கால்பதிக்கும் போதோ, அல்லது கட்டுப்படுத்தும் போதோ என்னென்ன அசம்பாவிதங்கள், அராஜகங்கள் நிகழக் கூடும் என 'டிராய்' கணித்ததோ அவை அனைத்துமே தமிழகத்தில் நிதர்சன உண்மையாக்கப்பட்டிருப்பதை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்க பாதிக்கப்பட்ட ஏராளமானாவர்கள் காத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே டிராய்க்கும், காம்படிஷன் கம்யூனிகேஷன் ஆப் இந்தியா அமைப்பிற்கும் அரசுகேபிள் அராஜகம் மற்றும் 'மோனாபலி' தொடர்பான பல புகார்கள் தமிழக கேபிள் ஆப்ரேட்டர் மற்றும் நுகர்வோர் அமைப்பு மூலம் சென்றுள்ளன.

தமிழக அரசின் கேபிள் கார்பரேஷன் தமிழகத்தின் சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் செயல்பட்டு வந்த அனைத்து எம்.எஸ்.ஒக்களையும் தொழிலில் இருந்தே முற்றிலுமாக அப்புறபடுத்தி 'Monopoly' யாக இருப்பது என்பதே முதல் பெரும் தவறாகும். அப்படி அப்புறப்படுத்திய இடங்களையெல்லாம் அரசியல்வாதிகள் அபகரித்துள்ளனர் என்பது அதை விட பெரும் தவறாகும்.

அடுத்ததாக, அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அரசு கேபிளில் சன்நியூஸ், கேப்டன்நியூஸ், மெகாநியூஸ் போன்றவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. கலைஞர் நியூஸ், ராஜ்நியூஸ், ... போன்றவை சில இடங்களில் மட்டுமே காட்டப்படுகின்றன. மேலும் தமிழக அரசை விமர்சிக்கும் சேனல்கள் அவ்வப்போது ஐந்து முக்கிய நகரங்களில் அவ்வப்போது இருட்டடிப்பு செய்யப்படுவதும் சம்மந்தப்பட்ட சேனல் உரிமையாளர்கள் அரசு கேபிள் நிர்வாகத் தலைமையை அணுகி மன்னிப்புகேட்பதோடு சில லட்சங்களோ, சில கோடிகளோ கப்பம் கட்டித்தான் சேனலை இயக்க வேண்டிய சூழல் நிலவுவதும் அரோக்கியமான ஊடகச்சூழலுக்கு உகந்ததல்ல.

காட்சி ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தின் மீதான இந்த கழுத்து நெறிபடும் அவலத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனில் அரசாங்க அதிகாரமையங்களிலிருந்து கேபிள் தொழில் வர்த்தகத்தை அந்நியப்படுத்தி சுதந்திரமான, வெளிப்படையான தொழில் போட்டிக்கு வித்திடச் செய்வது தான் நல்லது.

இதே போல் தனியாரின் தனிப்பெரும் ஆதிக்கம் என்பதும் ஆபத்தானது என்றே 'டிராய்' தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளாட்டும், வளர்ந்து வரும் ஜனநாயகநாடுகளாகட்டும் எல்லா நாடுகளிலுமே அரசு மற்றும் அரசு சார் அமைப்புகளோ, அரசியல்கட்சிகளோ சேனல் தொடங்குவதற்கு தடை என்பதாகவே சட்டங்கள் உள்ளன. எந்த ஒரு தனி நிறுவன தனி நிருவன ஆதிக்கத்தையும் கூட வளரும் ஜனநாயக நாடுகள் அனுமதிப்பதில்லை 
மற்றொரு முக்கியமான விஷயம் கேபிள் விநியோகம் என்பது தொலைப்பேசி, இணையத்தளம், தொலைக்காட்சி என்ற முப்பெரும் அதிகாரம் சம்மந்தப்பட்டது இவை மூன்றுமே மத்திய அரசின் அதிகார பட்டியலில் வருகிறது. இதை மாநில அரசு அதிரடியாக தன் அதிகாரத்திற்குள் எடுத்துக்கொள்ளமுடியாது. 

இந்தியா முழுமைக்கும் எது சரியானதாக இருக்கிறதோ, அதுவே தமிழகத்திற்கும் பொருந்தும். 

இன்றைய டிஜிட்டலைசேஷன் அனுமதியை இது வரை 10க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ளன. இதில் கேபிள் ஆப்ரேட்டர்கள் ஒன்றிணைந்து துவங்கியுள்ள நிறுவனங்களும் உள்ளன. சென்னையில் கேபிள் ஆப்ரேட்டர்கள் துவங்கியுள்ள கூட்டு நிறுவன எம்.எஸ்.ஓ முயற்சியைப்போல தமிழகம் முழுமையிலுமே அரங்கேறியவண்ணம் உள்ளன. 
கேபிள் தொழிலில் இது போன்ற கூட்டுறவு முயற்சிகள் ஊக்கவிக்கப்படவேண்டும். உழுபவனுக்கே நிலம் என்பது போல் தொழில் செய்பவனுக்கே அதன் பலன் கிடைக்கவேண்டும். பணபலம், அரசியல் பலமுள்ளவர்கள் திடிரென்று ஒரு தொழிலிலை அபகரித்துவிடமால் சிறிய முதலீட்டாளர்கள் ஒன்றிணையவேண்டும். அதற்கு 'டிராய்' போன்ற அமபைப்புகள் தகுந்த சட்டபாதுகாப்பையும், தொழில் நெறிமுறைகளையும் உருவாக்கவேண்டும்.

இனி எந்த ஒரு தனி நிறுவனத்தின் வழி வீடுகளுக்கு கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் டிராய் சட்டப்படி 100 இலவச சேனல்களை ரூபாய் 100க்கு தந்தாகவேண்டும். அதற்கு பிறகு கட்டணச் சேனல்கள் தேவை என்றால் தான் கூடுதலாக பணம் செலுத்தவேண்டியிருக்கும். 

எனவே உருவாகப்போகும் தமிழக அரசு கேபிளின் வெற்றிடத்தை இனி எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஆக்கிரமிக்க வாய்ப்பில்லை. அப்படி ஒரு வாய்ப்பை தந்துவிடாமல் கேபிள் ஆப்ரேட்டர்கள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். 

ஆரோக்கியமான, ஜனநாயகமான, சுதந்திரமான தொழில்போட்டிகள் வர்த்தக முயற்சிகள் வரவேற்க்கத்தக்கது. அரசாங்கத்திற்கு எதற்கு வியாபாரம்? அதைச் செய்யத்தான் ஆயிரக்கணக்கில் வியாபாரிகள் இருக்கிறார்களே.. அவர்கள் தடையின்றி வர்த்தகம் செய்ய வழிவகுத்து, முறையாகச் செய்கிறார்களோ என கண்காணித்து, மக்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாக்க வேண்டியதே அரசு பொறுப்பு.

1-1-2013