Friday, August 30, 2013

தன்னிலை இழந்த மம்தா பானர்ஜி!



அந்த டி.வி.ஷோவை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள்...!
அது மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு ஒரு தனியார் தொலைகாட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி. முதலமைச்சர் மம்தா பானார்ஜி மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக விடை தரும் நிகழ்ச்சி. ஏராளமான பொதுமக்களும், மாணவர்களும் இருக்கும் அந்த சபையில் கொல்கத்தா பிரசிடென்சி பல்கலைக்கழக மாணவி தான்யா ஒரு கேள்வி எழுப்புகிறாள்.
ஒரு கார்டூன் தொடர்பாக பல்கலைகழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ரா கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த எதிர்வினையாக அக் கேள்வி எழுப்பப்படுகிறது.

அதற்கு, “அந்த பேராசிரியர் ஒரு சி.பி.எம் ஆதரவாளர்என்று கோபம் கொப்பளிக்க பேசிவிட்டு, அதே சூட்டில் கேள்விகேட்ட அந்த மாணவியையும் சி.பி.எம் ஆதரவாளராகவும், மாவோயிஸ்ட்டாகவும் தான் இருக்க வேண்டும் என உரத்த குரலில் உறுதி செய்தார் மம்தா! அதோடு நில்லாமல் அந்நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவருமே மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாக தெரிவதால், ‘நான் இந் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்என படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு, விருட்டென்று நிகழ்வரங்கிலிருந்து வெளியேறுகிறார் மம்தா!

லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு உயிர்ப்பான நிகழ்வில், ஒரு மாநில முதல்வர் சின்னஞ்சிறு மாணவியின் இயல்பானதொரு கேள்வியில் தன்னிலை இழந்தவராய், தன்னகங்கார ரூபமாய் நடந்து கொண்டதை உலகமே வியந்து பார்த்தது.

ஒரு மாநில மக்களுக்கே தாய் ஸ்தானத்தில் இருந்து அரவணைத்துச் செல்ல வேண்டிய ஒரு தலைவர், ஒன்றுமில்லாத ஒரு அற்ப சொற்ப சம்பவத்தில் ஆதீத உணர்ச்சி வசப்பட்டவராய் வெளிப்பட்டு இன்று அனைவரின் கோபத்திற்கும், கேலிக்கும் ஆளாகி நிற்கிறார் என்றால் அதை என்னவென்பது...!
* பல்கலைக்கழக பேராசிரியரை அதிரடியாக கைது செய்தது.
* கட்சிக்காரர் ஒருவருக்காக முதலமைச்சரே காவல் நிலையத்திற்கு சென்று உத்திரவிட்டது.
* ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை அதிரடியாக மாற்றியது.
* மேற்கு வங்க நூலகங்களில் வாங்கப்பட்டு வந்த பத்திரிகைகளை நிறுத்தியது..,

* செய்தி பத்திரிகைகளையோ, செய்தி சேனல்களையோ திரிணமுள் காங்கிரஸ் கட்சியினர் பார்க்க வேண்டாம் என கட்டளையிட்டது. இதற்கெல்லாம் சிகரமாக,
* மார்க்சிஸ்ட் கட்சிக் காரர்கள் யாரிடமும் திரிணமுள் கட்சியினர் குடும்ப உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என ஆணையிட்டது...
போன்றவை மம்தாபானார்ஜியின் சமீபத்திய நடவடிக்கைகளில் சில!
இந்த அவரது வெளிப்பாடுகள் இயல்பு நிலை கடந்த எக்ஸ்சென்டிரிக்காகஅவரை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்துகிறது.

தன் உணர்வுகளை ஒழுங்கமைத்துக் கொள்ளும் பக்குவம்,
மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்ளும் மனோதிடம்,
பொதுத்தளங்களில் தான் என்னவாக வெளிப்படுகிறோம் என்ற பிரக்ஞை,
தன்னைத்தானே அறிந்து, அதை மற்றவர்களுக்கு உணர்த்தும் ஆளுமைத்திறன், ஆகிய ஒரு தலைவருக்கு இருக்கவேண்டிய அடிப்படைப் பண்புகள் அற்றவராய் மம்தா பானார்ஜி காட்சியளிக்கிறார்.
இதே மேற்குவங்கத்தில் தான் அன்னை தெரஸா வாழ்ந்தார். ஆதரவற்றவர்களை வாழ்விக்க  நிதி திரட்ட ஒரு நிறுவனம் சென்று கையேந்தி நின்றார் தெரஸா.
அந்த கையில் வெறுப்புடன் உமிழ்ந்தார் அந்த நிறுவன முதலாளி! அன்னை பொறுமையாகச் சொன்னார்.

சரி, இது எனக்கு தந்தீர்கள், பசியில் வாடும் குழந்தைகளுக்கு என்ன தரப்போகிறீர்கள்...?” என்றார்.வெறுப்பு உமிழ்ந்த நிறுவனர் வெட்கப்பட்டு மனம் திருந்தி, வருந்தி மன்னிப்பு கேட்டார். நிதியை கொட்டிக் கொடுத்தார்!
-சகிப்புத் தன்மைக்கு வெற்றி.

மகாத்மாகாந்தி ஒரு முறை சென்னைவந்தபோது அப்பாயிண்ட்மென்ட் இல்லாமல் அவரை அதிரடியாகச் சந்தித்த பிரசிடென்சி கல்லூரி விடுதி மாணவன், காந்தியை  மாணவர்களிடையே உறையாட அழைத்தான்.
உடனே தன் நிகழ்ச்சி நிரல் முழுமையும் நிரப்பப்பட்டிருப்பதை பொறுமையாக அம்மாணவனுக்கு விளக்கிச் சொல்லி, “காலை 5 மணிக்கு வரலாமா?” என்றார் காந்தி. அதன்படியே சென்றார். மாணவர்களோடு அன்புடன் அளவளாவினார்!

-மனித நேயத்திற்கு சான்று.
ஒரு முறை முதலமைச்சராக இருந்த அண்ணா, சட்டக் கல்லூரியில் கடும் சர்ச்சை நிலவிய ஒரு சூழலில் நேரடியாக களம் சென்றார். கொந்தளிப்பில் இருந்த மாணவர்களிடம் ஒரு ஸ்டுலின் மீதேறி நின்று அமைதி படுத்தினார்.

- ஆளுமைத் திறனுக்கு எடுத்துக்காட்டு.
இதுபோல் தலைமைப் பண்புகளுக்கு இலக்கணமாக திகழ்ந்த ஆளுமைகள் குறித்த நிறைய சம்பவங்கள்  சொல்லலாம்!

எளிமையானவராகவும், கடும் உழைப்பாளியாகவும் உள்ள மம்தா பானார்ஜி அவர்கள், தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்கள் அவரை மாற்றி அமரவைக்கும் காலம் வெகுவிரைவில் வந்து விடும்!

22.5.2012

No comments: