Friday, August 30, 2013

மலக்குழியில் பலியாகும் மனித உயிர்கள்



கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த இரண்டு கூலி துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மரணமடைந்துள்ளனர்.
சென்னை அருகேயுள்ள திருநின்றவூரில் இது நடந்துள்ளது. சென்றமாதம் இதே போன்ற ஒரு சம்பவம் இதற்கு பக்கத்து ஊரான ஆவடியில் நடந்தது. இது போன்ற சம்பவங்களில் இந்த வருடம் இதுவரை மட்டுமே தமிழகத்தில் சுமார் 15 பேர் இறந்துள்ளனர்.

செய்தியை கேட்கும் போதே நெஞ்சு பதறுகிறது. நாகரீக உலகை குற்ற உணர்வுகளால் வெட்கி தலைகுனிய வைக்கும் சம்பவங்கள் இவை!
சந்திரனுக்கு செயற்கைகோள் அனுப்புகிறோம். இன்னொரு கிரகத்திற்கு விண்வெளி ஆய்வு செய்ய ஏவுகணைகளை அனுப்புகிறோம் அடேங்கப்பா...என்று இன்னும் எவ்வளவோ வியக்கவைக்கும் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் வாழ்கிறோம்..!
ஆனால், இன்னும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய - கொடூர விஷவாயு சாக்கடைக்குள்- மனிதனை இறக்குகிறோம்., அதில் அவன் மரணித்து சடலமாவதை மரத்துப்போன இதயத்துடன் கடந்து போகிறோம்!
தேசத் தந்தை மகாத்மாகாந்தி அன்றே இதை தேசத்தின் அவமானம்என்று சொல்லி குமுறினார். ஆனால் சுதந்திரம் என்பது இந்தியா என்ற நிலப்பரப்புக்குத்தான் கிடைத்தது போலும்! அது 65 ஆண்டுகளாகியும் இந்தியாவில் இந்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சுமார் எட்டு லட்சம் தலித்துகளுக்கு கிடைத்தபாடில்லை. கடையர்களிலும் கடைக்கோடி மனிதர்களாய் கருதப்படும் - கர்மயோகிகளுக்கு நிகராக கருதப்படவேண்டிய- இம் மனிதர்கள் தமிழகத்தில் சக்கிலியர்களாகவும், ஆந்திராவில் ஆதி திராவிடர் எனும் அருந்ததியினராகவும், கேரளாவில் தோட்டி என்றும், கர்நாடகாவில் மதியா என்றும் வட இந்தியாவில் சாவாய் கர்மாச்சாரிஸ் என்றும் அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டம் தீட்டும் போதும், இந்த ஐந்தாண்டு காலகட்ட இறுதியிலாவது இதை முடிவுக்கு கொண்டு வந்தாக வேண்டும் என்று ஏட்டளவிலும், பேச்சளவிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
1993-ல் உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்த மனித அவலத்தை கண்டித்து மாற்றுத்திட்டங்களை அமல்படுத்தக் கோரியது. அதைத் தொடர்ந்து தேசிய ஆலோசனை மையம் துப்புறவு தொழிலாளிகளை இத்தொழிலில் இருந்து விடுவித்து, மறுமலர்ச்சி தரக்கூடிய புதிய வேலைகளில் ஈடுபடுத்துவது குறித்து பல ஆய்வுகள், கருத்தரங்குகளை நடத்தி, சில பரிந்துரைகளையும் மத்திய அரசுக்கு தந்தது.

இவற்றின் விளைவாக கழிவுநீர் தொட்டிகளை சுத்திகரிக்க, பெருகரங்களில் மட்டும் சில நவீன கருவிகள் தருவிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் முற்றிலும் இவை முடிவுக்கு வரவில்லை. காரணம் இக்கருவிகள் எல்லா உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கிடைத்த பாடில்லை.
தேவையில்லாத துறைகளுக்கெல்லாம் - அபரிமிதமான மனித சக்தியை பயன்படுத்த வாய்ப்புள்ள துறைகளுக்கெல்லாம் - நவீன கருவிகளை அறிமுகப்படுத்தி ஏராளமான வேலைவாய்ப்புகளை முடமாக்குகின்ற நமது மத்திய, மாநில அரசாங்கங்கள், மனித உழைப்பை பயன்படுத்தகூடாத இந்த துறைக்கு மட்டும் நவீன கருவிகளை தருவிப்பதில் அதீத காலதாமதத்தையும், தயக்கத்தையும் காட்டி வருவது மன்னிக்க முடியாதது மட்டுமல்ல, மனிதகுல நாகரிகத்திற்கே இழுக்கானதும் கூட!
இன்னும் எத்தனை இன்னுயிர்களை இழக்கப்போகிறோம்!
கூடாது! இனியும் கூடாது!
மனசாட்சியுள்ள சமூகம் இதை மன்னிக்காது!

ஜீவகாருண்யத்தை தூக்கி பிடிக்கும், ஆன்மீகம் செழித்தோங்கிய தேசத்திலே இங்கே மனிதனை சாக்கடைக்குள் இறக்கி சாவதற்கு  துணைபோக மாட்டோம்! இவற்றை வெறும் பார்வையாளனாக இருந்து பார்த்து கொண்டிருப்பதும் பாவமன்றோ!

மே-2012

No comments: