Friday, August 30, 2013

ஐ.மு.கூ மூன்றாண்டு ஆட்சி - ஒரு மதிப்பீடு



 சுதந்திர இந்தியாவின் 65 ஆண்டுகால ஆட்சியில் 12 ஆண்டுகளைத் தவிர்த்த பாக்கியுள்ள 53 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியே நடக்கிறது. அதிலும் 1990கள் வரை சுமார் 39 ஆண்டுகள் நேரு குடும்பத்தின் நேரடி ஆட்சியே!

தற்போதும் «ரு குடும்பத்தினரே நிஜப் பிரதமரான மன்மோகன் சிங்கை நிழல் பிரதமராக இருந்து இயக்கி வருகின்றனர்.

இந்த வகையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்றாண்டுகால ஆட்சி முடிவுற்று நான்காம் ஆண்டில் அது கால் பதித்துள்ளது.

இந்த ஆட்சியில் இதுவரையிலான இந்தியப் பிரதமர்கள் சந்தித்திராத விமர்சனங்களையும், இந்தியாவில் கூட்டணி ஆட்சித் தலைமை சந்தித்திராத தடுமாற்றங்களையும், அவலங்களையும், குற்றச்சாட்டுகளையும் இந்த மூன்றாண்டு கால ஆட்சி அனுபவித்தது!
அதுவும் ஐ.மு.கூவின் ஆரம்பமே தடுமாற்றமானது.

கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தங்களால் பிரதமரின் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரமே கேள்விக்குறியானது. இதில் 2ஜீ ஊழல் விவகாரம் வெடித்தபோது அமைச்சர்கள் நியமனத்தில் தனியார் கார்பரேட் கம்பெனிகள், அரசியல் தரகர்கள் செய்த தலையீடுகள் அம்பலமானது. அதிகாரமற்ற பிரதமர் என்ற விமர்சனத்தை அடிக்கடியும், அதிகமாகவும் மன்மோகன்சிங் சந்தித்தார்!

கூட்டணிகட்சியின் மாநிலத் தலைவர்களுக்குள்ள அதிகாரம் கூட மத்திய ஆட்சித் தலைவரான பிரதமருக்கு இல்லாமல் போனது பல்வேறு சந்தர்பங்களில் வெளிப்பட்டது.

அதுவும் மம்தா பானர்ஜி சில்லறை வர்த்தகத்தில், ‘அந்நிய நிறுவனங்கள் முதலீடாஎன சிலிர்த்தது..., ‘லோக் ஆயூக்தா மாநிலங்களுக்கு வேண்டாம்என்று மறுத்தது, ரயில்வே பட்ஜெட் விவகாரத்தில் அமைச்சரையே மாற்றியது, தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையத்தை ஸ்தம்பிக்க வைத்தது போன்றவற்றில் பிரதமரின் அதிகாரம் பிசுபிசுத்து போனதோடு மன்மோகன் சிங் அதிகாரமில்லாத பிரதமர் என்பது அம்பலப்பட்டது.

மேலும் இந்த ஆட்சி எந்த ஒரு பிரச்சினையிலும் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் திணறும் ஆட்சி என்பது பல்வேறு தருணங்களில் பதிவானது.

குறிப்பாக தெலுங்கானா தனிமாநில விவகாரத்தில் இன்றளவும் மத்திய அரசால் ஒரு தெளிவான நிலை எடுக்க முடியவில்லை. கறுப்பு பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியப் பணத்தை மீட்டெடுக்கும் வீரியமோ, விவேகமோ இல்லை! குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடித்துக் கொண்டே போகிறது...! உறுதியான லோக்பால் மசோதாவை நிறைவேற்றத் தகுந்த நெஞ்சுரம் அறவே இல்லை! மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த முடியவில்லை, இன்று இந்தியாவின் கால்வாசி பிரதேசத்தில் மாவோயிஸ்டுகளின் ஆட்சி கொடிகட்டிப் பறக்கிறது. குண்டு வெடிப்புகளால் இந்திய நகரங்கள்  அடிக்கடி குலுங்குகிறது.

இது ஒரு புறமிருக்க, மத்திய - மாநில அரசுகளுக்கிடையிலான இணக்கம் கேள்விக் குறியாகி வருவது, தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் எதிர்ப்பதில் வெளிப்பட்டது. இது இந்தியாவின் கூட்டாட்சி தர்மத்திற்கே குந்தகமாகிவிடக் கூடிய அபாயத்தை உள்ளடக்கியது.

நிர்வாகத்தில் தான் திறமை இல்லையே தவிர ஊழல் செய்வதில் ஐ.மு.கூட்டணி மந்திரிகள் அதி சாமர்த்திய சாலிகள் என்பது சிதரம்பரம் விவகாரத்தில், 2ஜீ ஊழலில், காமன் வெல்த் குற்றச்சாட்டுகளில் அம்பலப்பட்டது.
நாளுக்குநாள் நலிவைச் சந்தித்து கொண்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி, ரூபாய் மதிப்பின் இறங்குமுகம், பங்கு சந்தை பதற்றம், பணவீக்கம்... போன்றவை ஐ.மு.கூ ஆட்சிக்கு அறைகூவலாக இருக்கின்றன!

உணவு கிடங்குகளில் குவிக்கப்பட்டு விரயமாகும் அபரிமிதமான தானியங்களை பசியால் பரிதவிக்கும் ஏழைகளுக்கு விநியோகிக்கும்படி இரண்டாண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் கூறியபோது அதை அன்று மத்திய அரசு மூர்க்கமாக மறுத்தது. இன்று அழிந்து கொண்டிருக்கும் உணவு தானிய பெருக்கமானது அந்த நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளது. மொத்ததில் ஐ.மு.கூட்டணியின் மூன்றாண்டு ஆட்சியில் பெரிதாக முன்னேற்றம் எதுவுமில்லை! இதனால் அதன் செல்வாக்கும் சரிந்து கொண்டிருக்கிறது! தன்னை சுயபரிசீலனைக்கு ஆட்படுத்தி, மக்கள் நலன் சார்ந்த, ஊழலற்ற வெளிப்படையான, திறமையான நிர்வாகத்தை ஐ.மு.கூ ஆட்சி தரவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


21.5.2012

No comments: