Friday, August 30, 2013

நீதித்துறையில் ஊடுருவும் ஊழல்கள்!


அரசுதுறைகள், சட்டமன்றம், நாடாளுமன்றம், ஊடகங்கள்... என மக்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய அமைப்புகள் மீதான நம்பிக்கைகள் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் சாதாரண குடிமக்களின் கடைசி புகலிடமான நீதித்துறையும் சர்ச்சைக்களாகி வருகின்றது. நீதித்துறை குறித்த அதிருப்தி குரல்கள் நீதிபதிகளிடமிருந்தே அவ்வபோது வெளிப்பட்டுவருகின்றன. மனசாட்சியுள்ள நீதிபதிகள் நீதித்துறை அநீதிகளை களையவும், சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் நீதிபதி செல்லமேஸ்வரர், நீதிபதிகளின் நியமனத்தில் சில அதிருப்திகளை வெளியிட்டுள்ளார்.

நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் போது அவர் வழக்கறிஞராக செயல்பட்டபோது அடைந்த வெற்றிகள், ஈட்டிய வருமானம் போன்றவற்றை கவனத்தில் கொள்வதை விட, நிதி விசயத்தில் அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்! இது தான் மிக முக்கியம். கல்வி, ஆளுமை எல்லாம் கூட அடுத்தபட்சம்என அவர் கூறியுள்ளார்.
அதோடு, “நீதிபதிகள் வானத்தில் இருந்து குதித்தவர்களல்லர்என்றும் அவர் கூறியுள்ளது அர்த்தம் பொதிந்ததாகும்!

ஆம், குற்றம் குறையுள்ள ஒரு சமூக கட்டமைப்பிலிருந்து தான் நீதிபதியும் வருகிறார். எனவே நீதிபதிகளும் குறை நிறைகள் கொண்டவர்களேஎன்பதே இதன் பொருளாக கொள்ளலாம்.
அதிக வருமானத்தில் ஆர்வம் கொண்டு காலமெல்லாம் செயல்பட்ட வழக்கறிஞர்கள், குற்றம் புரிந்தவர்களை சமூக விரோத பணமுதலைகளை, சட்டத்தின் பிடியிலிருந்து வாதத் திறனால் சாமர்த்தியமாக தப்ப வைத்து இதன் மூலம் பெரும் வருமானம் ஈட்டியதால் வெற்றிகரமானவர்களாக பார்க்கப்படலாம்! ஆனால் அப்படிப்பட்டவர்கள்  நீதிபரிபாலனத்தின் உன்னத தன்மையை, பரிசுத்தத்தை காப்பாற்றுவார்களா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே நீதிபதி செல்லமேஷ்வரனின் உள்ளார்ந்த கருத்தாகும்!
நீதித்துறையில் படிப்படியாக வந்துள்ளார் மாவட்ட நீதிபதி, செசன்சு நீதிபதி பொறுப்பேற்று பிறகு உயர்நீதிமன்ற நீதியாகிறவர் ஒரு வகையிலும், வழக்கறிஞராக பல ஆண்டுகள் செயல்பட்டு தன் சட்ட நிபுணத்தை நிருபித்தவர் என்ற வகையில் நேரடியாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதியாகிறவர் மற்றொரு வகையிலும் பொறுப்பேற்கிறார்கள்.

 இதில் இந்த இரண்டு முறைகளிலுமே நிதி விசயத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதி கண்ணியமாக  வெளிப்பட்டாரா என்பதை சீர்தூக்கி பார்த்து நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் நீதித்துறையில் கருப்பு ஆடுகள் களையப்பட வாய்ப்புள்ளது.
ஏனெனில், நீதிபதிகளை மக்கள் இறைவனுக்கு நிகராக கருதுகிறார்கள்! எனவே அவர்கள் தங்களுக்கான சம்பளத்தோடு திருப்தி அடையக்கூடிய பற்றற்ற மனநிலை கொண்டவர்களாக இருந்தால் அதைவிட இந்த நாடும், மக்களும், குடும்பம் மற்றும் அரசு அமைப்புகளும் அடையக் கூடிய பெரிய நன்மை வேறில்லை!
அனைத்து வாய்ப்புகளும் அடைக்கப்பட்ட நிலையில், மக்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். அந்த கடைசி புகலிடமான நீதிமன்றம் கடவுளின் அரசாட்சி நடக்கும் கண்ணியத்தின் திருக்கோயிலாகத்தான் மக்களால் நம்பப்படுகிறது.

ஆனால், சமீபத்திய செய்திகள் மக்கள் மனதில் பெரும் சஞ்சலங்களை உருவாக்கி செய்வதறியாது திக்கற்ற நிலைக்கு மக்களைத் தள்ளியுள்ளது.
நில ஆக்கிரமிப்பில் நீதிபதி தினகரன், ஜாமீன் வழங்க 15 கோடி லஞ்சம் பெற்றதாக நீதிபதி பட்டாபி, அவருக்கு இந்த விசயத்தில் உதவிய மற்றொரு ஓய்வு பெற்ற நீதிபதி...! அதிகமான சொத்து சேர்த்துள்ளதான வழக்கில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், இவர்களுக்கெல்லாம் இருபதாண்டுகளுக்கு முன்னே முன்னோடியாக திகழ்ந்த நீதிபதி வி.இராமசாமி... என்று இந்த பட்டியல் மிக நீளமானது! பலவருடங்களுக்கு முன்பே நீதிபதி எஸ்.பி.பருச்சா, “நீதித்துறையில் 20%த்தினர் ஊழல்வாதிகளாக உள்ளனர்என வருத்தம் தெரிவித்தார்! அதை மேன்மேலும் அதிகரிக்க விடலாகாது!

 நீதித்துறையை லோக்பாலுக்குள் கொண்டு வரவேண்டும். எதற்கெடுத்தாலும் வாய்தா கொடுத்து வழக்கை இழுத்தடிக்கலாகாது!
லட்சக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்க, அரசியல்வாதிகளின் ஜாமீன் வழக்குகளுக்கு முன்னுரிமை தரக்கூடாது. நீதிபதிகள் சொத்துக் கணக்கை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்! நீதித்துறையில் சுதந்திரமும், வெளிப்படைத் தன்மையும் நிலைநாட்டப்பட வேண்டும்! இதுவே மக்களின் எதிர்பார்ப்பு! மதிப்பார்களா?

8.6.2012

No comments: