Friday, August 30, 2013

பெட்ரோல் விலை உயர்வும்! பித்தலாட்ட அரசாங்கமும்!



தாங்க முடியாத விலையேற்றம், பொறுக்க முடியாத சுமை...
என எவ்வளவு தான் மக்கள் புலம்பினாலும், இந்திய அரசு மூன்றிலிருந்து ஆறுமாதத்திற் கொருமுறை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலையை ஏற்றிக் கொண்டே தான் இருக்கிறது...! அப்படி உயர்த்தும் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இங்கே விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டதாக கூறுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குவதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறது. ஆகவே, அரசு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவைகளுக்கு பல கோடி ரூபாய் மானியம் வழங்கி சமாளிப்பதாகவும் தெரிவிக்கிறது!

 ஆனால் யதார்த்தத்தில் உண்மைகள் வேறுபடுகின்றன. கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் உயரும் போதெல்லாம் அதற்கு ஈடுசெய்யும் விதமாக பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதற்கு மாறாக கூடுதலாக சுமார் 57% வரி வருவாயாக அரசு உயர்த்திக் கொள்கிறது.
இந்த வகையில் கலால்வரி, சுங்கவரி, நுழைவுவரி, எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சி வரி... என மத்திய அரசும், விற்பனைவரி, மதிப்பு கூட்டுவரி என்பதாக மாநில அரசுகளுமாக ஏகப்பட்ட வரி வருவாயை கொள்ளை லாபமாக ஈட்டுகின்றன என்பதே உண்மை!

இதனால் தான் பணக்கார நாடான அமெரிக்காவில் கூட பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.48தான்! ஹாங்காங்கில் ரூ.35, மலேசியாவில் ரூ.28, ஆனால் இந்தியாவிலோ ரூ.78.

உண்மையில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் சென்ற ஆண்டு மத்திய அரசு 1,35,500 கோடியும், மாநில அரசுகள் 90,000 கோடியும் லாபங்கள் ஈட்டியுள்ளன! உலகில் வேறெந்த நாடுமே பெட்ரோல் விற்பனையில் இந்தியாவைப் போல் இவ்வளவு அதிக லாப வேட்டையாடவில்லை என்பதே யதார்த்தம்!
அடுத்ததாக, எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக அரசு கூறும் காரணம் அப்பட்டமான பொய் என நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அபரிமிதமாக பல்லாயிரம் கோடி ரூபாய் லாபத்தில் இயங்குவதாக அவற்றின் ஆண்டறிக்கை பறை சாற்றுகின்றன.
எண்ணெய் நிறுவனங்கள் ஒருபோதும் நஷ்டத்தில் இயங்கியதில்லைஎன ரங்கராஜன் கமிட்டியின் ஆய்வறிக்கை உறுதிபடுத்துகிறது.

சரி, அப்படியானால் அரசு நஷ்டம் என எப்படிக் கூறுகிறது என்றால் கச்சா எண்ணெயின் இறக்குமதி விலைக்கும், பெட்ரோலின் விலை நிர்ணயத்திற்குமான இடைவெளியை கணக்காககாட்டி அரசு ஒரு நஷ்ட கணக்கை கூறுகிறது. அதாவது, கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் போது அதிலிருந்து ஒரு சிறுபகுதி  மட்டுமே பெட்ரோலாகிறது. இதைத்தான் அரசு தனக்கு சாதகமாகக் கூறுகிறது. ஆனால் கச்சா எண்ணெயிலிருந்து  பெட்ரோல் தவிர டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், லூப்ரிகேன் ஆயில் தொடங்கி பாலீதீன் பைகள், பிளாஷ்டிக் பொருட்கள், கண்டெய்னர்கள், பேட்டரிகள், டெக்ஸ்டைல் பாப்பின்கள், தெர்மோகோள்... இத்யாதி இத்யாதி... என எண்ணற்ற பல உற்பத்தியாகி, அளப்பரிய லாபத்தை தந்து கொண்டிருப்பதை சாமர்த்தியமாக அரசு மறைத்துவிடுகிறது.

இது குறித்த ஒரு ஆய்வறிக்கையில் பெட்ரோலிய பொருட்கள் என்பவை அரசு கருவூலத்தின் பொற்குவியல்களாக உள்ளன என்பதும், அவற்றுக்கு அரசு தரும் மானியம் என்பது அந்த லாபத்தின¢மதிப்பில் அதிகபட்சம் 5 சதவிகிதத்தை கூட எட்டாது என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

மற்றொரு உண்மை என்னவென்றால், நமது பெட்ரோல் தேவையில் 30 சதவிகிதம் உள் நாட்டிலேயே மிகக் குறைந்த செலவில் உற்பத்தியாகிறது. அதற்கும் மேற்படி சுங்க, காலல்... என சகல வரிகளும் போடப்பட்டு ஒட்டுமொத்தமாக கணக்கிட்டு, கணிசமான லாபத்தை அடைகிறது நம் அரசு.

அரசுத் துறைகளின் லட்சக்கணக்கான அதிகாரிகள், ஊழியர்கள் பயன்படுத்தும் கார்கள், வாகனங்கள் மற்றும் எண்ணிலடங்கா ஊதாரித்தனமான செலவினங்களுக்கு பெட்ரோலிய துறையிலிருந்து பெறப்படும் லாபங்களே ஊற்றுக்கண்ணாக உள்ளன!

உண்மையில் பெட்ரோல், டீசல், மண்ணென்ணெய், சமையல் எரிவாயு போன்றவைகள் தற்போதைய விலையில் பாதி விலையை நிர்ணயித்தாலே கூட அரசின் கஜானாவில் அபரிமிதமான லாபம் தான்! ஆனால் நம் அரசுகளால் இது முடியாது என்பது பெரும் துரதிர்ஷ்டம்.  ஏனெனில் மக்களுக்காக அரசாங்கமில்லை, அரசாங்கத்திற்காகத்தான் மக்கள் என்பதே ஆள்வோரின் எண்ணம்!

20.5.2012

No comments: